Published : 17 Oct 2014 06:48 PM
Last Updated : 17 Oct 2014 06:48 PM
தரம்சலாவில் சர்ச்சைகளுக்கிடையே, இத்தொடரில் நடைபெறும் 'கடைசி' ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது.
விராட் கோலி 114 பந்துகளில் 13 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 127 ரன்கள் எடுத்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். விராட் கோலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதம் எடுத்துள்ளார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவரது 20-வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி 10 ஓவர்களில் 94 ரன்கள் விளாசப்பட்டது.
36-வது ஓவர் முதல் 40 ஓவர்கள் வரையிலான பவர் பிளேயில் ரெய்னா, கோலி ஜோடி ஆட்டமிழக்காமல் 49 ரன்களை விளாசினர். ஆக மொத்தம் கடைசி 15 ஓவர்களில் 143 ரன்கள் விளாசி எடுக்கப்பட்டது.
தொடக்கத்தில் தவன் அதிரடி ஆட்டம் ஆடி 35 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து ஆந்த்ரே ரசல் வீசிய 136 கிமீ வேக பவுன்சரை டீப் ஸ்கொயர் லெக் திசையில் டேரன் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டெய்லரின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி அபாயகரமாக ஆடினார் தவன். ஆனால் அரைசதம் எடுக்கும் முன்பு ஹூக் செய்ய முயன்று அவுட் ஆனார். தொடக்க விக்கெட்டுக்காக தவன், ரஹானே ஜோடி 70 ரன்களைச் சேர்த்தனர்.
மேற்கிந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஷாட் பிட்ச் பந்துகளை அதிகம் வீசி இந்திய பேட்ஸ்மென்களை திணறச் செய்ய முயன்றனர். ஆனால் அனைத்து ஷாட் பிட்ச் பந்துகளும் பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறந்தது. கவனச் சிதறல் ஏற்பட்ட ஒரு தருணத்தில்தான் தவன் ஹூக் ஷாட்டில் அவுட் ஆனார்.
ரஹானே, கோலி 72 ரன்களை சேர்த்த நிலையில் 68 ரன்கள் எடுத்த ரஹானே, சுலைமான் பென் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். வெளியே பிட்ச் ஆன பந்து, ஸ்வீப் செய்தார் ரஹானே, பந்து மட்டையில் சிக்காமல் பேடில் பட்டது. பந்து மேலும் வெளியேதான் செல்கிறது. ஆனால் தொடர்ந்து முறையீடு செய்து நடுவரை நெருக்கடிக்குள்ளாக்கி அவுட் வாங்கினார் பென்.
ரஹானேவுக்கும் ஏகப்பட்ட ஷாட் பிட்ச் பந்துகள் வீசப்பட்டன. அனைத்தும் பவுண்டரி விளாசப்பட்டது.
கோலியும் ரெய்னாவும் இணைந்தனர். இந்திய இன்னிங்ஸில் ரன் மழை பொழிந்த நேரம் ஆக அது அமைந்தது. ரெய்னா விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல் ஆடினார். ஷாட் பிட்ச் பந்துகள் இவருக்கும் வீசப்பட்டன இவரும் விளாசித் தள்ளினார். சாமுயெல்ஸ் வீசிய பந்தை மேலேறி வந்து லாங் ஆனில் சிக்ஸ் அடித்து சிக்சர் கணக்கைத் தொடங்கினார் ரெய்னா. மீண்டும் சாமுயெல்ஸ் பந்தை நேராக ஒரு சிக்சர் அடித்தார்.
அதன் பிறகு 38வது ஓவரில் டெய்லர் வீசிய அருமையான குட் லெந்த் பந்து ஒன்றை, தடுத்தாடப்படவேண்டிய பந்தை, அபாரமாக லாங் ஆஃப் திசையில் சிக்ஸ் அடித்தார் கோலி, இது நம்ப முடியாத ஷாட்டாக அமைந்தது. இதே டெய்லர் மீண்டும் அரைக்குழியில் ஒரு பந்தை பிட்ச் செய்ய இம்முறை ரெய்னா ‘இனி போடாதே’ என்பது போல் ஒரே அடி அடித்து சிக்சருக்கு விரட்டினார். இப்படியாக பவர் பிளேயில் இருவரும் 49 ரன்களை விளாசினர்.
43வது ஓவரில் ரெய்னா, டிவைன் பிராவோ ஓவரில் தாண்டவமாடினார். 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அந்த ஓவரில் 18 ரன்கள் விளாசப்பட்டது. இதில் ரெய்னா ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் மற்றும் 1 ரன் எடுக்க விராட் கோலி மீதமுள்ள பந்தில் மேலும் 2 பவுண்டரிகளை விளாசினார்.
58 பந்துகளில் 3 பவுண்டரி 5 சிக்சர்களுடன் ரெய்னா 71 ரன்கள் எடுத்து எட்ஜில் அவுட் ஆகி வெளியேறினார் ரெய்னா. தோனி களமிறங்கினார். அவருக்கு ஒரு கேட்சை கோட்டை விட்டனர். ஆனால் 6 ரன்களில் பொலார்டின் அபாரமான பீல்டிங்கிற்கு தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதற்குள் கோலி டெய்லர் பந்தை பிளிக் செய்து 101 பந்துகளில் தனது 20வது ஒருநாள் சதத்தை எடுத்தார்.
தோனி ஆட்டமிழந்த பிறகு ஜடேஜாவும் (2) நீடிக்கவில்லை. இந்தியா கோலியின் நீடித்த ஆட்டத்தினால் 330 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தரப்பில் சுலைமான் பென் தவிர அனைத்து பவுலர்களும் ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் கொடுத்தனர். ஜேசன் ஹோல்டர் ஓவருக்கு 5.77 ரன்கள்தான் கொடுத்தார். பென் 8 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
சர்ச்சைகளினால் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாத மேற்கிந்திய அணியின் பந்து வீச்சும் பீல்டிங்கும் மோசமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT