Published : 03 Jun 2016 07:35 PM
Last Updated : 03 Jun 2016 07:35 PM
ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் ‘வீட்டில் புலி’ ‘வெளியே எலி’ என்பது போல் தங்கள் நாட்டில் வந்து விளையாடும் அணிகளை துவைத்து வெளுப்பது, மீண்டும் அதே நாட்டுக்கு செல்லும் போது துவைக்கப்படுவதும் வெளுக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாகவே அனைத்து அணிகளும் விதிவிலக்கின்றி உள்நாட்டில் எதிரணியினரை வெளுத்து வாங்குவதும், மறுமுறை அவர்கள் நாட்டுக்குச் சென்று வாங்கி வெளுத்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது. கிரிக் இன்போ புள்ளி விவரங்களும் டெஸ்ட் கிரிக்கெட்டின் இத்தகைய நிலைகளையே பறைசாற்றுகின்றன.
இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து தொடரை இழந்துள்ள நிலையில் கடைசி 21 உள்நாட்டு தொடர்களில் இங்கிலாந்து 15 தொடர்களை வென்றுள்ளது. அதாவது 71% வெற்றி விகிதம், இது அபரிமிதமான உள்ளூர் சாதகமாகும்.
இங்கிலாந்தில் இந்த சீசனில் செல்லும் அணிகள் சிக்கி சின்னாபின்னமாவது வழக்கம்தான். மேகமூட்ட வானிலை, டியூக் பந்துகளின் கூடுதல் ஸ்விங், அதற்குத் தக்கவாறான பிட்ச் தயாரிப்பு என்று இங்கிலாந்து எதிரணிகளை மிரட்டி வரும் சீசனாகும் இது. ராகுல் திராவிட், ஷிவ்நரைன் சந்தர்பால் போன்ற அசாத்திய பொறுமை மிக்கவர்கள் மட்டுமே இங்கு ஜொலிக்க முடியும் அல்லது விவ் ரிச்சர்ட்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஜெயசூரியா பாணியில் தாறுமாறாக அடித்து ஆட வேண்டும். இப்படிப்பட்ட சீசனில் இலங்கை தற்போது மாட்டி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
இதனையடுத்து டெஸ்ட் போட்டிகள் எந்த வித சவாலுமின்றி ஒருதலைபட்சமாக நடந்து முடிவது குறித்து ஐசிசி பரிசீலனை செய்து வருகிறது.
அதாவது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்துக்குச் செல்லும் ஆசிய அணிகள் போதிய தயாரிப்பில்லாமல் செல்வது ஒரு புறம், அங்கு உள்ள சூழ்நிலைமைகளுக்கு தங்களை தயார் செய்து கொள்ள போதிய கால அவகாசமின்மை மறுபுறம். இலங்கை இரண்டு, இரண்டாம் தர அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் ஆடியது, இது எப்படி ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடை எதிர்கொள்ள போதுமானதாக அமையும்?
இது குறித்து ஐசிசி-யின் டேவ் ரிச்சர்ட்ஸன் கூறும்போது, “உள்நாட்டு அணிகளுக்கு ஏகப்பட்ட சாதகச்சூழ்நிலைகள் இருப்பது சரியல்ல. கடந்த சில ஆண்டுகளின் புள்ளி விவரங்களை நான் அறிவேன். அதாவது பயணிக்கும் அணிகள் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள போதிய அவகாசம் இருப்பதில்லை, போட்டி அட்டவணைகள் அப்படித் தயாரிக்கப்படுகின்றன, இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது” என்றார்.
ஆஸ்திரேலியா தற்போது இந்தியா போன்ற பிட்ச்களை உருவாக்கி பயிற்சி மேற்கொள்வதும், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தில் இங்கிலாந்து அணியை ஆதிக்கம் கொள்ள டியூக் பந்துகளைக் கொண்டு உள்நாட்டு கவுண்டி கிரிக்கெட் தொடர்களை நடத்துவதுமாக தனது உத்திகளை சமீபமாக மாற்றியுள்ளது. டியூக் பந்துகள் சரி, ஆனால் இங்கிலாந்து போல் மேகமூட்ட வானிலை கிடைக்குமா? அதனால் இம்முயற்சி பகுதியளவில்தான் பயனளிக்கும் என்று தெரிகிறது.
1972-ல் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து சென்ற போது முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 11 கவுண்டி போட்டிகளில் ஆடியது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பிஷன் பேடி தலைமையில் சென்ற போது 8 கவுண்டி போட்டிகளில் விளையாடியது. அத்தகைய சூழ்நிலைகள் இப்போது இல்லை, காரணம் இப்போது பொழுது விடிந்து பொழுது போனால் ஏதாவது மூலையில் டி20 லீகுகளில் வீரர்கள் விளையாடிக் கொண்டே இருக்கின்றனர்.
உள்நாட்டு டெஸ்ட் தொடர்கள் வரும்போது கேப்டன்கள் தங்களுக்கு சாதகமான பிட்சை அமைத்து எளிதாக்கிக் கொள்கின்றனர், உதாரணமாக இந்தியாவையும், இலங்கையையும் குழி பிட்சைத் தயாரிக்க வேண்டாம் என்று சொன்னால் கேட்கவா போகிறார்கள்?
எனவே ஐசிசி தனது அடுத்த ஆண்டுக்கூட்டத்தில் இந்த விஷயத்தைக் கையிலெடுக்கும் போது டி20, டெஸ்ட், ஒருநாள் ஆகிய 3 வடிவங்களுக்கும் ஒரு மாற்று முறை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், உள்நாட்டுக்குச் சாதகமான பிட்ச் போன்ற சூழ்நிலைகளில் ஐசிசி-யே தலையிட முடியாது. இந்நிலையில் ஐசிசி என்ன செய்யப்போகிறது என்பதைக் காண ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT