Published : 08 Dec 2013 12:00 AM
Last Updated : 08 Dec 2013 12:00 AM
சென்னை பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் நடைபெற்று வரும் ஏ.எல்.முதலியார் தடகளப் போட்டியின் குண்டு எறிதல் பிரிவில் 42 ஆண்டுகால சாதனையை தகர்த்திருக்கிறார் சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி மாணவி குமாரி. தமிழகத்தின் தென் கோடியான நாகர்கோவிலைச் சேர்ந்த குமாரி 6-ம் வகுப்பு படித்தபோது குண்டு எறிதல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.
10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது மாநில அளவிலான போட்டியில் முதல் பதக்கத்தை (வெண்கலம்) வென்ற குமாரி, பின்னர் சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப் அகாதெமியில் பயிற்சி பெறுவதற்காக தலைநகருக்கு வந்திருக்கிறார்.
தடகளப் பயிற்சியாளர் நாகராஜின் உதவியால் குண்டு எறிதல், வட்டு எறிதல் என இரு போட்டிகளிலும் ஜொலிக்க ஆரம்பித்த குமாரி, இப்போது கணிசமான பதக்கங்களை குவித்திருக்கிறார். மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் குண்டு எறிதல், வட்டு எறிதல் என இரு பிரிவுகளிலும் சுமார் 10-க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் குமாரி, மாநில அளவிலான சீனியர் தடகளப் போட்டிகளில் சுமார் 6-க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்திருக்கிறார்.
சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஏ.எல்.முதலியார் தடகளப் போட்டியில் மகளிர் குண்டு எறிதல், வட்டு எறிதல் என இரு பிரிவுகளிலும் தொடர்ந்து 4 ஆண்டுகளாக தங்கப் பதக்கம் வென்றுள்ள குமாரி, இந்த முறை குண்டு எறிதலில் நிகழ்த்தப்பட்டிருந்த 42 ஆண்டுகால சாதனையை தகர்த்திருக்கிறார். 1972-ல் அனுஷியா பாய் என்பவர் 11.24 மீ. தூரம் குண்டு எறிந்ததுதான் சாதனையாக இருந்தது. அதை கடந்த ஆண்டு சமன் செய்த குமாரி, இந்த ஆண்டு 11.68 மீ. தூரம் குண்டு எறிந்து புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
அகில இந்திய தடகளப் போட்டிக்காக சென்னை செயின்ட் ஜோசப் அகாதெமியில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் குமாரி. சனிக்கிழமை காலையில் ஜிலுஜிலுவென தூறிக் கொண்டிருந்த சாரலுக்கிடையில் குண்டு எறிந்து கொண்டிருந்த அவர் கூறியது:
தேசிய அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்றிருந்தாலும், தேசிய அளவிலான சீனியர் போட்டிகளில் இதுவரை பதக்கம் வென்றதில்லை. அதில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் இப்போதைய இலக்கு. சீனியர் பிரிவுக்கு மாறி கொஞ்ச நாள்கள்தான் ஆகின்றன. வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் அகில இந்திய தடகளப் போட்டி நடைபெறுகிறது. அதில் எப்படியாவது பதக்கம் வென்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளேன்.
கேரளத்தைச் சேர்ந்த நீனா எலிசபெத் மற்றும் ஹரியாணா வீராங்கனைகள் வரும் போட்டிகளில் கடும் சவாலாக இருப்பார்கள். என்னுடைய “பெர்சனல் பெஸ்ட்” தூரமான 12.30 மீ. குண்டு எறிந்துவிட்டால் நிச்சயம் ஏதாவது ஒரு பதக்கம் கிடைக்கும். பயிற்சியின்போது 12.50 மீ. தூரம் குண்டு எறிகிறேன்.
இதே தூரம் குண்டு எறியும் பட்சத்தில் அகில இந்திய தடகளப் போட்டியில் நிச்சயம் தங்கப் பதக்கம் கிடைக்கும். வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருவது நமக்கு பாதகமானதாகும். எனினும் தங்கம் வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன் என்கிறார் நம்பிக்கையோடு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT