Published : 02 Jun 2016 08:08 PM
Last Updated : 02 Jun 2016 08:08 PM

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல சீரான முறையில் ஆட வேண்டும்: தோனி

2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல சீரான முறையில் ஆடுவது அவசியம் என்று இந்திய ஒருநாள், டி20 அணி கேப்டன் தோனி கூறியுள்ளார்.

ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரை 8 நாடுகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை தோனி தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தோனி 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி குறித்து ஐசிசி இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

2013-ம் ஆண்டு கோப்பையை வென்ற வகையில் இந்தத் தொடர் எவ்வளவு தீவிரமானது என்பதை அறிந்திருக்கிறோம். எனவே அடுத்த ஆண்டு இந்த நிலையில் மாற்றமிருக்கும் என்று நாங்கள் கற்பனை செய்யவில்லை, தீவிரம் தீவிரமாகவே இருக்கும் என்பது உறுதி.

இந்தத் தொடரில் நம் பிரிவில் உள்ள மற்ற அணிகள் பற்றி கவலையில்லை. அல்லது அரையிறுதியில் நம்மை எதிர்கொள்ளும் அணி எது, இறுதிப்போட்டியில் எந்த அணி எதிர்கொள்ளும் என்பதும் கவலையில்லை. குறைந்த கால அவகாசமே உள்ளது, எனவே வெற்றிக்கு சீராக ஆடுவதுதான் கைகொடுக்கும். ஒவ்வொரு முறை களம் காணும்போதும் நம் ஆட்டத்தின் உச்சத்தில் நாம் செயல்பட வேண்டும்.

அங்கு தவறுக்கு இடமே இல்லை. மற்ற ஐசிசி கிரிக்கெட் தொடர்கள் போலவே இந்த சாம்பியன்ஸ் டிராபியும் நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. நானும் எனது அணியும் இம்முறையும் கடந்த முறை போல் ரசிகர்களின் பேராதரவை எதிர்நோக்குகிறோம். 2013-ம் ஆண்டு கோப்பையை வெல்ல ரசிகர்களின் ஆதரவும் ஒரு காரணி ஆகும்” என்றார்.

பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளும் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் நியூஸிலாந்து இங்கிலாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஜூன் 4-ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் மோதுகின்றன.

மே.இ.தீவுகள் இந்தத் தொடருக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x