Published : 30 Oct 2014 09:27 PM
Last Updated : 30 Oct 2014 09:27 PM

மைக்கேல் கிளார்க்கின் விசித்திர களவியூகத்தால் சர்ச்சை

அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் அமைத்த களவியூகம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய சில களவியூகங்களை ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் அமைத்தார்.

இன்று ஒரு சமயத்தில் மிட்செல் ஜான்சனை அழைத்து நேராக, அதாவது பந்து வீசும் பவுலருக்கு நேராக நிற்க வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், பேட்ஸ்மென்களுக்கு பவுலரின் கை நன்றாகத் தெரிவதற்காகத்தான் 'சைட் ஸ்க்ரீன்' வைக்கப்பட்டுள்ளது.

சைட் ஸ்க்ரீன் நிலை சரியில்லை என்றால் பேட்ஸ்மென் ஓடி வரும் பவுலரையே கூட நிறுத்துவதை நாம் பார்த்திருக்கலாம். இப்படியிருக்க பேட்ஸ்மெனுக்கு பார்வையைத் தொந்தரவு செய்யும் விதமாக நடுவருக்கு நேராக பவுலர் வீசும் திசையில் நேராக ஜான்சனை கிளார்க் நிறுத்தியது இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

பாக். பேட்ஸ்மென் அசார் அலி, ஆடுவதை நிறுத்தி விட்டு புகார் அளிக்கலாமா என்று பார்த்தார். ஆனால் ஏனோ செய்யவில்லை. தொடர்ந்து அவர் விளையாடினார். சதமும் அடித்தார்.

இது குறித்து முன்னாள் ஆஸி. கேப்டன் ஆலன் பார்டர் கூறும்போது, “இந்த களவியூகம் கிரிக்கெட் உணர்வுக்கு எதிரானது” என்றார். மிட் ஆனுக்கு அருகே அவர் சென்ற போது எனக்கு ஒன்றும் தெரியவில்லை, ஆனால் பவுலருக்கு நேராக பீல்டரை நிறுத்துவது என்னைப் பொருத்தவரையில் சரியில்லை என்று அவர் மேலும் சாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x