Published : 31 Jan 2014 11:31 AM
Last Updated : 31 Jan 2014 11:31 AM
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் பங்கேற்க இதுவரை உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள வீரர்களுக்கும் முதல்முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக 9 நாடுகளைச் சேர்ந்த 651 வீரர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு 8 அணிகளின் நிர்வாகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த வீரர்களை ஏலம் எடுக்க விரும்பும் அணிகள் அது தொடர்பான விவரங்களை வரும் 3-ம் தேதிக்குள் ஐபிஎல் அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு ஐபிஎல் அமைப்பு ஏலத்துக்கான வீரர்கள் பட்டியலை இறுதி செய்யும். இந்திய வீரர்கள் மணீஷ் பாண்டே, ரஜத் பாட்டியா, இக்பால் அப்துல்லா, டி.சுமன் உள்ளிட்டோரின் பெயர்களும் 651 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இவர்களில் ஏற்கெனவே ஐபிஎல் போட்டியில் விளையாடிய 127 பேர் ஒரு பிரிவாகவும், முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள திறமையான வீரர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த வீரர்களுக்கான அடிப்படை விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை ஆகும். ஐபிஎல் போட்டியில் முதல் சதமடித்த இந்தியரான பாண்டே, இந்த சீசன் ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான ரிஷி தவண் ஆகியோரின் அடிப்படை விலை ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த உன்முக்த் சந்த், சுமன், பாட்டியா, அப்துல்லா ஆகியோரின் அடிப்படை விலை ரூ.30 லட்சம் ஆகும். ஏற்கெனவே ஐபிஎல் போட்டிக்கான ஏலத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள உலகின் முன்னணி வீரர்களின் பட்டியலில் மேலும் 12 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் வருண் ஆரோன், ஹேமங் பதானி, லட்சுமி சுக்லா, அவிஷ்கார் சால்வி, வி.ஆர்.வி. சிங், ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின், இங்கிலாந்தின் சைமன் ஜோன்ஸ், தென் ஆப்பிரிக்காவின் பர்ஹான் பெஹார்டியன், ஹென்றி டேவிட்ஸ், ரோல்ப் வான் டி மெர்வ், டேவிட் வியஸ், மேற்கிந்தியத் தீவுகளின் ஆன்ட்ரே ரஸல் ஆகியோர் இந்த 12 பேர் ஆவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT