Published : 20 Aug 2016 10:43 AM
Last Updated : 20 Aug 2016 10:43 AM
பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனையிடம் போராடி தோல்வியடைந்தார். 2-வது இடம் பிடித்த சிந்து வெள்ளி பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், வில்வித்தை, குத்துச்சண்டை ஆகிய பதக்க வாய்ப்பு உள்ள விளையாட்டுகளில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும் சூழ்நிலையில் 13-வது நாளில்தான் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது.
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இதற்கிடையே மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அபாரமாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கத்தை உறுதி செய்திருந்தார். உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள சிந்து, இறுதிப் போட் டிக்கு முன்னேறியதன் மூலம் கிரிக்கெட் போட்டி கோலோச்சியிருக்கும் 120 கோடி இந்திய மக்களின் பார்வையையும் பாட்மிண்டன் பக்கம் திருப்பினார். இறுதிப் போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கரோலினா மரினை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டம் ஒட்டு மொத்த இந்தியாவையும் டி.வி. முன் அமரவைத்தது.
* இடது கை ஆட்டக்காரரான கரோலினா ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டில் 11-6 என்ற கணக்கில் அவர் முன்னிலை வகித்த போதும் சிந்து போராடினார். நேரம் செல்ல செல்ல சிந்து கை ஓங்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 15-16 என்ற நிலையை எட்டினார். சுமார் 49 ஷாட்களுக்கு பிறகு சிந்து 16-வது புள்ளியை பெற்றார். அடுத்த இரு புள்ளிகளை பெறுவதற்குள் கரோலினா 19 புள்ளிகளை தொட்டார். எனினும் சிந்து கடுமையாக போராடி 19-19 என சமநிலையை எட்டினார். அடுத்த இரு புள்ளிகளை யும் ஆக்ரோஷமாக விளையாடி பெற முதல் செட்டை 21-19 என கைப்பற்றினார் சிந்து.
* 2-வது செட்டில் கரோலினா தாக்குதல் ஆட்டத்தை கையாண் டார். அவர் 10 புள்ளிகளை கடந்த நிலையில் சிந்து இரு புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய கரோலினா இந்த செட்டை 21-12 என்ற செட் கணக்கில் தனதாக்கினார்.
* வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட் பரபரப்பானது. இதிலும் ஆரம்பத்தில் கரோலினா கைதான் ஓங்கியது. அவர் 5-1 என முன்னிலை வகித்தார். மனம் தளராது எதிர்தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்த சிந்து 10-10 என சமநிலையை தொட்டார். தண்ணீர் இடைவேளைக்கு பின் அடுத்தடுத்து புள்ளிகளை கரோலினா குவித்தார். இதனால் சிந்து பின்னடைவை சந்திக்கத் தொடங்கினார். ஆக்ரோஷமாக விளையாடி கரோலினா இந்த செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
* இறுதிப் போட்டியின் முடிவில் கரோலினா 19-21, 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றார். 2-வது இடம் பிடித்த பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்றார்.
* இந்தியாவுக்கு ஒலிம்பிக் பாட்மிண்டனில் கிடைத்த முதல் வெள்ளி பதக்கம் இதுவாகும். ஒலிம்பிக் பாட்மிண்டனில் இதற்கு முன், இந்திய வீராங்கனை சாய்னா நெவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றிருந்ததே பாட்மிண்டனில் இந்தியாவின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது சிந்து வெள்ளி பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
* ரியோ ஒலிம்பிக்கில் ஒரே ஒரு வெண்கலப் பதக்கம் மட்டுமே இந்தியா பெற்றிருந்த நிலையில் சிந்து வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.
* ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற 4-வது இந்தியர் சிந்து ஆவார். இதற்கு முனனர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், விஜயகுமார், சுஷில் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.
* ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5-வது இந்திய வீராங்கனை என்ற பெயருக்கும் சிந்து சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்னர் சாய்னா நெவால், கர்ணம் மல்லேஷ்வரி, மேரி கோம், சாக் ஷி மாலிக் ஆகியோரும் பதக்கங்கள் கைப்பற்றியுள்ளனர்.
சிந்துவின் பின்னணி:
* சிந்துவின் இயற்பெயர் புசர்லா வெங்கட சிந்து. 1995 ஜூலை 5ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். 5 அடி 9 இன்ச் உயரம் கொண்டவர். சிந்து 8 வயதில் இருந்தே பாட்மிண்டன் விளையாடத் தொடங்கினார். 13 வயதில் தொழில்முறை ஆட்டக்காரராக மாறினார். தந்தை ரமணா, தாய் விஜயா ஆகியோர் முன்னாள் வாலிபால் வீரர், வீராங் கனைகள். ரமணா இந்திய வாலிபால் அணிக்காக விளையாடி உள்ளார். மத்திய அரசின் அர்ஜூனா விருதையும் அவர் வென்றுள்ளார். சிந்துவின் முதல் பயிற்சியாளர் மெகபூப் அலி. தற்போது கோபிசந்த் பயிற்சியளிக்கிறார். உலக தர வரிசையில் 10-வது இடத்தில் உள்ளார். தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் சிந்து சரளமாக பேசக்கூடியவர்.
சாதனைகள்:
* 2011ல் இந்தோனேஷிய கோப்பை, 2013 மற்றும் 2016-ல் மலேசியா மாஸ்டர்ஸ் கோப்பை, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் மகாவு ஓபன் ஆகிய தொடர்களை சிந்து வென்றுள்ளார்.
* 2013 மற்றும் 2014ல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றார். 2014 ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
* 2014 மற்றும் 2016-களில் இருமுறை ஊபர் கோப்பையில் வெண்கலம் வென்றார். 2014 காமன்வெல்த் போட்டி களில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண் கலம் வென்றார். 2011 மற்றும் 2012ல் முறையே கிம்செயான் மற்றும் துக்லஸ் போட்டிகளில் தங்கம் வென்றார்.
* 2013ல் அர்ஜுனா விருதையும், 2015ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார் சிந்து.
குவியும் பரிசுகள்:
* ஒலிம்பிக் பாட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ள பி.வி.சிந்துவுக்கு பி.எம்.டபிள்யூ சொகுசு கார், ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று ஹைதராபாத் பாட்மிண்டன் சங்க தலைவர் சாமுடேஸ்வர்நாத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வாழ்த்து
* ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பங்கேற்றதன் மூலம் பி.வி.சிந்து புதிய வரலாறு படைத்துள்ளார் என மோடி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT