Published : 07 Oct 2014 11:16 AM
Last Updated : 07 Oct 2014 11:16 AM
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 2-வது பயிற்சி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய ஏ அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே நடைபெற்ற முதல் ஒருநாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை கொச்சியில் நடைபெறவுள்ளது. முன்னதாக இந்திய ஏ அணியுடன் மேற்கிந்தியத்தீவுகள் அணி இரு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது. 2-வது ஆட்டம் மும்பையில் நேற்றுமுன்தினம் பகல் இரவாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. முரளி விஜய், உன்முக்த் சந்த் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். முரளி விஜய் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து கருண் நாயர், உன்முக்துடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. கருண் 63 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். உன்முக்த் 111 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார்.எனினும் பின்னர் வந்த கேப்டன் மனோஜ் திவாரி, சஞ்சு சாம்சன் ஆகியோர் முறையே 7, 5 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தனர். பின்வரிசை வீரர்களும் பெரிய அளவில் ரன் சேர்க்காததால் இந்திய ஏ அணி 48.1 ஓவர்களில்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியில் தொடக்க வீரர்கள் ஜான்சன், பிளாக்வுட் ஆகியோர் தலா 7 ரன்கள் எடுத்தனர். சற்று தாக்குப் பிடித்து விளையாடிய சாமுவேல்ஸ் 24 ரன்கள் எடுத்தார். கேப்டன் போல்லார்ட் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் 16 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 65 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் எடுத்திருந்தது.
அடுத்து ராம்தீனுடன் ஜோடி சேர்ந்தார் சமி. இருவரும் சிறப்பாக விளையாடினர். சமி 67 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார். ராம்தீன் 102 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். அப்போது மேற்கிந்தியத்தீவுகள் 44.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது.
பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய ஏ அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய ஏ அணியில் தவால் குல்கர்னி 3 விக்கெட்டுகளையும், கருண் சர்மா, பும்ராஹ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இரு பயிற்சி ஆட்டங்களிலும் மேற்கிந்தியத்தீவுகள் தோல்வியடைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT