Published : 30 May 2017 07:21 PM
Last Updated : 30 May 2017 07:21 PM

தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா அபாரம்: வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 324/7

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்துள்ளது.

கோலி, யுவராஜ் சிங், தோனி ஆகியோர் ஆடாமலேயே பெரிய ரன் எண்ணிக்கையை இந்தியா எட்ட முக்கியக் காரணம் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது அசத்தல் பேட்டிங்கே.

வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ரோஹித் சர்மா 1 ரன்னில் ரூபல் ஹுசைன் பந்தில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். ஷார்ட் ஆஃப் லெந்த் பந்து, ஆஃப் ஸ்டம்புக்கு மிகவும் வெளியே சென்ற பந்து, ஆஃப் திசையில் அடித்து ஆட நினைத்தார், உடலுக்கு நன்கு தள்ளி இந்தப் பந்து சென்றதோடு எதிர்பார்த்ததை விட மட்டைக்கு மெதுவாக வர உள்விளிம்பில் பட்டு ஸ்டம்புகளைத் தொந்தரவு செய்தது.

அஜிங்கிய ரஹானே 11 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார், ஆனால் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய இடது கை வீச்சாளருக்குரிய ஆஃப் ஸ்டம்ப் பந்தை டிரைவ் ஆட முயன்றார் ஆனால் சரியாக அவர் அதை கனெக்ட் செய்ய முடியவில்லை இவரும் மட்டை உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார்.

தவண், தினேஷ் கார்த்திக் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 100 ரன்களைச் சேர்த்தன, ஷிகர் தவண் எச்சரிக்கையுடன் ஆடி கடைசியில் அடித்து ஆடும் முயற்சியில் 67 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கேதர் ஜாதவ் தனக்கேயுரிய முறையில் தைரியமாக ஆடினார். அவர் 38 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் சுன்சாமுல் இஸ்லாம் பந்தில் பவுல்டு ஆனார். ஆனால் அந்த சிக்ஸ் திடீரென எங்கிருந்தோ வந்தது என்றே கூற வேண்டும். கார்த்திக்கும், ஜாதவ்வும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 10 ஓவர்களில் 75 ரன்களைச் சேர்த்தனர்.

தினேஷ் கார்த்திக் தொடக்கத்தில் பதற்றமடைந்தவர் போல் ஆடினார், ஆனால் அதன் பிறகு அருமையான சில புல் ஷாட்கள், கட் ஷாட்கள், டிரைவ்கள் என்று அசத்தி 77 பந்துகலில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 94 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு அவுட் ஆனார்.

கார்த்திக் அவுட் ஆகும் போது ஸ்கோர் 35 ஓவர்கள் முடிவில் 208/5 என்று இருந்தது. ரவீந்திர ஜடேஜா 36 பந்துகளில் ஒரேயொரு மிகப்பெரிய சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அஸ்வின் 5 ரன்களில் வெளியேறினார்.

சுமார் 17 ஓவர்கள் இருந்த போது இறங்கிய ஹர்திக் பாண்டியா தனது அதிரடி ஆட்டம் மூலம் 54 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 80 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தை பாண்டியா லாங் ஆனில் அடித்த சிக்ஸ் எம்.எஸ்.தோனியை பெருமையடையச் செய்திருக்கும்படியான ஷாட்.

கடைசி 15 ஓவர்களில் 116 ரன்கள் எடுக்கப்பட்டது, தோனி, யுவராஜ், கோலி இறங்கத் தேவையில்லாமலேயே இந்தியா 324 ரன்களை குவித்தது. தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x