Published : 16 Mar 2014 01:15 PM
Last Updated : 16 Mar 2014 01:15 PM

டி20 உலகக் கோப்பை: சாதனைத் துளிகள்

ஜெயவர்த்தனா 858

அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் இலங்கையின் ஜெயவர்த்தனா முதலிடத்தில் உள்ளார். 25 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம், 5 அரை சதங்களுடன் 858 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 142 ரன்கள் எடுத்தால் 1,000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். அவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் கெயில் 18 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 6 அரைசதங்களுடன் 664 ரன்கள் எடுத்துள்ளார்.

சதம் கண்டவர்கள்

டி20 உலகக் கோப்பையில் நியூஸிலாந்தின் பிரென்டன் மெக்கல்லம் (123), மே.இ.தீவுகளின் கிறிஸ் கெயில் (117), இந்தியாவின் சுரேஷ் ரெய்னா (101), இலங்கையின் ஜெயவர்த்தனா (100) ஆகிய 4 பேர் மட்டுமே இதுவரை சதமடித்துள்ளனர்.

சிக்ஸர் மன்னன் கெயில்

மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 43 சிக்ஸர்களை விளாசி அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஷேன் வாட்சன் (16 போட்டிகள்), யுவராஜ் சிங் (21 போட்டிகள்) ஆகியோர் தலா 27 சிக்ஸர்களை விளாசியுள்ளனர். இதேபோல் ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் வரிசையிலும் கெயிலே முதலிடத்தில் உள்ளார். அவர் 10 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

கேப்டன்களில் தோனி முதலிடம்

டி20 உலகக் கோப்பையில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற பெருமை தோனியின் வசமுள்ளது. இதுவரை 22 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார் தோனி. டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 5-வது முறையாக கேப்டனாக களமிறங்கும் ஒரே வீரர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.

மலிங்கா 33 விக்கெட்டுகள்

அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் இலங்கையின் மலிங்கா முதலிடத்தில் உள்ளார். 25 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 84.4 ஓவர்களை வீசி 653 ரன்களை விட்டுக்கொடுத்து 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x