Published : 06 Jan 2017 03:42 PM
Last Updated : 06 Jan 2017 03:42 PM
சிட்னி டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று 465 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்கொண்டு ஆடிவரும் பாகிஸ்தான் ஆட்ட முடிவில்1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.
அசார் அலி 11 ரன்களுடனும் யாசிர் ஷா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், முன்னதாக இடது கை வீரர் ஷர்ஜீல் கான் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 38 பந்துகளில் 40 ரன்கள் விளாசி லயன் பந்தில் ஆட்டமிழந்தார்.
உணவு இடைவேளைக்கு முன்னதான ஆட்டம் முழுதும் மழையால் பாதிக்கப்பட்ட பின்னரும் ஆஸ்திரேலியா ஓவருக்கு 7.53 என்ற ரன் விகிதத்தில் அதிரடியாக ஆடி டிக்ளேர் செய்து வெற்றிக்கான பாதையில் முதல் படியாக ஷர்ஜீல் கான் விக்கெட்டையும் கைப்பற்றியது.
4-ம் நாளான இன்று 271/8 என்று தொடங்கிய பாகிஸ்தான் யூனிஸ் கான் 175 ரன்கள் எடுத்து ஒரு முனையில் ஆட்டமிழக்காமல் இருக்க பாகிஸ்தான் 315 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது. யூனிஸ் கான் 334 பந்துகளைச் சந்தித்து 17 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 175 எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளையும் நேதன் லயன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
223 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தாலும் நவீன கேப்டன்களின் பாணியில் ஸ்மித் மீண்டும் 2-வது இன்னிங்ஸை தொடரவே முடிவெடுத்தார். இதில்தான் மிஸ்பாவின் கேப்டன்சி மீது கடும் சந்தேகம் எழும்படி ஓவருக்கு 7.53 என்ற ரன் விகிதத்தில் ஆஸ்திரேலியா ரன் குவிப்பில் ஈடுபட்டது.
வார்னர் வெளுத்துக் கட்டினார், தனது டி20 பாணி ஆட்டத்தை ஆடி அவர் 23 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் அதிரடி அரைசதம் எடுத்தார், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிவேக அரைசதமாகும் இது. இப்படியே போனால் அதிவேக சத சாதனையையும் அவர் முறியடிப்பார் என்ற நிலையில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 27 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த நிலையில் வஹாப் ரியாஸ் பந்தை நன்றாக ஒதுங்கிக் கொண்டு ஒரு விளாசு விளாச நினைத்து பந்தை கோட்டை விட்டார், பவுல்டு ஆகி வெளியேறினார். யாசிர் ஷா-வை மண்டி போட்டு லாங் ஆனில் அடித்த சிக்ஸரும் மேலேறி வந்து எக்ஸ்ட்ரா கவர் திசையில அடித்த சிக்ஸரும் யாசிர் ஷா-வுக்கு இனி கண்ணை மூடும் போதெல்லாம் காட்சியாக வந்து பயமுறுத்தும் என்றால் மிகையல்ல.
ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் அடித்த 26 பவுண்டரிகள் 5 சிக்சர்களில் யாசிர் ஷா மட்டும் 11 பவுண்டரிகள் 5 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். யாசிர்ஷா 14 ஓவர்களில் 124 ரன்களைக் கொடுத்து ஓவருக்கு 8.85 என்ற விகிதத்தில் சாத்துமுறை வாங்கி 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார்.
வார்னர் ஆட்டமிழந்த பிறகு மெதுவாக ஆடிவந்த உஸ்மான் கவாஜா தன் பங்குக்கு மட்டையை சுழற்றி 5 பவுண்டரி 1 சிக்சருடன் 98 பந்துகளில் 79 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். கேப்டன் ஸ்மித் மட்டுமரியாதை இல்லாத அதிரடி ஆட்டத்தில் 43 பந்துகளில் 8 பவுண்டரிகல் 1 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து யாசிர் ஷாவிடம் அவுட் ஆனார். ஹேண்ட்ஸ்கோம்ப் 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.
மொத்தம் ஆஸ்திரேலியா 32 ஓவர்களில் 241/2 என்று டிக்ளேர் செய்தது, ஓவருக்கு 7.53 என்ற ரன் விகிதம்! 241 ரன்களில் யாசிர் ஷா மட்டும் 124 ரன்களை கொடுத்தார், இவருக்கு ஏன் இவ்வளவு ஓவர்களைக் கொடுத்தார் மிஸ்பா, ஏன் ஆஸ்திரேலியா தனது டிக்ளேரைத் தள்ளிப்போடுமாறு அவர்களை கட்டுப்படுத்தும் களவியூகமோ, பந்து வீச்சு மாற்றமோ செய்யவில்லை என்பது புரியாத புதிர்தான். மொத்தமாகவே கடந்த டெஸ்ட் போட்டியிலிருந்தே மிஸ்பாவின் கேப்டன்சி கேள்விகளை எழுப்புவதாகவே உள்ளது.
நாளை 5-ம் நாள் ஆட்டத்தில் 3-0 கிளீன் ஸ்வீப்பை தவிர்க்க பாகிஸ்தான் கடுமையாக போராட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT