Published : 22 Oct 2014 11:28 AM
Last Updated : 22 Oct 2014 11:28 AM
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 45.1 ஓவர்களில் 230 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி நியூஸிலாந்தின் மவுண்ட்மான் கேனுய் நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம் 16 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது.
ரோஞ்சி 99 ரன்கள்
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் கப்டில் 5 ரன்களில் வீழ்ந்தார். பின்னர் களமிறங்கிய பிரவுன்லி 24, கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் 16, கோரே ஆண்டர்சன் 0 என அடுத்தடுத்து நடையைக் கட்டினார். ஒருபுறம் லியூக் ரோஞ்சி ரன் சேர்க்க மறுமுனையில், லேத்தம் 29, வெட்டோரி 0, நாதன் மெக்கல்லம் 6, கெய்ல் மில்ஸ் 1 என வேகமாக வெளியேற, 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது நியூஸிலாந்து.
ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஞ்சியும், டிரென்ட் போல்டும் நியூஸிலாந்தை சரிவிலிருந்து மீட்டனர். ரோஞ்சி 57 பந்துகளில் அரைசதமடிக்க, அந்த அணி 42 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. பின்னர் அதிரடியாக ஆடிய ரோஞ்சி 83 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, நியூஸிலாந்தின் இன்னிங்ஸ் 45.1 ஓவர்களில் 230 ரன்களோடு முடிவுக்கு வந்தது. டிரென்ட் போல்ட் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர், மோர்ன் மோர்கல், இம்ரான் தாஹிர், மெக்லாரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டிவில்லியர்ஸ் அதிரடி
231 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் 9 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டூ பிளெஸ்ஸி 8 ரன்களில் வீழ்ந்தார். இதையடுத்து ஆம்லாவுடன் இணைந்தார் ரொசாவ். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரொசாவ் 26 ரன்களிலும், ஆம்லா 38 ரன்களிலும் ஆட்டமிழக்க, 24.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது தென் ஆப்பிரிக்கா.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் டிவில்லியர்ஸும், ஜே.பி.டுமினியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். டிவில்லியர்ஸ் 60 பந்துகளில் அரைசதம் கண்டார். இதன்பிறகு அவர் அதிரடியில் இறங்க, தென் ஆப்பிரிக்கா இலக்கை நெருங்கியது.
மறுமுனையில் 69 பந்துகளில் அரைசதம் கண்ட டுமினி, மில்ஸ் ஓவரில் சிக்ஸரை விரட்டி போட்டியை வெற்றியில் முடித்தார். டிவில்லியர்ஸ் 85 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 89 ரன்களும், டுமினி 72 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த போட்டி வரும் வெள்ளிக்கிழமை மவுண்ட்மான்கேனுய் நகரில் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT