Published : 26 Oct 2014 04:01 PM
Last Updated : 26 Oct 2014 04:01 PM
இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேற விரும்பவில்லை. தொடர்ந்து விளையாடவே விரும்பினேன் என மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் மார்லான் சாமுவேல்ஸ் கூறியிருப்பது அந்த அணியின் கேப்டன் டுவைன் பிராவோவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கரீபிய வானொலிக்கு பேட்டியளித்த சாமுவேல்ஸ், “மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தில் நான் உறுப்பினராக இல்லை. அதனால் புதிய ஒப்பந்தம் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிப்பதற்கு முன்னதாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் முழுவதுமாக விளையாடி முடிக்க விரும்பினேன்.
நான் வீரர்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லாததால் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் சங்க தலைவர் வேவல் ஹின்ட்ஸ் எனது சார்பாக வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. அதனால் இந்தியாவுக்கு எதிரான தொடரை முழுவதுமாக விளையாடி முடித்த பிறகு ஊதிய குறைப்பு தொடர்பாக கேள்வியெழுப்ப நான் விரும்பினேன். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டுக்குத்தான் எனது முன்னுரிமை. அதனால் தொடரில் கவனம் செலுத்தவே விரும்பினேன்.
ஊதிய குறைப்பு தொடர்பாக இந்தியத் தொடரின்போது 8 முறை பிராவோ தலைமையில் வீரர்களின் கூட்டம் நடைபெற்றது. ஆனால் நான் இரண்டு முறை மட்டுமே பங்கேற்றேன். பெரும்பாலான கூட்டங்களை தவிர்த்துவிட்டேன் என கூறியுள்ளார்.
பிராவோ பதிலடி
சாமுவேல்ஸின் கருத்தால் அதிர்ச்சியடைந்துள்ள பிராவோ கூறியிருப்பதாவது:
சாமுவேல்ஸ் விருந்து நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார். வீரர்கள்கூட்டத்தின்போது மிகவும் ஆக்ரோஷமாக பேசினார். ஊடகங்களுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியை நான் பார்த்தேன்.
அனைத்து கூட்டங்களுக்கும் அவரை அழைத்தோம். பெரும்பாலான கூட்டங்களில் அவர் பங்கேற்றார். மேலும் அணி வீரர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் துணை நிற்பதாக அவர் மிகத் தெளிவாக தெரிவித்தார். ஆனால் இப்போது அவர் தெரிவித்திருக்கும் கருத்து அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையாக இருந்தால் அதற்கு சாமுவேல்ஸ்தான் பொறுப்பு.
அணியில் உள்ள அனைத்து வீரர்களும் இணைந்தே இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறுவது என முடிவெடுத்தோம். நான் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT