Published : 22 Oct 2015 06:27 PM
Last Updated : 22 Oct 2015 06:27 PM

கோலியின் நேர்த்தியான சதம்; தெ.ஆ. அணியின் கடைசி நேர அபாரப் பந்து வீச்சு; இந்தியா 299/8

சென்னையில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்கோர் உண்மையில் ஒரு நேரத்தில் 320 ரன்களை நோக்கியே வந்து கொண்டிருந்தது. ஆனால் ரபாதா, டேல் ஸ்டெய்ன் உள்ளிட்டோர் வீசிய கடைசி ஓவர்களில் ரன்கள் அடிக்க முடியவில்லை, ரபாதா, டேல் ஸ்டெய்ன் ஷார்ட் பிட்ச் பந்துகளை மிகவும் திறம்பட வீசினர், இதனால் தோனி அடித்து ஆட முடியாமல் மட்டையை காற்றில் வீசவே முடிந்தது. மேலும் விராட் கோலி தசைப்பிடிப்புடன் ஆடியதால் அவரால் சரிவர கடைசி நேரத்தில் வித்தியாசமான ஷாட்களை ஆட முடியவில்லை. கடைசி 10 ஓவர்களில் இந்தியா 69 ரன்களை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு எடுத்தது.

விராட் கோலியின் அருமையான சதமாகும் இது. பவுண்டரிகள் அனைத்தும் மிகவும் துல்லியமாக அடிக்கப்பட்டது. பீல்டில் இடைவெளிகளை அபாரமாகப் பயன்படுத்தியதோடு, விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் ஓடுவதிலும் கோலி அசத்தினார். இடைப்பட்ட ஓவர்களில் நல்ல ரன் விகிதத்தை சீராக கோலி, ரஹானே, பிறகு ரெய்னா பராமரித்தனர்.

இந்தியாவின் ஸ்கோரின் விகிதம் வருமாறு:

10 ஓவர்கள் முடிவில் 43/2

20 ஓவர்கள் முடிவில்: 104/2

30 ஓவர்கள் முடிவில்: 160/3

40 ஓவர்கள் முடிவில்: 230/3

50 ஓவர்கள் முடிவில்: 299/8

எனவே இந்த ஸ்கோர் விகிதத்தை பார்க்கும்போது கடந்த 2 போட்டிகள் போல் அல்லாமல் 30-வது 40-வது ஓவர்களுக்கு இடையே 70 ரன்கள் எடுக்கப்பட்டது இன்றைய போட்டியின் சிறப்பம்சம், ஆனால் கடைசி 10 ஓவர்களில் 80 ரன்களாவது வந்திருக்க வேண்டும். ஆனால் ரபாதா, ஸ்டெய்ன் சிறப்பாக வீசினார்கள்.

குறிப்பாக ரபாதாவை தோனியினால் அடிக்கவே முடியவில்லை. அவரை நேர்மையான பேட்டிங் உத்தி மூலமே அடிக்க முடியும் என்பது தெளிவு, கண்மூடித் தனமாக சுற்றினால் அவர் பந்துகள் மட்டைக்கு சிக்கப்போவதில்லை என்பது உறுதி.

கோலியின் அபார இன்னிங்ஸ்: ரஹானே, ரெய்னா அபாரம்

இன்னிங்ஸை ரோஹித் சர்மா பாசிட்டிவ்வாக தொடங்கினார் 21 ரன்களை 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் உதவியுடன் அவர் எடுத்த நிலையில் கிறிஸ் மோரிஸ் பந்தை மிட்விக்கெட்டில் டுபிளேசியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஷிகர் தவண் வேதனை தரும் இன்னிங்ஸும் உடனடியாக முடிவுக்கு வந்தது. ரபாதாவின் லெக் திசை ஷார்ட் பிட்ச் பந்துக்கு டி காக்கின் அதி அற்புதமான கேட்சுக்கு ஒற்றை இலக்க ரன் எண்ணிக்கையில் வெளியேறினார் தவண்.

ரஹானே, கோலி ஒன்றிணைந்தனர். 4-வது ஓவரில் ரோஹித் அடித்த பவுண்டரிக்குப் பிறகு 13-வது ஓவரில் இடது கை சுழற்பந்து வீச்சாளரை விராட் கோலி லாங் ஆஃபில் ஒரு சிக்ஸ் அடிக்க பவுண்டரி வறட்சி முடிவுக்கு வந்தது.

அதன் பிறகு ஸ்டெய்னை கோலி, ரஹானே தலா ஒரு பவுண்டரியை ஒரே ஓவரில் அடித்தனர். பிறகு இம்ரான் தாஹிர் ஷார்ட் பிட்ச் பந்தை டீப் மிட்விக்கெட்டில் புல் ஆட பந்து எல்லைக் கோடு கயிறில் நேராக இறங்கி சிக்ஸ் ஆனது. அதன் பிறகு இடைவெளியில் தள்ளி விட்டு ஒன்று, இரண்டு என்று இன்னிங்சை கட்டமைத்தனர் ரஹானேயும், கோலியும், பிறகு கிறிஸ் மோரிஸை அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை தேர்ட் மேன் மற்றும் பைன் லெக்கில் அடித்தார். இடையே கோலி தனது அரைசதத்தை எடுத்து முடித்தார்.

இந்நிலையில் 35/2 என்ற நிலையிலிருந்து 26-வது ஓவர் முடிவில் 139 என்று உயர்த்திய போது டிவில்லியர்ஸ் மிக அருமையாக ஸ்டெய்னைக் கொண்டு வர 45 ரன்களில் ரஹானே டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

65 ரன்களில் கோலி ஒரு பந்தை தாஹிரிடமே கேட்ச் கொடுத்திருப்பார், ஆனால் பந்து முன்னால் விழுந்ததால் தப்பித்தார். பிறகு ரெய்னா ஒரு பவுண்டரி அடிக்க, ஸ்கோர் மெள்ள முன்னேறியது. இந்நிலையில் ரபாதாவை நேராக ஒரு அரிய, அருமையான சிக்சரை அடித்தார் ரெய்னா.

இதற்கு அடுத்த ஓவரில் பாங்கிசோ பந்தை லாங் ஆன் மேல் சிக்ஸ் அடித்து கோலி சதம் எடுத்தார். சதம் எடுத்த பிறகு ஆக்ரோஷம் காட்டிய கோலி பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் அடித்தார்.

ரெய்னா 46 ரன்களில் இருந்த போது இம்ரான் தாஹிர் பந்தில் ஒரு எளிதான கேட்சை கொடுத்தார், ஆனால் ஆளில்லா பகுதியான நேர் பகுதிக்கு பந்து செல்ல டிவில்லியர்ஸ் முயன்றார் பந்து அவரது கைகள் வழியே தரையைத் தொட்டது. தப்பினார் ரெய்னா, இன்னொரு கேட்சும் ரெய்னாவுக்கு விடப்பட்டது, ஆனால் இது பவுண்டரி அருகே கடினமான வாய்ப்பு. கடைசியில் ரெய்னா 48 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 50 ரன்கள் சேர்த்து கடைசியில் 53 ரன்களுக்கு ஸ்டெய்னின் மீண்டுமொரு ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட்டில் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசி 10 ஓவர்கள் அபாரமாக வீசிய தென் ஆப்பிரிக்கா

இந்நிலையில் கடைசி 10 ஓவர்களை தென் ஆப்பிரிக்கா அபாரமாக வீசினர். இந்த ஓவர்களில் 69 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

கோலி 140 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 138 ரன்கள் எடுத்து ரபாதாவின் அருமையான 49-வது ஓவரில் லெக் திசையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த பந்தே ஹர்பஜன் பவுல்டு ஆனார். தோனி 15 ரன்களில் ஸ்டெய்னிடம் வெளியேறினார். அக்சர் படேல் 4 நாட் அவுட். இந்தியா 299/8 என்று முடிந்தது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ஸ்டெய்ன், ரபாதா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மொத்தம் 119 பந்துகளில் இந்தியா ரன் எதையும் எடுக்கவில்லை. இம்ரான் தாஹிர் இன்று சோபிக்கவில்லை. ஆனால் அவரும் தனது 9 ஓவர்களில் 22 ரன் இல்லாத பந்துகளை வீசினார்.

ரெய்னா, கோலி இணைந்து 18-19 ஓவர்களில் 127 ரன்களைச் சேர்த்தனர்.

தென் ஆப்பிரிக்கா நிச்சயம் இந்த இலக்கில் திருப்தி அடைந்திருக்கும், ஆனால் பிட்ச் இருமுனைகளிலும் இருபுறமும் கொதகொதவென்று உள்ளது. ஸ்பின் பவுலிங் இந்தியாவுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x