Published : 27 Sep 2013 02:44 PM
Last Updated : 27 Sep 2013 02:44 PM
சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் லயன்ஸ் அணியை தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இதன்மூலம் தனது "ஹோம் கிரவுண்ட்"டான ஜெய்ப்பூரில் தொடர்ச்சியாக 10-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது ராஜஸ்தான். கடந்த ஐபிஎல் போட்டியில் இங்கு நடைபெற்ற 8 லீக் ஆட்டங்களிலும் வெற்றி கண்ட ராஜஸ்தான், இப்போது சாம்பியன்ஸ் லீக்கில் இங்கு நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் வாகை சூடி தனது ஆதிக்கத்தை தொடர்கிறது.
ஜெய்ப்பூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லயன்ஸ் கேப்டன் அல்விரோ பீட்டர்சன், ராஜஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்தார். கேப்டன் ராகுல் திராவிடும், அஜிங்க்ய ரஹானேவும் ராஜஸ்தானின் இன்னிங்ஸை தொடங்கினர். 7 பந்துகளைச் சந்தித்த ரஹானே 1 பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுக்க, பின்னர் வந்த சாம்சன் 12 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ராகுல் திராவிட் 30 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஷேன் வாட்சனும், ஸ்டூவர்ட் பின்னியும் ஜோடி சேர்ந்தனர். அப்போது 10 ஓவர்களில் ராஜஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. வாட்சனும், பின்னியும் அதிரடியில் இறங்க ராஜஸ்தானின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
பங்கிசோ வீசிய 13-வது ஓவரில் வாட்சன் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாச, பின்னி தன் பங்கு ஒரு பவுண்டரியை விரட்டினார். இதனால் அந்த ஓவரின் முடிவில் 105 ரன்களை எட்டியது ராஜஸ்தான். சோட்சோபி வீசிய அடுத்த ஓவரில் வாட்சன் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து பின்னியுடன் இணைந்தார் பிராட் ஹோட்ஜ். பங்கிசோ வீசிய 16-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசிய ஸ்டூவர்ட் பின்னி, அடுத்த ஓவரில் அவுட்டானார். 20 பந்துகளைச் சந்தித்த பின்னி 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து அசோக் மேனரியா களம்புகுந்தார். மறுமுனையில் அதிரடி யாக விளையாடிய பிராட் ஹோட்ஜ், சோஹைல் தன்வீர் வீசிய கடைசி ஓவரில் 2 பவுண்டரிகளையும், 2 சிக்ஸர்களையும் விளாச, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது ராஜஸ்தான். ஹோட்ஜ் 23 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் குவித்தார். இதில் 20 ரன்கள் தன்வீர் வீசிய கடைசி ஓவரில் எடுக்கப்பட்டதாகும்.
முதல் 3 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்த தன்வீர், கடைசி ஓவரில் மட்டும் 21 ரன்களைக் கொடுத்தார். லயன்ஸ் அணியின் பங்கிசோ 4 ஓவர்களில் 52 ரன்களையும், வில்ஜோன் 4 ஓவர்களில் 41 ரன்களையும் வாரி வழங்கினர்.
லயன்ஸ் தோல்வி
பின்னர் ஆடிய லயன்ஸ் அணியில் ஆரம்பத்திலேயே வேகம் காட்டிய டி காக் 10 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களில் வீழ்ந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வான் டெர் டுசான் 14 ரன்களிலும், டெம்பா பவுமா ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டை இழக்கத் தொடங்கியது.
பின்னர் வந்தவர்களில் வில்ஜோன் 24, ஜியன் சைம்ஸ் 3, சோஹைல் தன்வீர் 0 என அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, மறுமுனையில் தனிநபராகப் போராடிய கேப்டன் பீட்டர்சன், டாம்பே பந்துவீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் லயன்ஸின் வெற்றிக் கனவு தகர்ந்தது. 28 பந்துகளைச் சந்தித்த பீட்டர்சன் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார்.
பின்வரிசையில் சோலிகைல் 21 ரன்களிலும், பிரிட்டோரியஸ் 19 ரன்களிலும் வெளியேற, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது லயன்ஸ். இதனால் ராஜஸ்தான் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
ராஜஸ்தான் தரப்பில் 41 வயதான பிரவீண் டாம்பே 3 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதுதான் டி20 போட்டியில் பிரவீணின் சிறந்து பந்துவீச்சு.
இதுவரை இரு ஆட்டங்களில் விளையாடியுள்ள ராஜஸ்தான், அந்த இரண்டிலும் வெற்றி கண்டுள்ளது.
பிரவீண் டாம்பே நெகிழ்ச்சி
லயன்ஸ் அணிக்கெதிராக 4 விக்கெட் டுகளை வீழ்த்திய ராஜஸ்தான் வீரர் பிரவீண் டாம்பே கூறுகையில், "எப்போதுமே நம்முடைய அணி வெற்றி பெறும்போது அது நமக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும். நான் இப்போது ராஜஸ்தான் அணிக்கு வெற்றி தேடித்தந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதுதான் என்றாலும், பல்வேறு வகையான பந்துவீச்சை கையாள்வதோடு, துல்லியமாக ஸ்டெம்பை நோக்கி பந்தை வீசும்போது விக்கெட் எடுக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். நான் நினைத்தபடி துல்லியமாக பந்துவீசியதால் விக்கெட் எடுக்க முடிந்தது. இதுபோன்ற ஆடு களங்களில் பல்வேறு வகையான பந்துவீச்சை கையாள்வது முக்கியமானது என்றார். மும்பையைச் சேர்ந்தவரான டாம்பேவிடம், 41 வயதிலும் மும்பை அணிக்காக விளையாட முடியும் என்று நம்பினீர்களா என்று கேட்ட போது, "நான் வயதைப் பற்றி சிந்திப்பதில்லை. எனது ஆட்டத்திறன் குறித்து மட்டுமே சிந்திக்கிறேன்.
ராஜஸ்தான் அணி நிர்வாகம்கூட எனது ஆட்டத்திறனை வைத்துதான் அந்த அணிக்கு என்னை தேர்வு செய்தது. அந்த அணியினர் எனது வயதைப் பார்க்கவில்லை. கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான் எனது வேலை. வயது உள்ளிட்ட மற்ற விஷயங்களைப் பற்றி நான் நினைப்பதில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT