Published : 11 Feb 2017 03:47 PM
Last Updated : 11 Feb 2017 03:47 PM
செஞ்சூரியனில் நேற்று நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 88 ரன்களில் வீழ்த்தியதன் மூலம் தொடரை 5-0 என்று கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டித் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தது.
இலங்கை கேப்டன் தரங்கா டாஸ் வென்று தவறாக தென் ஆப்பிரிக்காவை முதலில் பேட் செய்ய அழைக்க, டி காக் (109; 87 பந்துகள்), ஆம்லா (154; 134 பந்துகள் 15 பவுண்டரிகள் 5 சிக்சர்) ஆகியோரது அதிரடியில் சிக்கி சின்னாபின்னமானது, இதனால் 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 384 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் குணரத்னே ஆறுதல் சதம் எடுக்க (114 நாட் அவுட்) 296/8 என்று படு தோல்வி அடைந்து 5-0 என்று தோல்வி தழுவியது.
இலங்கைப் பந்து வீச்சு படுமோசமாக அமைய டிகாக், ஆம்லா முதல் விக்கெட்டுக்காக 26 ஓவர்களில் 186 ரன்களைச் சேர்த்தனர். 87 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் குவிண்டன் டி காக் 108 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். டுபிளெசிஸ் 41 ரன்களையும் பெஹார்டீன் அதிரடி 32 ரன்களையும் எடுக்க, அதிரடி மன்னன், கேப்டன் டிவில்லியர்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார், டுமினி 10 ரன்களை எடுக்க இலங்கை தனது மோசமான பந்து வீச்சில் 10 வைடுகள் உட்பட 20 உதிரி ரன்களையும் கொடுத்தது.
ஆம்லா 49 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார், 112 பந்துகளில் சதம் கண்டார். ஆனால் அடுத்த 22 பந்துகளில் 5 சிக்சர்களுடன் மேலும் 54 ரன்களை விளாசி 49-வது ஓவரில் ஸ்கோர் 371ஆக இருந்த போது ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி தொடர் முழுதுமே மோசமாக பீல்ட் செய்தது, கேட்ச்களை விட்டது, மோசமாக பந்து வீசியது. ஆனால் ஓரளவுக்கு பேட்டிங் திறமையை அன்று 368 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது 327 ரன்கள் வரை வந்து வெளிப்படுத்தியிருந்தாலும் நேற்று பேட்டிங்கும் சொதப்பி 14 ஓவர்களில் 82/5 என்று சொதப்பியது. குணரத்னே (114; 117 பந்துகள் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்) பதிரனா (56) ஆகியோர் இணைந்து 93 ரன்களைச் சேர்த்தனர். 199/8 என்பதிலிருந்து குணரத்னே, சுரங்க லக்மல் இணைந்து ஆட்டமிழக்காமல் 9-வது விக்கெட்டுக்காக 97 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் இலக்கு இமாலயம் என்பதால் ஒன்றும் முடியவில்லை.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கிறிஸ் மோரிஸ் அபாரமாக வீசி 10-1-31-4 என்று அசத்தினார். பார்னெல் 2 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு ஒயிட் வாஷ் கொடுத்த தென் ஆப்பிரிக்கா தற்போது இலங்கைக்கும் ஒயிட்வாஷ் கொடுத்துள்ளது இரண்டுமே 5-0. ஆட்டநாயகனாக ஆம்லாவும் தொடர் நாயகனாக டுபிளெசிசும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த ஒயிட்வாஷை அடுத்து தென் ஆப்பிரிக்கா ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்துக்கு உயர்வு பெற்றது. ஆஸ்திரேலியா 2-ம் இடத்துக்கு பின்னடைவு கண்டுள்ளது. இந்திய அணி 4-ம் இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து 3-ம் இடம் பெற்றுள்ளது.
பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 4 வரை நியூஸிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது தென் ஆப்பிரிக்கா, இதில் தென் ஆப்பிரிக்கா குறைந்தது 3-2 என்று வெற்றி பெற்றால் முதலிடத்தை தக்கவைக்கும் அல்லது நியூஸிலாந்து 3-2 என்று வென்றால் ஆஸ்திரேலியாவுக்குக் கீழ் தென் ஆப்பிரிக்கா இறங்கி விடும். ஆனால் தென் ஆப்பிரிக்க அணி 2019 உலகக்கோப்பையைக் குறிவைத்து ஆடி வருவதால் அதிரடி தொடரும் என்றே எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT