Published : 29 Aug 2015 03:52 PM
Last Updated : 29 Aug 2015 03:52 PM

தம்மிக பிரசாத்தின் அருமையான பவுலிங்; கடின உழைப்பினால் விளைந்த புஜாராவின் சதம்: இந்தியா 246/7

கொழும்புவில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் புஜாரா ஒருமுனையில் கடுமையான பொறுமையைக் கடைபிடித்து ஆடி சதம் எடுக்க, தேநீர் இடைவேளையின் போது இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது.

புஜாரா 219 பந்துகளைச் சந்தித்து 9 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தும் மறு முனையில் பேட்ஸ்மென்களை விடவும் நன்றாக ஆடி வரும் மிஸ்ரா 40 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 24 ரன்களை எடுத்தும் களத்தில் உள்ளனர்.

நேற்று கடும் மழை காரணமாக 50/2 என்று முடிந்த படியால் இன்று காலையில் சற்று முன்னே ஆட்டம் தொடங்கியது. தம்மிக பிரசாத் மிக அருமையாக வீசி இந்திய பேட்ஸ்மென்களை கடுமையாக சிக்கலுக்குள்ளாக்கினார்.

விராட் கோலி நேற்றே அவுட் ஆகியிருக்க வேண்டியது, கேட்சை விட்டார் விக்கெட் கீப்பர் பெரேரா. பிறகு ஒரு பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் பீல்டர் கைக்கு செல்லாமல் முன்னால் விழுந்தது, கடைசியில் ஒரு பந்து மட்டையின் விளிம்பை நூலிழையில் தவறவிட்டுச் சென்றது.

விராட் கோலியின் தொடர்ந்த தடுமாற்றம்:

இன்று காலை இறங்கி விராட் கோலி தடுமாறினார். காரணம் தம்மிக பிரசாத்தின் லைன் மற்றும் லெந்த் கோலி, புஜாரா மனதில் கடும் சந்தேகங்களை எழுப்பியது.

இன்று காலை களமிறங்கி பிரசாத்தின் முதல் ஓவரிலேயே இருமுறை தப்பிப் பிழைத்தார். 3-வது பந்து கோலியை ஏமாற்றும் விதமாக உள்ளே வர அவர் எப்போதும் முன்னங்காலை அரைகுறையாக முன்னால் நீட்டுபவர் என்பதால் பந்து நேராக கால்காப்பை தாக்கியது. அருமையான பந்து முழங்கால் அளவில் கால்காப்பில் பட்டது, ஸ்டம்புக்கு நேராக இருந்தது, ஆனால் நடுவர் நைஜல் லாங், நாட் அவுட் என்று பிடிவாதமாக மறுத்தார். இது பிளம்ப் எல்.பி. என்றே ரீப்ளேயில் தெரிந்தது.

அதே ஓவரில் மீண்டும் ஒரு பந்து உள்ளே வந்தது இம்முறையும் கால்காப்பில் வாங்க மிகப்பெரிய முறையீடு எழுந்தது, ஆனால் கொஞ்சம் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இருந்ததால் அவுட் தரப்படவில்லை. ஆனால் முதலில் சரியான அவுட்டை நாட் அவுட் என்று கூறியதால் அதற்கு ஈடாக இதற்கு அவுட் கொடுத்திருந்தால் கோலி கதை முடிந்திருக்கும்.

ஆனாலும் அவர் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிட்சில் புற்கள் இருக்கும் போது வேகப்பந்து வீச்சாளர்களின் இன்ஸ்விங்கரை சிறப்பாக ஆட முதலில் பின்னங்காலை ஆஃப் ஸ்டம்ப் நோக்கி நகர்த்தினால் ஓரளவுக்கு சவுகரியமாக ஆடலாம். அதே வேளையில் வெளியே செல்லும் பந்துகளை கணிப்பதும் சுலபம், ஆனால் டி20 பாணியில் அரைகுறையாக முன்னங்காலை பாதி முன்னால் நீட்டுவதுதான் பிரச்சினை. ஆனால் கோலியோ ஒருமுறை இன்ஸ்விங்கரில் காலில் வாங்கி பலத்த முறையீட்டில் அதிர்ஷ்டவசமாக தப்பியும், இன்னொரு இன்ஸ்விங்கரில் காலில் வாங்குகிறார்.

இதற்குப் பிறகும் சில ஆஃப் ஸ்டம்ப்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆகும் பந்துகளில் மட்டையை மட்டும் தொங்கவிட்டு பீட் ஆனார். கடைசியில் மேத்யூஸ் பந்து வீச வர ஒரு ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை மணிக்கு 125-130 கிமீ வேகத்தில் வீசி வெளியே எடுக்க வழக்கம் போல் அதனை ஆட முயல விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது. 18 ரன்களில் வெளியேறினார். அந்தப் பந்தை ஒழுங்காக ஆடியிருந்தாலும் ரன் வரப்போவதில்லை. பலவீனங்களை அவர் இன்னமும் சரிசெய்து கொள்ளவில்லை.

புஜாரா-ரோஹித் சர்மா-நமன் ஓஜா

மறுமுனையில் புஜாரா உத்தி ரீதியாக சவுகரியமாக ஆடாவிட்டாலும் அருமையான கட்டுக்கோப்புடன் ஆடினார், 31 ரன்களில் 23 பந்துகள் ஆடி ரன்கள் வரவில்லை. அதன் பிறகு தாரிந்து கவுஷல் வந்தார் அவரை 3 அருமையான பவுண்டரிகளை அடித்து சற்றே இறுக்கத்திலிருந்து வெளியே வந்தார் புஜாரா.

ரோஹித் சர்மா இறங்கி, அவ்வப்போது கட்டுப்பாடான ஆக்ரோஷம் காட்டினார், இவரும் மேத்யூஸ் பந்தில் ஒரு எல்.பி. முறையீட்டில் தப்பினார். இதுவும் அவுட் போல்தான் தெரிந்தது. ஆனால் ரோஹித் 3 பவுண்டரிகளையும் ஹெராத்தை ஒரு சிக்சரையும் அடித்து 26 ரன்களில் இருந்த போது, தம்மிக பிரசாத் பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்பில் போதிய பவுன்ஸுடன் சற்றே பிட்சில் நின்று வர மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

புஜாரா, ரோஹித் சர்மா இணைந்து 55 கடினமான ரன்களைச் சேர்த்தனர். இவர் ஆட்டமிழந்த அடுத்த பந்தில் ஸ்டூவர்ட் பின்னி இறங்கியவுடன் அருமையான இன்ஸ்விங்கரை வீசி எல்.பி. செய்தார். பின்னி மீண்டும் தான் இந்த மட்டத்துக்கான வீரர் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

நமன் ஓஜா 21 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார். 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து கவுஷால் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்து தேவையில்லாமல் அவுட் ஆனார். ஆனால் புஜாராவும், இவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 54 ரன்களைச் சேர்த்தனர்.

தேநீர் இடைவேளைக்கு சற்று முன் புஜாரா, ஹெராத் பந்தை மிட் ஆஃபில் தட்டி விட்டு 1 ரன்னுடன் சதம் கண்டார். இது அவரது 7-வது டெஸ்ட் சதம். அருமையான சதம், பொறுமைக்குக் கிடைத்த பரிசு. மேலும் ஒரு முழு முற்றான டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும் இது.

கவாஸ்கர் கூறியது போல் அவரது ஆஃப் ஸ்டம்ப் எங்கு உள்ளது என்பது பற்றி அவருக்கு போதிய தடுப்பாட்ட உத்தி இல்லை. ஆனால் பொறுமை காத்து தனது பார்மை கண்டுபிடித்துக் கொண்டுள்ளார் புஜாரா.

பிரசாத் மீண்டும் பந்து வீச அழைக்கப்பட ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை அஸ்வின்,அரைகுறை மட்டையுடன் ஆடி எட்ஜ் செய்து 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தற்போது ஸ்கோர் 246/7 என்று உள்ளது, புஜாரா 110 ரன்களுடனும், மிஸ்ரா 40 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், இருவரும் இணைந்து இதுவரை 66 ரன்களை 8-வது விக்கெட்டுக்காகச் சேர்த்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x