Published : 07 Mar 2014 11:15 AM
Last Updated : 07 Mar 2014 11:15 AM
சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தமிழகமும் மிசோரமும் மோதுகின்றன.
68-வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், மிசோரம், மகாராஷ்டிரம், ரயில்வே ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் தமிழகம், மிசோரமையும், மாலை 6.15 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதியில் ரயில்வே, மகாராஷ்டிரத்தையும் சந்திக்கின்றன. முதல் அரையிறுதியைப் பொறுத்தவரையில் தமிழக அணிக்கு மிசோரம் கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலிறுதி லீக் சுற்றில் தான் விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்த மிசோரம், தமிழகத்துக்கு எதிராகவும் அதேபோன்று அபாரமாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் தமிழக அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
தமிழக அணிக்கு கேப்டன் சுதாகர், ஸ்டிரைக்கர் ரீகன் ஆகியோர் மிகப்பெரிய பலமாகத் திகழ்கின்றனர். கடந்த போட்டிகளில் மிகச்சிறப்பாக பந்தை பாஸ் செய்து தமிழக அணிக்கு ஏராளமான கோல் வாய்ப்புகளை உருவாக்கித் தந்த சுதாகர் , மிசோரமுக்கு எதிராக சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாபுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சுதாகர் கொடுத்த 3 பாஸ்களையும் கோலாக்கி தமிழகத்துக்கு வெற்றித் தேடித்தந்தார் ஸ்டிரைக்கர் ரீகன். இந்த சந்தோஷ் டிராபியில் இருமுறை ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ள ரீகன், மிசோரமுக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.
நடுகளத்தைப் பொறுத்தவரையில் சாந்தகுமார், சார்லஸ் ஆனந்தராஜ், விக்ரம் பாட்டீல், கார்த்திக் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இவர்களில் ஆனந்தராஜ், கடந்த போட்டிகள் அனைத்திலும் தமிழகத்தின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். தமிழக அணியின் தடுப்பாட்டமும் வலுவாகவே உள்ளது.
மேற்கு வங்கத்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய தமிழக அணியில் கேப்டன் சுதாகர் உள்ளிட்ட 5 பேருக்கு ஓய்வளிக்கப்பட்டபோதும், சிறப்பாக ஆடிய தமிழக அணி கடைசிக் கட்டத்தில் ஒரு கோல் வாங்கி தோல்வி கண்டது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கிடைத்ததால் அவர்கள் இந்த ஆட்டத்தில் புத்துணர்ச்சியோடு விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிசோரமுக்கு எதிரான ஆட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழக அணி ஆரம்பத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெறுவது முக்கியம். அவ்வாறு முன்னிலை பெறும்பட்சத்தில் மிசோரம் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியும். ஒருவேளை தமிழக அணி ஆரம்பத்தில் முன்னிலை பெறமுடியாமல் போனால், முதல் அரைமணி நேரத்தில் மிசோரமையும் கோலடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் ஆக்ரோஷமாக ஆட முயற்சித்து மிசோரம் தவறு செய்ய வாய்ப்புள்ளது. அப்போது கிடைக்கும் பெனால்டி வாய்ப்புகளை பயன்படுத்தி தமிழக அணி வெற்றி பெற முடியும்.
காலிறுதி லீக்கில் 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்ட ஒரே அணியான மிசோரம், தமிழக அணியைவிட வலுவான அணிதான். ஒரு கோல் அடித்துவிட்டாலே தொடர்ந்து கோல் அடிக்க வேண்டும் என்ற உத்தியோடு விளையாடும். மேலும் அந்த அணியின் தடுப்பாட்டக்காரர்களும் முன்னேறி வந்து கோல் அடிக்க முயற்சிப்பதால் அந்த அணியின் பின்களம் பலவீனமாகவே உள்ளது. இதுவே தமிழகத்துக்கு பலமாகும்.
தமிழக பயிற்சியாளர் ரஞ்சித்திடம் கேட்டபோது, “மிசோரமுடனான ஆட்டம் சவாலானதுதான். இரு அணிகளுக்கும் தலா 50 சதவீத வெற்றி வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் சிறப்பாக ஆடும்பட்சத்தில் மிசோரமை வீழ்த்த முடியும். மேலும் தவறு செய்யாமல் பார்த்துக் கொள்வது அவசியம். மிசோரம் அணி முறையான ஆட்டத்தை வெளிப்படுத்த மாட்டார்கள். மேலும் மிக விரைவாக பொறுமையை இழந்துவிடுவார்கள். எனவே நம்பிக்கையோடு ஆடினால் நாம் வெற்றி பெற முடியும். தமிழக வீரர்கள் அனைவரும் முழு உடற்தகுதியுடன் உள்ளனர். இந்தப் போட்டியிலும் 4-5-1 என்ற பார்மட் முறையில்தான் விளையாடுவோம்” என்றார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், 2012 சந்தோஷ் டிராபி போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய தமிழக அணிக்கு பயிற்சியாளராக இருந்தவருமான சபீர் பாஷாவிடம் கேட்டபோது, “மிசோரம் அணி் திறமையான அணிதான். ஆனால் வெல்ல முடியாத அணியல்ல. அவர்கள் ஆக்ரோஷமாக ஆடுவார்கள். ஆனால் முறையான, ஒழுங்கான ஆட்டத்தை அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. அவர்கள் உத்திகள் வகுத்து ஆடமாட்டார்கள். தமிழக அணி சிறப்பாக ஆடும்பட்சத்தில் நிச்சயம் வெற்றி பெற முடியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT