Published : 31 Oct 2013 04:17 PM
Last Updated : 31 Oct 2013 04:17 PM
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வேன் என லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 200-வது டெஸ்ட் போட்டியை விளையாடிவிட்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறவுள்ள அவர் மேலும் கூறியது: மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடர் சிறந்த தொடராகும். அந்த அணி சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளது. அந்த அணிக்கு எதிராக எனது கடைசி இரு டெஸ்ட் போட்டிகளை விளையாடுவதற்காக ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எனது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வேன் என நம்புகிறேன் என்றார்.
ஹரியாணா மாநிலம் ரோடக்கில் நடைபெற்ற ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹரியாணாவைத் தோற்கடித்தது. இதில் சச்சின் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவித்து மும்பையின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். அது தொடர்பாகப் பேசிய அவர், “இந்த மைதானத்தில் ரன் குவிப்பது சவால் நிறைந்தது. இது பௌலர்களுக்கு சாதகமான மைதானம். அதனால் இங்கு ரன் குவிப்பது எளிதல்ல. இங்கு 240 ரன்கள் என்ற இலக்கு மிகக் கடினமானது. மைதானமும் மெதுவாக இருந்ததால், இங்கு 240 ரன்கள் என்ற இலக்கு 280 ரன்களுக்கு நிகரானது. நான் எதிர்பார்த்தது போன்றுதான் இந்த மைதானம் இருந்தது.
ஹரியாணா அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியினர் நல்ல சவாலை அளித்ததோடு, இந்தப் போட்டியை மறக்க முடியாத ஒன்றாக மாற்றினர். இதற்கான பாராட்டும் பெருமையும் ஹரியாணா அணியை சேரும்” என்றார்.
தனது கடைசி உள்ளூர் போட்டியில் விளையாடிய சச்சினின் ஆட்டத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். அதற்காகப் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த சச்சின், “எனது கடைசி ரஞ்சி போட்டிக்காகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்திருந்த ஹரியாணா கிரிக்கெட் சங்கத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று இங்குச் சிறப்பாகக் கடமையாற்றிய பாதுகாவலர்கள் மற்றும் போலீஸாருக்கு நன்றி. ஹரியாணா கிரிக்கெட் சங்கச் செயலர் அனிருத் சௌத்ரி மற்றும் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி” என்றார்.
உங்களுடன் விளையாடிய இளம் பேட்ஸ்மேன்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று சச்சினிடம் கேட்டபோது, “மும்பை பேட் செய்த நேரத்தில் நான் எதிர்முனையில் நின்றபோது, மறுமுனையில் (ஸ்டிரைக்கர் என்ட்) விளையாடிய பேட்ஸ்மேன்களிடம் நான் கண்ட விஷயங்கள் குறித்து அவர்களிடம் பகிர்ந்து கொள்வேன். இது எல்லா நேரங்களிலும் சரியாக இருக்காது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment