Published : 28 Oct 2015 02:57 PM
Last Updated : 28 Oct 2015 02:57 PM
கென்யாவில் நடைபெற்ற நைரோபி சர்வதேச மாரத்தான் ஓட்டத்தில் திடீரென இடையே நுழைந்து 2-வதாக வந்த மோசடி வீரர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது மோசடி மற்றும் ஏமாற்று வேலை தொடர்பான வழக்குகள் தொடரப்படலாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 28-வயது ஜூலியஸ் நஜோகு என்ற வீரர் 42 கிமீ தூரம் ஓடாமல், கடைசி நேரத்தில் ஓட்டத்தின் இடையே புகுந்து 2-வதாக வந்தார். இந்த இடத்துக்கான பரிசுத் தொகை 7,000 டாலர்கள் ஆகும். ஆனால் அவர் செய்த மோசடி அம்பலமாக, கைது செய்யப்பட்டார்.
42 கிமீ ஓடியதற்கான எந்த வித களைப்பும் அவரிடத்தில் தென்படவில்லை, உடம்பில் வியர்வையும் இல்லை. இவர் 42 கிமீ ஓடியிருக்க வாய்ப்பேயில்லை. ஒரு கிமீ தூரம்தான் இவர் ஓடியிருக்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பார்வையாளர்கள் பகுதியில் இருந்த ஜூலியஸ் நஜோகு திடீரென ஓடிக்கொண்டிருந்த வீரர்கள் அணிவரிசையில் கலந்தார். அப்போது 2-வது இடம் பிடிக்க ஓடிக்கொண்டிருந்த ஷத்ரக் கிப்டூ என்ற வீரர் மிகவும் களைப்பாக ஓடிக்கொண்டிருக்க, நஜோகு அவரை முந்தினார்.
ஆனால், இவரது மோசடி வேலை தொலைக்காட்சி பதிவுகள் மூலம் அம்பலமானது. இவர் பந்தயம் நடத்திய அதிகாரிகளிடத்தில் வாதம் புரிந்துள்ளார். தனது ஷூ-வை கழற்றி தான் 42 கிமீ தூரமும் ஓடியதாக சாதித்துள்ளார்.
ஆனால் இவரது வாதங்கள் எதுவும் எடுபடாமல் போக கைது செய்யப்பட்டார்.
2013-ம் ஆண்டு நடைபெற்ற மாராத்தான் ஓட்டத்திலும் இரு வீராங்கனைகள் ஏமாற்ற முயற்சி செய்ததாக தகுதி இழப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT