Published : 01 Sep 2015 03:58 PM
Last Updated : 01 Sep 2015 03:58 PM

இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி.

கொழும்பு டெஸ்ட் போட்டியின் 5-ம் நாளான இன்று 386 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய இலங்கை 268 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. முன்னதாக 1993-ல் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, இலங்கை மண்ணில் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது விராட் கோலி தலைமையில் 2-1 என்று வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது. மேலும் 2011-ல் மே.இ.தீவுகளில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பிறகு இப்போது டெஸ்ட் தொடரை அயல்நாட்டில் கைப்பற்றியது இந்தியா.

சதம் எடுத்த புஜாரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அஸ்வின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் அபாரமாக விளையாடி 110 ரன்கள் எடுத்து இசாந்த் சர்மாவின் 200-வது டெஸ்ட் விக்கெட்டாக வீழ்ந்தார். அவர் இசாந்த்தின் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இடையில் மேத்யூஸ், அறிமுக விக்கெட் கீப்பர் குசால் பெரேரா (70) இணைந்து மிகச்சிறப்பாக ஆடி 135 ரன்களை 6-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். குசால் பெரேரா 106 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய வீரர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டு கவனம் சிதறினார்.

இதனையடுத்து தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் அஸ்வின் பந்தை கோபத்தில் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் செய்து ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு மேத்யூஸ் 110 ரன்களில் அவுட் ஆக, ஹெராத் இறங்கி 2 பவுண்டரிகள் அடித்தார். அதுவும் யாதவ் பந்து வீச்சில் அதன் பிறகு அஸ்வினின் ஒரே ஓவரில் ஹெராத், தம்மிக பிரசாத் இருவரும் ஆட்டமிழந்தனர். கடைசியில் நுவான் பிரதீப் விக்கெட்டை அமித் மிஸ்ரா வீழ்த்த இலங்கை தேநீர் இடைவேளை முடிந்து எடுக்கப்பட்ட புதிய பந்தில் விறுவிறுவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 268 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் இசாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

வெற்றி பெற்ற இந்திய அணியின் மற்ற வீரர்கள் கரகோஷம் எழுப்ப புஜாரா, இசாந்த் வழிநடத்தி ஓய்வறைக்கு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

புஜாரா அருமையான சதம் எடுக்கவில்லையெனில் இந்த வெற்றி சாத்தியமில்லை. அதே போல் இசாந்த் சர்மா 5/54 என்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இலங்கையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வீசும் சிறந்த பந்து வீச்சாகும்.

முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு 4 மணி நேர ஆட்டத்தை ஒழுங்காக ஆடியிருந்தால் இந்த தொடர் முழுதையும் கைப்பற்றியிருக்கலாம், ஆனால் அன்று சண்டிமால் வேறு வகையான ஆட்டத்தை ஆடினார்.

2-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அபார பந்து வீச்சு, இந்திய பேட்டிங் இணைந்து வெற்றியை ஈட்டித் தந்தது. 3-வது டெஸ்ட் போட்டி புஜாரா, இசாந்த் சர்மா, மற்றும் 2-வது இன்னிங்சில் கோலிக்குப் பிறகு அபார பேட்டிங் செய்த பின்வரிசை வீரர்கள் என்று ஒரு அணியாக இந்த வெற்றி சாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக...

இன்று காலை 67/3 என்று தொடங்கிய இலங்கை அணி சில்வா (27) விக்கெட்டை சடுதியில் இழந்தது யாதவ் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான பவுன்சரை ஹூக் ஆடினார் பந்து சரியாகச் சிக்கவில்லை. ஷார்ட் மிட்விக்கெட்டில் புஜாராவுக்கு சுலபமான கேட்ச் ஆனது. திரிமானே களமிறங்கியவுடன் அவருக்கு அதிகபட்ச நெருக்கடி கொடுத்தார் கோலி. அவர் 47 கடினமான பந்துகளைச் சந்தித்து 12 ரன்களை எடுத்திருந்த நிலையில், அஸ்வின் வீசிய லெக் திசைப் பந்தை ஆட முற்பட்டா, பந்து மட்டையின் முன் விளிம்பில் பட்டு சிலி மிட் ஆஃபில் ராகுலிடம் கேட்ச் ஆனது, அவர் முதலில் விட்டு பின்பு பிடித்தார். நேற்று சண்டிமால் விக்கெட்டின் போதும் ராகுல் கேட்சை தட்டி விட கோலி பிடித்தது நினைவிருக்கலாம்.

அஞ்சேலோ மேத்யூசுக்கு அதிர்ஷ்டம் விளையாடியது இன்று. வந்தவுடனேயே இசாந்த் பந்து ஒன்று உள்ளே வந்து பிறகு சற்றே வெளியே செல்ல எட்ஜ் போல் தெரிந்தது. முறையீடு மறுக்கப்பட்டது. இசாந்தின் பந்து ஒன்றில் மேத்யூஸ் கேட்ச் கொடுத்தார் அது நோபாலானது.

பிறகு அவர் சதம் எடுக்கும் தருணத்தில் அமித் மிஸ்ரா பந்தில் நேராக கால்காப்பில் வாங்கினார், அந்தப் பந்து மிடில் ஸ்டம்பை தாக்கியிருக்கும், ஆனால் நடுவர் லாங் அவுட் இல்லை என்று விசித்திர தீர்ப்பளித்தார்.

அச்சுறுத்திய மேத்யூஸ்-குசால் பெரேரா ஜோடி:

உணவு இடைவேளையின் போது 134/5 என்ற நிலையில் இலங்கை அதன் பிறகு விரைவில் மடிந்து விடும், என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குசால் பெரேராவுடன் இணைந்து மேத்யூஸ் இந்தியாவுக்கு நடுக்கத்தை கொடுத்தார்.

யாதவ் ஓவரில் 2 பவுண்டரிகளுடன் உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியது. அஸ்வினைக் கொண்டுவந்தாலும் பவுண்டரி, மிஸ்ராவைக் கொண்டு வந்தாலும் பவுண்டரி என்று பெரேரா அருமையாக ஆடினார். மிஸ்ராவை தொடர்ந்து மேலேறி வந்து அடித்து ஆடிவந்தார் பெரேரா. 90 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார் பெரேரா. பின்னி பந்து வீச்சு ஒரு கட்டத்துக்குப் பிறகு சோபிக்கவில்லை. அவர் போடும் வேகத்துக்கு ஷார்ட் பிட்ச் பந்தெல்லாம் வீசக்கூடாது, முன்னங்காலை கொண்டு வந்தாலும் அவரை புல் ஷாட் ஆட முடிகிறது.

இப்படிப்பட்ட பின்னி பந்தில்தான் மேத்யூஸ் தனது 7-வது டெஸ்ட் சதத்தை எடுத்து முடித்தார். கட் ஷாட்டில் பின்னியை பாயிண்டில் பவுண்டரி அடித்து சதம் கண்டார். 217 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் சதம் கண்டார் மேத்யூஸ்.

ஒரு புறம் டென்ஷன் அதிகரிக்க தேநீர் இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தது, இலங்கை வெற்றிபெறக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்தது. அப்போதுதான் தேவையில்லாமல் இந்திய வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குசால் பெரேரா 70 ரன்களில் அஸ்வினை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தேநீர் இடைவேளையின் போது இலங்கை 249/6 என்று ஆனது, தேநீர் இடைவேளைக்குப் பிறகு புதிய பந்து எடுக்கப்பட்டது, இதில் இசாந்த் சர்மா தனது 200வது விக்கெட்டை கைப்பற்றினார், அதுவும் இலங்கை கேப்டன் மேத்யூஸின் விக்கெட் அது, இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆகி வெளியேறினார் அவர்.

பெரேரா மேத்யூஸ் ஆட்டமிழந்த பிறகு அஸ்வின் ஒரே ஓவரில் ஹெராத், பிரசாத்தை வீழ்த்தினார், கடைசியில் மிஸ்ரா நுவான் பிரதீப்பை வீழ்த்த இந்திய அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமொரு முறை வரலாறு படைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x