இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "சிங்கள அரசு கடந்த 30 ஆண்டுகளாக தமிழக கடலோர மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், தாக்குவதும், அவர்களின் உடைமைகளை பறித்துக் கொள்வதும் போன்ற அராஜக செயலை செய்த வண்ணம் உள்ளது.
ஆனால் தற்பொழுது இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம் என்று கூக்குரலிடும் சிங்கள இனவெறி அரசு தமிழக கடலோர மீனவர்கள் மீது தொடுத்த தாக்குதல்களை இன்று வரை நிறுத்திக் கொள்ளவில்லை. அதற்கு காரணம் இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதால்தான்.
தமிழக கடலோர மீனவர்களின் தற்போதைய நிலை, அவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 34 விசைப்படகுகளும், சுமார் 180 மீனவர்களும் சிங்கள அரசினுடைய கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு, இலங்கை சிறையில் குற்றவாளிகளாக அடைக்கப்பட்டு, அதில் பலர் விடுதலை செய்யப்பட்டும் உள்ளனர். இதுவே இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது எடுத்துள்ள மோசமான நடவடிக்கையாகும்.
ஆனால் இதையும் மீறி இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களின் 5 விசைப்படகுகளை இலங்கையின் தேசிய சொத்தாக கருதலாம் என்று அத்துமீறி அறிவித்துள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இச்செயல் இலங்கை அரசினுடைய சர்வாதிகார போக்கிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
WRITE A COMMENT
Be the first person to comment