Published : 22 Jul 2016 09:54 AM
Last Updated : 22 Jul 2016 09:54 AM
பள்ளிக்கூடத்தில் பளுதூக்குற விளையாட்டெல்லாம் கிடையா துப்பா என்று சொல்லும் போது சதீஷ்குமாரின் வயது 11. இன்றைக்கு 24 வயதில் இந்தியா சார்பில் ஒலிம்பிக் கில் கலந்து கொள்ளும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரிதான் இவரது சொந்த ஊர். தந்தை சிவலிங்கம், தாய் தெய்வானை. முன்னாள் ராணுவ வீரரான சிவலிங்கமும் பளுதூக்குதல் வீரரே. நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர். சிவலிங்கத்தின் தந்தை ஒரு பீடித்தொழிலாளி. பீடி சுற்றும் தொழில், தனது தலைமுறையோடு ஒழிந்துவிட வேண்டும் என்று முடிவு கட்டிய அவர் இடர்பாடுகளுக்கிடையே சிவலிங்கத்தைப் படிக்க வைத்தார். பள்ளியில் படிக்கும்போதே பளு தூக்குவதில் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. இந்த விளையாட்டுக்கான தினசரித் தேவை புரதமும் கொழுப்பும் நிறைந்த உணவு.
ஆனால் அதற்கு வழியில்லை. என்றாலும் பளு தூக்கும் பயிற்சியை இடைவிடாமல் செய்துகொண்டே இருந்தார் 1980-ம் ஆண்டு காலக்கட்டங்களில் அரசு தரப்பு பயிற்சி மையங்கள் எதும் கிடையாது. இந்த காலத்தில் சிவலிங்கம் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்றார். இதனால் அவரது உடல் கட்டுக்கோப்பாக இருந்தது. அதற்குக் கைமேல் பலனும் கிடைத்தது. ராணுவத்துக்குத் தேர்வு செய்யப்பட்டு 1985 முதல் 2001 வரை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார்.
அப்போது 1986 -ல் தேசிய அளவில் நடந்த பளுதூக்கும் போட்டியில் முதலிடம் பெற்றார். ஆனால் ராணுவப் பணிச் சூழல் காரணமாகப் பளு தூக்கும் போட்டிகளில் அடுத்தடுத்த கட்டங்களை அவரால் எட்ட முடியவில்லை. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது கனவை மூத்த மகன் சதீஷ் குமார் மூலம் நிறைவேற்றிக்கொள்ள விரும்பினார் சிவலிங்கம்.
இதற்காக சதீஷ்குமார் 6-ம் வகுப்பு படிக்கும்போதே பளு தூக்குதல் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். 12 வயது முதல் அவனுக்குப் பயிற்சி அளித்தார். அந்த வயதில் சதீஷ் 15 கிலோ தூக்கியுள்ளார். சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் மாலை பள்ளி முடிவடைந்ததும் உற்சாக மாக வீட்டுக்கு ஓடி வந்த சதீஷ். மாவட்ட அளவில் 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்குதலையும் சேர்த்துள்ளனர் என்று தனது தந்தை யிடம் கூற அப்போது தனது கனவை மகன் மூலம் நிறைவேற்றுவதற்கான பாதையை நோக்கி பயணிக்க தொடங்கினார் சிவலிங்கம்.
தினமும் 5 மணி நேர கடின பயிற்சி களை தனது தந்தையின் மேற்பார்வை யில் மேற்கொள்வார். 2006, 2007 ஆண்டு களில் மாவட்ட அளவில் நடந்த போட்டி களில் 50 கிலோ எடை தூக்கி முதலிடம் பெற்று தனது பயணத்தை தொடங் கினார் சதீஷ். அதன் பின்னர் மாநில அளவில், தென்னிந்திய அளவில், தேசிய அளவில் என்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் குவிக்க தொடங்கினார்.
இதனால் பி.ஏ.வரலாறு 3-ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போதே விளையாட்டு இடஒதுக்கீடு மூலம் தென்னக ரயில்வேயில் எழுத்தர் பணி சதீஷை தேடி வந்தது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பணியில் சேர்ந்தார்.
தொடர்ந்து தென்னக ரெயில்வே அணி வீரராக களத்தில் இறங்கினார். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றார். இதன் மூலம் இந்தியா சார்பில் வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வந்தது. 2010 ம் ஆண்டு பல்கோரியாவிலும், 2011 ம் ஆண்டு தென்கொரியாவிலும் நடந்த ஆசிய போட்டிகளில் கலந்து கொண்டார். 2012-ம் ஆண்டு அபியாவில் நடந்த பளுதூக்கும் போட்டியிலும், 2013 ம் ஆண்டு நடந்த பளுதூக்கும் போட்டியிலும் தங்கம் வென்றார்.
22 வயதில் சதீஷ் குமாரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், ஆடருவக்கான பளு தூக்குதல் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். இந்த போட்டியில் அவர் 328 கிலோ எடையைத் தூக்கி அசத்தினார்.
இப்போட்டியில் தங்கப் பதக்கத்தை கைப்பற்ற சகநாட்டை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடமே சதீஷ் மல்லுக்கு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஸ்னாட்ச் பிரிவின் ஆரம்பம் 142 கிலோ எடையைத் தூக்குவது. இதில் பல நாடுகளின் வீரர்களும் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் எவ்வித சிரமுமின்றி சதீஷ் தூக்கினார். அதேசமயம், ரவிக்குமார் பின்னடைவைச் சந்தித்தார். இருப்பினும், 2-வது வாய்ப்பில் அந்த எடையை அவர் தூக்கினார்.
ஆனால் தனது 2-வது வாய்ப்பில் 146 கிலோ எடையைத் தூக்கி மிரளச் செய்தார் சதீஷ். கடைசி வாய்ப்பில் 147 கிலோ எடையைத் தூக்க முயன்றதில் தோல்வியையே சந்தித்தார் ரவிக்குமார். ஆனால் காமன்வெல்த்தின் சாதனையான 148 கிலோ எடையை முறியடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினார் சதீஷ். அவ்வாறே தனது முயற்சியில் 149 கிலோ எடையைத் தூக்கி புதிய சாதனை படைத்து வரலாற்றுப் பக்கத்தில் இடமும் பிடித்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவிலும் இருவருக் கும் இடையேதான் கடும்போட்டி நிலவி யது. இதில், சதீஷுக்கு முன்னே எடையைத் தூக்க வந்த ரவிக்குமார், முதல் வாய்ப்பில் 175 கிலோ எடையைத் தூக்கினார். அதீத நம்பிக்கையுடன் 178 கிலோ எடைகள் போடப்பட்ட கம்பியைத் தொட்டு சதீஷ் தூக்கியதை தவறானது என நடுவர்கள் அறிவித்தனர்.
ஆனால் சற்றும் மனம் தளராத அவர், மறுவாய்ப்பில் 179 கிலோ எடையைத் தூக்கி ஒட்டு மொத்த அளவில் முதல் இடத்தைப் பிடித்தார், இப்பிரிவின் 2-வது வாய்ப்பில் 185 கிலோ தூக்கி தங்கம் வெல்லலாம் என முயன்ற ரவிக்குமாருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதனால், சதீஷுக்கு தங்கம் உறுதி செய்யப்பட்டது. 2-வது வாய்ப்பில் 186 கிலோ எடையைத் தூக்கி ஒட்டு மொத்த அளவிலான காமன்வெல்த் சாதனையை முறியடிக்க சதீஷ் முயன்றார் ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
இதன் மூலம் காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் தங்கம் வென்ற முதல் தமிழக வீரர் என்ற சாதனையை படைத்தார். போட்டி தொடங்குவதற்கு 43 நாள்களுக்கு முன்னரே டுவிட்டரில் காமன்வெல்த்தில் தங்கம் உறுதி என்று சதீஷ்குமார் தெரிவித்திருந்தார். ஏறக்குறைய ஒன்றரை மாதங்களுக்கு முன்பே தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியும் காட்டினார். இது அவரது மனவலிமை உணர்த்தியது.
“4 ஆண்டு கனவுக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது. நான் தங்கம் வெல்வேன் என்று என் பெற்றோர் முன்கூட்டியே எங்கள் கிராமத்தினரிடம் தெரிவித்தனர். அவர்கள் கனவை நிறைவேற்றி விட்டேன்” என வெற்றி பெற்ற தருணத்தில் தங்க மகனாக சதீஷ் தெரிவித்த வார்த்தைகள்தான் இது.
இதே ஆண்டில் அவருக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியும் கிடைத்தது. மத்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தது. தமிழகத்தில் இருந்து இந்த விருதை பெறும் 9-வது பளு தூக்குதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
ஒலிம்பிக் போட்டி பளுதூக்குதலில் இந்தியாவுக்கு ஆடவர், மகளிர் என இரு பிரிவுக்கும் சேர்த்து 2 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் ஆடவர் பிரிவில் இருந்து கலந்து கொள்ள சதீஷ் தேர்வானார்.
இதற்காக பாட்டியாலாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி தகுதி சுற்றில் சதீஷ் 336 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். ஸ்னாட்ச் பிரிவில் 151 கிலோவும், கிளீன் ஜெர்க் பிரிவில் 185 கிலோவும் தூக்கி அசத்தினார் சதீஷ். இது காமன்வெல்த் போட்டியில் அவர் தூக்கிய எடையைவிட அதிகமானது. ஒலிம்பிக்கில் அவர் மேலும் தனது திறனை அதிகரிக்கம் பட்சத்தில் பதக்க வேட்டை சாத்தியமே.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பலமுறை பளுதூக்கும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட போதி லும் ஒரு முறை மட்டுமே பதக்கம் வெல்ல முடிந்தது. 2002-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மகளிருக் கான 69 கிலோ எடை பிரிவில் இந்தி யாவின் கர்ணம் மல்லேஷ்வரி வெண்கல பதக்கம் கைப்பற்றினார். இன்றளவும் இதுவே ஒலிம்பிக் பளுதூக்குதலில் இந்தியாவின் அதிகபட்ச சாதனையாக உள்ளது. இம்முறை சதீஷ் வரலாற்று சாதனை படைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2006, 2007 ஆண்டுகளில் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் 50 கிலோ எடை தூக்கி முதலிடம் பெற்று தனது பயணத்தை தொடங்கினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT