Published : 13 Oct 2014 02:47 PM
Last Updated : 13 Oct 2014 02:47 PM
தன்னுடைய பேட்டிங் உத்தியில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தியவர் திராவிட், அவர் மூலம் உண்மையான குருவைக் கண்டடையும் தனது தேடலும் முடிந்தது என்று கூறியுள்ளார் கெவின் பீட்டர்சன்.
KP என்ற அவரது சுயசரிதை நூலில் ஸ்பின்னர்களை விளையாடும் உத்திகள் பற்றி திராவிட் தனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் பற்றி பீட்டர்சன் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். அதாவது திராவிட் கற்றுக் கொடுத்த அந்த உத்திகள் தனது பேட்டிங்கில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்று அவர் அதில் கூறியுள்ளார்.
“அவரது பேட்டிங் காலத்தில் ராகுல் திராவிட் இந்தியாவின் நாயக பேட்ஸ்மென், சுழற்பந்து வீச்சைக் கையாள்வதில் அவர் ஒரு மேதை. எங்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள், மின்னஞ்சல்கள் உண்மையான குருவின் தனிப்பட்ட மாஸ்டர் கிளாஸ்.
ராகுல் திராவிட் எனது கிரிக்கெட்டை மேம்படுத்தினார். கிரிக்கெட்டைப் பற்றிய எனது சிந்தனையையும் மாற்றினார். அவரது பெருந்தன்மை என்னை விட்டு ஒருபோதும் நீங்காது” என்று தன் சுயசரிதை நூலில் கூறியுள்ளார் பீட்டர்சன்.
திராவிட் தனது மின்னஞ்சல்களில் பீட்டர்சனை ‘சாம்ப்’ என்று அழைப்பதைப் பெருமையுடன் குறிப்பிடும் பீட்டர்சன், 'KP, நீங்கள் ஒரு சிறந்த வீரர், நீங்கள் பந்தை கடைசி வரை நன்றாப் பார்க்கவேண்டும், உங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். உங்களால் ஸ்பின் விளையாட முடியாது என்று மற்றவர்கள் கூறும்படி வைத்துக் கொள்ளாதீர்கள், நான் உங்கள் ஆட்டத்தைப் பார்த்திருக்கிறேன், உங்களால் முடியும்’என்று திராவிட் அனுப்பிய மின்னஞ்சல் வாசகங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பீட்டர்சன் கூறுகையில், “ஐபில் கிரிக்கெட்டில் நேரம் செல்வழித்தாலும், ராகுல் திராவிடிடம் பேசியதாலும் ஸ்பின் பந்துவீச்சிற்கு எதிரான எனது பேட்டிங் பலபடிகள் முன்னேறியது. இங்கிலாந்தில் ஸ்பின் பவுலர்களை ஆடும் போது பந்து திரும்பும் திசையிலேயே ஆட கற்றுக் கொடுப்பர். ஆனால் இந்தியாவில் சிறந்த வீரர்கள் பந்து ஸ்பின் ஆகும் திசைக்கு எதிர் திசையில் பந்தை ஆடுமாறு கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
ஐபிஎல் கிரிக்கெட் பற்றி பீட்டர்சன்...
ஐபிஎல் கிரிக்கெட்தான் எதிர்காலம், நான் பணம், ஐபிஎல் என்று நாள் முழுதும் உங்களிடம் பேசலாம் ஆனால் நட்புக்காக நான் இலவசமாகக் கூட ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவேன்.
அயல்நாட்டு கிரிக்கெட் வீர்ர்களுடன் நான் எனது நட்பை வளர்த்துக் கொண்டது ஐபிஎல் கிரிக்கெட்டில்தான். இங்கிலாந்து ஓய்வறையில் இது உதவி புரியவில்லை. அங்கு என்னிடம் பெரிய அளவில் நட்பு பாராட்டுபவர்கள் இல்லை.
இந்திய கிரிக்கெட்டில் ஒரு பண்பாடு உள்ளது. 2 விக்கெட்டுகள் போன பிறகு அடுத்த பந்திலேயே கூட மிகப்பெரிய ஷாட்டை ஆடினால் பாராட்டுகிறார்கள். இது கிரிக்கெட் ஆட்டம். பொருளாதாரம் அல்ல. வாழ்வோ, சாவோ அல்ல. ரிஸ்க் எடுங்கள், ஐபிஎல் பார்வையாளர்கள் ஒன்று அல்லது 2 ரன்களை அவ்வளவாக ரசிப்பதில்லை” என்று தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT