Published : 25 Feb 2014 11:23 AM
Last Updated : 25 Feb 2014 11:23 AM

ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் இன்று தொடங்குகிறது. 12-வது ஆண்டாக நடைபெறும் இப்போட்டியில் ஆசியாவைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. மார்ச் 8-ம் தேதி வரை இப்போட்டி நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதுகின்றன. நாளை இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

வங்கதேசத்தின் பதுல்லா, மிர்பூர் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. 10 லீக் ஆட்டங்களும், ஒரு இறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும்.

இப்போட்டிகள் அனைத்தும் பகல் இரவாக நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பாகின்றன.

இந்தியாவின் நிலை

காயம் காரணமாக இப்போட்டியில் கேப்டன் தோனி விளையாடவில்லை. விராட் கோலி இந்திய அணிக்கு தலைமை வகித்துள்ளார். தோனி, யுவராஜ் சிங், ரெய்னா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறாதது இந்திய அணிக்கு சிறிது பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஆசிய கோப்பையை இந்திய அணி இதுவரை 5 முறை வென்றுள்ளது. வெளிநாடுகளில் தொடர்ந்து தோல்வியடைந்து துவண்டுள்ள இந்திய வீரர்கள் இப்போட்டியில் வென்று தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதே நேரத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் இப்போட்டியில் இந்திய அணிக்கு மிகுந்த சவால் அளிக்கும் வகையில் விளையாடும். வங்கதேச அணி கூட பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி தோல்வியை அளிக்கும் வகையில் வளர்ந்து விட்டது. எனவே முதல் போட்டியே இந்திய வீரர்களுக்கு சவால்மிக்கதாகவே இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x