Published : 22 Feb 2015 06:28 PM
Last Updated : 22 Feb 2015 06:28 PM

தென் ஆப்பிரிக்க அணியை தவிக்கவைத்த இந்திய சிகிச்சை

மெல்போர்னில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில், இந்தியா எதிர்பார்த்ததை விடவும் எளிதாகவே வெற்றி பெற்றது என்றே கூற வேண்டும்.

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், >தென் ஆப்பிரிக்கவை 130 ரன்களில் அபாரமாக வீழ்த்தியது இந்திய அணி.

இந்தப் போட்டிக்கு முன்னதாக, உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 3 முறையும் தோற்றது என்று கூறி, இந்திய அணியை ஒரு மாதிரி கேலி பேசினர். ஆனால், இன்று தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்றை மாற்றி எழுதியது இந்திய அணியின் வெற்றி.

தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சைப் பற்றிய அதிமதிப்பீடும் தவிடு பொடியானது. இயன் சாப்பல் கூறியதை நாம் நேற்று குறிப்பிட்டிருந்தோம், அதாவது, "இந்த இந்திய பேட்டிங் வரிசை தென்னாப்பிரிக்க பந்துவீச்சை அடித்து நொறுக்க முடியும்" என்று இயன் சாப்பல் கூறியதை நாம் நேற்று குறிப்பிட்டுருந்தோம். | >வீடியோ பார்க்க - தென்னாப்ரிக்காவை வீழ்த்துமா இந்தியா? - சிறப்புப் பார்வை | அதுதான் நடந்தது இன்று.

ஷிகர் தவனின் 'தொடர்ச்சி'

தொடக்கம் முதலே அருமையான செட்டிங். துணைக்கண்டம் போன்ற பிட்ச், மைதானம் முழுதும் இந்திய ரசிகர்கள். நல்ல வெயில். டாஸில் வெற்றி என்று இந்திய அணிக்கு அனைத்தும் சாதககமாகவே அமைந்தது.

தொடக்கத்தில் ஷிகார் தவண், ரோஹித் சர்மா நிதானமாக ஆடினர். ரோஹித் சர்மா 6 பந்துகளில் ரன்கள் இல்லை. ஆனால், அவர் தேவையில்லாத ரன் அவுட் என்றே கூற வேண்டும். நீண்ட தூரம் அவர் ஓடிவிட்டார். மிஸ் ஃபீல்டிற்கு எப்போதும் ரன் ஓடக்கூடாது என்பதே நியதி. ஏனெனில் அது முழுதான மிஸ் பீல்ட் அல்ல. பந்தும் ஃபீல்டர் கையில் பட்டு நீண்ட தூரம் செல்லவில்லை. இப்படியாக ஒரு அதிரடி வீரர் ரன் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய அனுகூலத்தை அளித்திருக்கும்.

ஆனால், ஷிகார் தவண் சாம்பியன்ஸ் டிராபியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கார்டிஃபில் சதம் எடுத்த அதே இன்னிங்ஸின் தொடர்ச்சி போலவே இன்றும் ஆடினார்.

விராட் கோலி வழக்கம் போல் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்தவே ஃபீல்டிங்கில் மிகவும் 'டைட்' ஆக இருந்த தென் ஆப்பிரிக்கா சற்றே சோடைப் போகத் தொடங்கியது.

தவணும் கோலியும் ஸ்கோரை 14-வது ஓவரில் 56 ரன்களுக்கு உயர்த்தினர். அதில் தவண் 38, கோலி 18. கூடுதல் ரன்களை தென் ஆப்பிரிக்கா அளிக்கவில்லை அவ்வளவு ஒழுக்கமான பந்துவீச்சாக அமைந்தது.

ஆம்லா செய்த மிகப் பெரிய தவறு... ஆட்டத்தின் முதல் திருப்புமுனை:

ஷிகர் தவண் தனது அரைசதத்தை 73 பந்துகளில் பூர்த்தி செய்தார். அதில் 8 பவுண்டரிகள். இதில் மோர்னி மோர்கெல், டேல் ஸ்டெயின், வெய்ன் பார்னெல், பிலாண்டர் ஆகியோர் பந்து வீச்சில் அடித்த பவுண்டரிகள் அபாரம்.

அவர் 53 ரன்கள் எடுத்து மிகவும் பலமாகச் சென்று கொண்டிருந்தபோது ஆட்டத்தின் 20-வது ஓவரை பார்னெல் வீச, முதல் பந்து ஷாட் ஆக விழ, தவண் அதை கட் செய்தார். பந்து காற்றில் பேக்வர்ட் பாயிண்ட் திசைக்குச் சென்றது. ஆம்லா வலது புறம் டைவ் அடித்து பிடிக்க முயன்றார். இரு கைகளையும் கொண்டு சென்றும் பந்தைப் பிடிக்காமல் கோட்டைவிட்டார். இந்த விடப்பட்ட கேட்ச் ஆட்டத்தின் முதல் திருப்பு முனை.

அதன் பிறகு பார்னெல் பந்தை விளாசத் தொடங்கினார். முதலில் 2 பவுண்டரிகள் விளாசினார். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சில் ஒழுக்கம் குலைந்து ஷாட் பிட்ச், லெக் திசைப் பந்துகள் என்று தவணுக்கு எளிதான பந்துகள் வந்து விழுந்தன. தவண் விடப்பட்ட கேட்சுக்குப் பிறகு பலமாகச் செல்ல விராட் கோலி 3 பவுண்டரிகளுடன் 59 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிர் வீசிய அரைக்குழி பந்தை எங்கு வேண்டுமானாலும் அடித்திருக்கலாம். ஆனால் நேராக ஷாட் மிட்விக்கெட்டில் டுபிளேசியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தவண், கோலி இணைந்து 24 ஓவர்களில் 127 ரன்கள் சேர்த்து அருமையான ஓர் அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

தவண், ரஹானே ஆடிய அபார ஆட்டம்:

கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரெய்னாவை இறக்கிய நிலையில், இம்முறை ரஹானேயை களமிறக்கினார் தோனி. இது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். நேற்று நாமும் முன்னோட்டத்தில் இதையே கூறினோம். காரணம் ரெய்னாவை ஷாட் பிட்ச் போட்டு எடுத்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. அவரும் அப்படித்த்தான் அவுட் ஆனார்.

ரஹானே களமிறங்கி அனாயசமாக ஆடினார். வெய்ன் பார்னெல் பந்து வீச்சு மிக மோசமாக அமைந்தது. அவரை 2 பவுண்டரிகள் அடித்துத் தொடங்கினார் ரஹானே. தொடர்ந்து பார்னெல் ரன்களைக் கசிய விட்டுக் கொண்டிருந்தார். மறுமுனையில் டுமினியையும் ரஹானே விளாசி எடுத்தார்.

தவண் சதம்:

ஆட்டத்தின் 35-வது ஓவரில் கடைசி பந்தில் பார்னெல் வீசிய பந்தை பாயின்ட்டில் பவுண்டரி அடித்து ஷிகர் தவண் 122 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் என்று தனது அபாரமான சதத்தை பூர்த்தி செய்தார். 35 ஓவர்கள் முடிவில் இந்தியா 183/2.

பவர் பிளேயில் அதிரடி!

36-வது ஓவர் பவர் பிளே. முதல் ஓவரிலேயே டுமினியை இரண்டு பவுண்டரிகள் அடித்தார் ரஹனே. பிறகு 39-வது ஓவரில் ரஹானே மீண்டும் மோர்கெல் பந்தை இரண்டு அபாரமான பவுண்டரிகளை அடித்தார். ஒன்று பவுலர் தலைக்கு மேல், இன்னொன்று மேலும் அலட்சியமாக கவர் திசையில் பவுண்டரி.

பவர் பிளேயின் கடைசி ஓவரை டேல் ஸ்டெய்ன் வீச, ஷிகார் தவண் லென்த்தில் விழுந்த பந்தை லாங் ஆன் திசையில் மிகப்பெரிய சிக்சருக்கு தூக்கினார். ஆட்டத்தின் முதல் சிக்ஸ் அது. அடுத்த பந்து ஷாட் பிட்ச், காத்திருந்து விக்கெட் கீப்பர் பின்னால் தூக்கி விட்டு ஒரு பவுண்டரி அடித்தார் ஷிகர் தவன்.

பவர் பிளேயில் இந்தியா 5 ஓவர்களில் 44 ரன்கள் அடித்து விக்கெட்டுகள் இழக்கவில்லை என்பது மிக முக்கியமானது. அடுத்ததாக மோர்கெல் வீசிய ஓவரில் ஆஃப் திசையில் நகர்ந்து கொண்டு ஃபைன் லெக் திசையில் தவன் அடித்த சிக்ஸ், இந்த போட்டியின் மிகச்சிறந்த ஷாட்.

இதற்கிடையே, ரஹானே தனது அரைசதத்தை 40 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் எடுத்தார். அதன் பிறகு பார்னெல் பந்தில் ஒரு சிக்ஸ், இம்ரான் தாஹிர் பந்தில் ஒரு சிக்ஸ்.

அதன் பிறகு ஆட்டத்தின் 44-வது ஓவரில் தவண் 146 பந்துகளில் 16 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 137 எடுத்து பார்னெல் வீசிய ஷாட் பிட்ச் பந்தில் ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 53 ரன்களில் தவணுக்கு கேட்ச் விட்ட ஆம்லா இப்போது எல்லாம் முடிந்த பிறகு அதே தவனுக்கு கேட்ச் பிடித்தார். தவணும் ரஹானேயும் இணைந்து சுமார் 16 ஓவர்களில் 3-வது விக்கெட்டுக்காக 125 ரன்களைச் சேர்த்தனர்.

தென் ஆப்பிரிக்கா ஃபீல்டிங் இந்த காலக்கட்டத்தில் மேலும் நெருக்கடி காரணமாக சொதப்பத் தொடங்கியது. ரெய்னா கொடுத்த கேட்சை ரூசோ தவற விட்டார். ஆனால், ரெய்னா அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதே ஓவரில் மோர்கெலின் இன்னொரு ஷாட் பிட்ச் பந்துக்கு வெளியேறினார்.

45-வது ஓவரில் இந்தியா 269/4. அதன் பிறகு ரஹானே இன்னொரு சிக்சரை அடித்து 60 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 79 ரன்கள் விளாசினார். தோனி 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி 5 ஓவர்களில் இந்தியா 38 ரன்களையே எடுக்க முடிந்தது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் வெர்ன பிலாண்டருக்கு 4 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. ஏன் என்று தெரியவில்லை. பார்னெலை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறாக போய் முடிந்தது. அவர் 9 ஓவர்களில் 85 ரன்கள் விளாசப்பட்டார். அவருக்குப் பதிலாக ஆல் ரவுண்டர் பிஹார்டீனைத் தேர்வு செய்திருக்க வேண்டும், இது அணித்தேர்வில் ஏற்பட்ட குழப்பமே. இம்ரான் தாஹிர் மட்டுமே 10 ஓவர்களில் சிறப்பாக வீசி 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இந்திய நெருக்கடியில் சரிந்த தென் ஆப்பிரிக்கா:

308 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி மீது பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 280 ரன்களே போதுமானது... தென் ஆப்பிரிக்கா துரத்த முடியாது என்று வர்ணனையாளர்கள் பலரும் கூறினர். ஷேன் வார்ன் இந்தப் பிட்ச் ஒரு ரன் குவிக்கும் பிட்ச் என்றார். இதனால் டிவிலியர்ஸ், ஆம்லா, டுபிளேசி, டுமினி, மில்லர், டி காக் என்று பலமான வரிசையைக் கொண்ட தென் ஆப்பிரிக்கா நிச்சயம் இலக்கை எதிர்த்து ஒரு மோது மோதும் என்றே எதிர்பார்த்தனர்.

ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சு, பீல்டிங், அனைத்துக்கும் மேலாக தொடர்ந்து கொடுத்த நெருக்கடி ஆகியவை தென் ஆப்பிரிக்காவை மீண்டும் ஒரு முறை உலகக்கோப்பை முக்கிய போட்டியில் மண்ணைக் கவ்வச் செய்துள்ளது.

இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே குவிண்டன் டி காக் விக்கெட்டை ஷமியிடம் இழந்தது. ஷமி வீசிய பந்தை ஃபுல் லென்த் பந்து என்று நினைத்து அவர் டிரைவ் ஆட மிட் ஆஃபில் கேட்ச் ஆனது.

ஹஷிம் ஆம்லா இந்தியாவுக்கு எதிராக நல்ல ரெக்கார்ட் வைத்திருப்பவர். தொடர்ந்த இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு ரன் எடுக்க முடியாமல் திணறிய நிலையில், ஆட்டத்தின் 11-வது ஓவரை மோஹித் சர்மா வீச, ஷாட் பிட்ச் பந்தை ஹூக் செய்து ஷமியிடம் கேட்ச் கொடுத்து 22 ரன்களில் வெளியேறினார்.

11-வது ஓவரில் 40/2 என்ற நிலையில் டு பிளேசி மற்றும் டிவிலியர்ஸ் ஒன்று சேர்ந்தனர். தென் ஆப்பிரிக்காவின் பிரகாசமான தருணம் இதுவே. இவர்கள் இருவரும் இணைந்து 12 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்தனர். டுபிளேசி, டிவிலியர்ஸ் இருவருமே இறங்கி வந்து ஆடத் தொடங்கியிருந்தனர்.

2-வது திருப்பு முனை:

தென்னாப்பிரிக்க சரிவைத் தொடக்கி வைத்ததே மோஹித் சர்மா த்ரோவும், டிவிலியர்ஸ் ரன் அவுட்டும்தான்.

டிவிலியர்ஸ் 38 பந்துகளில் 30 ரன்களுடன் அபாயகரமாகத் திகழ்ந்தார். ஆனால், அப்போதுதான் 23-வது ஓவரில் ஜடேஜா சில ரன் கொடுக்காத பந்துகளை வீச அழுத்தம் அதிகரித்த்து. இந்த நிலையில்தான் ஜடேஜா வீசிய பந்தை ஸ்வீப்பர் கவரில் கட் செய்தார் டிவிலியர்ஸ். அங்கு பந்து சற்று வேகமாகச் சென்றது. அங்கு 2 ரன்கள் இல்லை. ஆனால் பிடிவாதமாக 2 ரன்கள் எடுக்க முயல, மோஹித் சர்மாவின் த்ரோ மிகத் துல்லியமாக தோனி கைக்கு வர ஸ்டம்ப் சாய்கிறது. டிவிலியர்ஸ் ரன் அவுட். அவ்வளவுதான் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் மத்தியில் கவலை தரும் மவுனம் குடியேறியது.

மீதமிருப்பது டுபிளேசி, டேவிட் மில்லர், இருவரும் இணைந்து 25 ரன்களைச் சேர்த்தனர். அப்போது 29-வது ஓவரி மோஹித் சர்மாவிடம் தோனி கொடுக்க, டுபிளேசி 55 ரன்கள் எடுத்த நிலையில், தேவையில்லாமல் மிட் ஆஃப் திசையில் தூக்கி அடிக்க முயன்று 30 அடி வட்டத்துக்குள்ளேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகு தொடர்ந்த நெருக்கடியில் டுமினி 6 ரன்களில் அஸ்வின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று ரெய்னாவிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 34-வது ஓவரில் டேவிட் மில்லர் (22) மீண்டும் ஒரு நல்ல த்ரோவுக்கு ரன் அவுட் ஆக, அதே ஓவரின் கடைசி பந்தில் அஸ்வினிடம் பிலாண்டர் எல்.பி. ஆகி வெளியேற, தென் ஆப்பிரிக்கா 40.2 ஓவர்களில் 177 ரன்களுக்குச் சுருண்டு 130 ரன்களில் தோல்வி தழுவியது.

இந்தியத் தரப்பில் அஸ்வின் மீண்டும் சிறப்பாக வீசி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷமி, மோஹித் சர்மா மீண்டும் ஒரு முறை மிகத் துல்லியமாகவும் ஆக்ரோஷமாகவும், ஃபீல்டிங்குக்கு தக்கவாறு வீசியும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜடேஜா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினாலும் டிவிலியர்ஸுக்கு அந்த ரன் அவுட் ஓவரில் ரன் கொடுக்காமல் வீசி ஒரு ரன்னை 2 ஆக மாற்ற நெருக்கடி கொடுத்து, அதன் மூலம் டிவிலியர்ஸ் ரன் அவுட் ஆனதற்குப் பிரதான காரணமாகத் திகழ்ந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராகத் திட்டமிடுதலைத் துல்லியமாகச் செய்தது போல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் திட்டமிடுதல் மிகத் துல்லியமாக அமைந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற வெற்றி பாகிஸ்தானின் பலவீனமான பேட்டிங்கினால் என்று இந்திய அணியின் ஆட்டத்திறன் மீது சந்தேகங்களை வல்லுநர்கள் ஏற்படுத்தினர். ஆனால், இந்த 2-வது கிளினிக்கல் வெற்றியின் மூலம் தற்போது உலகக்கோப்பையை வெல்வோம் என்று தன்னம்பிக்கையுடன் திகழும் அணிகளுக்குக் கூட இந்தியாவின் மீது தற்போது மரியாதையும், பயமும் அதிகரித்திருக்கும் என்பது உறுதி.

குறிப்பாக, தென் ஆப்பிரிக்க அணிக்கு கடைசி 8 விக்கெட்டுகளுக்கு வெறும் 69 ரன்கள் மட்டுமே வழங்கியது, அந்த அணியை தவிக்கவைத்த இந்திய அணியின் 'சிகிச்சை'க்கு சான்று.

இன்றைய போட்டியில் இருந்து ஒன்று புரிகிறது. கேரி கிர்ஸ்டனைக் கூப்பிட்டுக் கொண்டாலும், மைக் ஹஸ்ஸியைக் கூப்பிட்டுக் கொண்டாலும் மைதானத்தில் எப்படி ஆடுகிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றி - தோல்விகள் தீர்மானிக்கப்படும் என்பதை தென் ஆப்பிரிக்கா இன்று உணர்ந்திருக்கும். அதேபோல், ஒரு வலுவான தலைமையின் கீழ் கூட்டு முயற்சியின் அணுகுமுறைக்கு உள்ள சக்தியை இந்திய அணி மீண்டும் புரிந்துகொண்டுள்ளது எனலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x