Published : 17 Jul 2016 12:04 PM
Last Updated : 17 Jul 2016 12:04 PM
முதல் உலகப் போர் காரணமாக 1916-ல் ஜெர்மனியில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ரத்தானது. இதையடுத்து 7-வது ஒலிம்பிக் போட்டி பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் 1920-ம் ஆண்டு ஏப்ரல் 20 முதல் செப்டம்பர் 12 வரை நடைபெற்றது. உலகப் போரில் தீவிரமாகச் செயல்பட்ட ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இந்த ஒலிம்பிக்கில்தான் முதல் முறையாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பின்னர் நடைபெற்றதால் அமை தியை வலியுறுத்தி சமாதானப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. முதல் முறையாக ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது. 29 நாடுகளைச் சேர்ந்த 65 வீராங்கனைகள், 2,561 வீரர்கள் என மொத்தம் 2,626 பேர் பங்கேற்றனர்.
22 விளையாட்டுகளில் 154 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் உலகப் போர் பாதிப்பின் காரணமாக பெரிய அளவில் ரசிகர்கள் மைதானத்துக்கு வரவில்லை. அமெரிக்கா 41 தங்கம், 27 வெள்ளி, 27 வெண் கலம் என மொத்தம் 95 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
ஸ்வீடன் 19 தங்கம், 20 வெள்ளி, 25 வெண் கலம் என மொத்தம் 64 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், இங்கிலாந்து 15 தங்கம், 15 வெள்ளி, 13 வெண்கலம் என 43 பதக் கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.
பிரேசிலுக்கு முதல் தங்கம்
இந்த ஒலிம்பிக்கில் பிரேசில் துப்பாக்கி சுடுதல் வீரர் குய்ல்ஹெர்மே தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் பிரேசிலுக்கு முதல் தங்கம் வென்று தந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
முதல் இந்திய அணி
1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் நார்மன் பிரிட்சர் என்ற ஒரு தடகள வீரரை மட்டும் அனுப்பிய இந்தியா 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெல்ஜியம் ஒலிம்பிக் போட்டிக்கு 3 பேர் அடங்கிய தடகள அணியையும், இருவர் அடங்கிய மல்யுத்த அணியையும் அனுப்பியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தி யாவுக்கு பதக்கம் கிடைக்கவில்லை. இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பப்பட்ட முதல் அணி இதுதான்.
வாள்வீச்சு நாயகன்
இந்த ஒலிம்பிக்கில் வாள் சண்டையில் பங்கேற்ற இத்தாலி வீரர் நீடோ நாடி, 5 பிரிவுகளில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒரு ஒலிம்பிக்கில் வாள் சண்டையில் 5 தங்கம் வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 7-வது வயதில் வாள் சண்டையைக் கற்றுக்கொண்ட நீடோ, அடுத்த 11-வது ஆண்டில் ஒலிம்பிக்கில் மிகப்பெரும் சாதனை படைத்தார்.
பாவோ நர்மி
இந்த ஒலிம்பிக்கில் பின்லாந்தின் தடகள வீரரான பாவோ நர்மி 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், 8 ஆயிரம் மீட்டர் தனி நபர் கிராஸ் கன்ட்ரி, அணி பிரிவிலான கிராஸ் கன்ட்ரி ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் வென்றார். இதுதவிர 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் அறிமுக ஒலிம்பிக்கில் தான் பங்கேற்ற 4 பிரிவுகளிலும் வெற்றி கண்டவர் என்ற சாதனையைப் படைத்தார். பாவோவின் சாதனையால், தடகளத்தில் கோலோச்சி வந்த அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT