Published : 01 Oct 2014 09:39 AM
Last Updated : 01 Oct 2014 09:39 AM
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 12-வது நாளில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளிப் பதக்கம், 3 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 4 பதக்கங்கள் கிடைத்தன.
தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் விகாஸ் கவுடா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான விகாஸ் கவுடா, தனது 2-வது வாய்ப்பில் 62.58 மீ. தூரம் வட்டு எறிந்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளியைக் கைப்பற்றியிருக்கிறார். இதேபிரிவில் ஈரானின் இஷான் ஹடாடி 65.11 தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தையும், கத்தாரின் முகமது அஹமது 61.25 மீ. தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர். கவுடா தனது கடைசி 3 வாய்ப்புகளையும் ஃபவுல் செய்தது குறிப்பிடத்தக்கது.
மகளிர் மிடில் வெயிட் (69-75 கிலோ) எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பூஜா ராணி, சீனாவின் கியான் லீயிடம் தோல்வி ககண்டார். இதனால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த அவர் வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறினார்.
மகளிர் ஃபிளை வெயிட் (48-51) எடைப் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 31 வயதாகும் மேரி கோம் தனது அரையிறுதியில் 3-0 என்ற கணக்கில் வியட்நாமின் லீ தி பாங்கை தோற்கடித்தார்.
சரிதாவுக்கு பாதகமான தீர்ப்பு
மகளிர் 60 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சரிதா தேவி அரையிறுதியில் தோல்வி கண்டு வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறினார். சரிதா தன்னை எதிர்த்து விளையாடிய தென் கொரியாவின் ஜினா பார்க்கைவிட சிறப்பாகே ஆடியுள்ளார். ஆனால் நடுவர் ஜினா பார்க்கிற்கு ஆதரவாக செயல்பட்டு அவரை வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டார்.
போட்டிக்குப் பிறகு செய்தி யாளர்களைச் சந்தித்த சரிதா, தனக்கு எதிராக நடுவர் செயல் பட்டதைக் கூறி அழுதார். பின்னர் அவர் கண்ணீர் மல்க கூறியதாவது: எனது கடின உழைப்பு முழுவதும் வீணாகிவிட்டது. எனக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது. ஆனால் இனி யாருக்கும் இதுபோன்று நடக்கக்கூடாது. ஜினா பார்க்கிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்க முடிவு செய்துவிட்டார்கள் என்றால் பிறகு ஏன் எங்களை மோத வைத்தார்கள்” என்றார்.
நடுவர்கள் தீர்ப்பால் சரிதாவின் கணவரும், முன்னாள் கால்பந்து வீரருமான தோய்பா சிங் கடும் கோபமடைந்தார். போட்டி அலுவலர்களை திட்டிய அவர், “நீங்கள் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். குத்துச்சண்டையை கொன்று விட்டீர்கள்” என்று கத்திக் கொண்டே குத்துச்சண்டை வளையத்துக்குள் நுழைய முயன்றார்கள். அதற்குள் பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்திவிட்டனர்.
இந்தியா-பாக். நாளை மோதல்
ஆடவர் ஹாக்கிப் போட்டியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்தியா, நளை பாகிஸ்தானை சந்திக்கிறது. குரூப் சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்தப் போட்டி இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பாகும்.
நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்தது. இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் 44-வது நிமிடத்தில் அற்புதமாக கோலடித்து வெற்றி தேடித்தந்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தென் கொரியாவுடன் 14 முறை மோதியுள்ள இந்திய அணிக்கு இது 8-வது வெற்றியாகும். ஒட்டுமொத்தத்தில் இரு அணிகளும் 72 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 29-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
2002-ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, அதன்பிறகு இப்போதுதான் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளது. இதில் தங்கப் பதக்கம் வெல்லும்பட்சத்தில் 2016-ல் பிரேசிலின் ரியோவில் நடை பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிடலாம். மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் 6-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவைத் தோற்கடித்தது.
மகளிர் கபடிப் போட்டியில் இந்திய அணி 45-26 என்ற கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. ஆடவர் கபடிப் போட்டியில் இந்திய அணி 23-11 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT