Published : 27 Oct 2014 10:29 AM
Last Updated : 27 Oct 2014 10:29 AM

பாகிஸ்தான் அபார வெற்றி: 221 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 221 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது பாகிஸ்தான்.

இதுதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கண்ட மிகப்பெரிய வெற்றி. முன்னதாக 1995-ல் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்ததே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற பெரிய வெற்றியாக இருந்தது.

துபாயில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 145 ஓவர்களில் 454 ரன்களும், ஆஸ்திரேலியா 103.1 ஓவர்களில் 303 ரன்களும் குவித்தன. முதல் இன்னிங்ஸில் 151 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் தனது 2-வது இன்னிங்ஸில் 78 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 438 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலியா 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 23 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்திருந்தது. கிறிஸ் ரோஜர்ஸ் 23, ஸ்டீவன் ஸ்மித் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

ஸ்மித்-ஜான்சன் போராட்டம்

கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கிறிஸ் ரோஜர்ஸ் 43 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த மிட்செல் மார்ஷ் 3 ரன்களிலும், பிராட் ஹேடின் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர். இதனால் 105 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா.

ஆனால் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித்தும், மிட்செல் ஜான்சனும் 65 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவை மிக மோசமான நிலையில் இருந்து மீட்டனர். ஸ்மித் 55 ரன்களில் ஆட்டமிழக்க, ஜான்சனுடன் இணைந்தார் பீட்டர் சிடில். இந்த ஜோடியும் பாகிஸ்தான் பவுலர்களை சோதித்தது.

13 ஓவர்கள் களத்தில் நின்ற இந்த ஜோடியை யாசிர் ஷா பிரித்தார். 127 பந்துகளைச் சந்தித்த ஜான்சன், 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் சேர்த்து வெளியேற, கடைசி விக்கெட்டாக பீட்டர் சிடில் 15 ரன்களில் வீழ்ந்தார். இதனால் ஆஸ்திரேலியா 91.1 ஓவர்களில் 216 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் 221 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

பாகிஸ்தான் தரப்பில் ஜல்பிகர் பாபர் 5 விக்கெட்டுகளையும், யாசிர் ஷா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த யூனிஸ் கான், ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு…

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது பாகிஸ்தான். அபுதாபியில் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் டிரா செய்தாலே தொடரைக் கைப்பற்றிவிடலாம். கடைசியாக 1994-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது பாகிஸ்தான். அதன்பிறகு கடந்த 20 ஆண்டுகளாக ஆஸி.க்கு எதிரான தொடரை வெல்லாத பாகிஸ்தான், இந்த முறை அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸி.க்கு 9-வது தோல்வி

2008-ல் இருந்து தற்போது வரை ஆசிய மண்ணில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஆஸ்திரேலியா, அதில் 9 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்தியாவிடம் மட்டும் 8 முறை தோற்றிருக்கிறது. 2011-ல் இலங்கைக்கு எதிரான ஒரேயொரு டெஸ்டில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. 4 போட்டிகளில் டிரா செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x