Published : 08 Dec 2013 12:00 AM
Last Updated : 08 Dec 2013 12:00 AM
இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் போட்டியில் 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்திய அணிக்கு 2-வது போட்டி வாழ்வா, சாவா ஆட்டமாகும். இந்தப் போட்டியில் இந்தியா தோற்குமானால், இந்தத் தொடர் தென் ஆப்பிரிக்கா வசமாகிவிடும். அதனால் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
அதேநேரத்தில் முதல் போட்டியில் அபார வெற்றி கண்ட தென் ஆப்பிரிக்கா, இந்தப் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. முதல் போட்டியில் இந்தியாவின் பேட்டிங், பௌலிங் என இரண்டுமே எடுபடவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே ஜொலித்தது.
சாம்பியன்ஸ் டிராபி உள்பட 6 ஒருநாள் தொடர்களில் தொடர்ச்சியாக வாகை சூடிய இந்திய அணியின் பேட்டிங், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் எடுபடவில்லை. கேப்டன் தோனியைத் (65 ரன்கள்) தவிர வேறு யாரும் அரை சதமடிக்கவில்லை. எனவே இன்றைய போட்டியில் ரோஹித், தவண், கோலி ஆகியோரின் ஆட்டத்தைப் பொறுத்தே இந்தியாவின் வெற்றி அமையும். யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகின்றனர். எனினும் பேட்டிங் வரிசையில் மாற்றமிருக்காது என தெரிகிறது.
உமேஷுக்கு வாய்ப்பு
பந்துவீச்சில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. புவனேஸ்வர் குமார், மோஹித் சர்மா ஆகியோரின் பந்துவீச்சில் வேகம் இல்லாததால், அவர்களுடைய பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அதனால் அவர்கள் இருவரும் நீக்கப்பட்டு உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் எந்த மாற்றமும் இருக்காது.
தென் ஆப்பிரிக்க அணியில் எவ்வித மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. குயின்டன் டி காக், ஆம்லா, டிவில்லியர்ஸ், டுமினி ஆகியோரின் அதிரடி இந்த போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சில் ஸ்டெயின், மோர்கல், சோட்சோபி, மெக்லாரன், பர்னெல், காலிஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ஒருவேளை சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் இடம்பெற்றால், வேயன் பர்னெல் நீக்கப்படலாம். கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் ஸ்டெயின் கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டர்பன் மைதானம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கும். ஆனாலும் நாங்கள் அவர்களை ரன் குவிக்க விடமாட்டோம் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.
இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, அம்பட்டி ராயுடு, அஜிங்க்ய ரஹானே.
தென் ஆப்பிரிக்கா: டிவில்லியர்ஸ் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஜே.பி.டுமினி, இம்ரான் தாஹிர், ஜாக்ஸ் காலிஸ், ரியான் மெக்லாரன், டேவிட் மில்லர், மோர்ன் மோர்கல், வேயன் பர்னெல், வெர்னான் பிலாண்டர், கிரீம் ஸ்மித், டேல் ஸ்டெயின், லான்வாபோ சோட்சோபி. -பிடிஐ.
போட்டி நேரம்: மதியம் 1.30
நேரடி ஒளிபரப்பு: டென் கிரிக்கெட், தூர்தர்ஷன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT