Published : 19 Oct 2014 12:41 PM
Last Updated : 19 Oct 2014 12:41 PM
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 5-0 என்ற கோல் கணக்கில் புணே சிட்டி அணியைத் தோற்கடித்தது. அந்த அணியின் மோரிட்ஸ் 3 கோல்களை அடித்து இந்தியன் சூப்பர் லீக்கில் ஹாட்ரிக் கோலடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது மும்பை. இந்த கோலை அந்த அணியின் ஆண்ட்ரே மோரிட்ஸ் அடித்தார். மைதானத்தின் நடுவில் இருந்து பந்தை வேகமாக முன்னோக்கி எடுத்துச் சென்ற மோரிட்ஸ், இடது காலால் மிகத்துல்லியமாக கோலடித்தார்.
தொடர்ந்து அபாரமாக ஆடிய மும்பை அணிக்கு 27-வது நிமிடத்தில் 2-வது கோல் கிடைத்தது. இந்த கோலையும் மோரிட்ஸ் தான் அடித்தார். புணே அணியின் தடுப்பாட்டக்காரர்கள் மிக மோசமாக செயல்பட்ட நிலையில் அதை பயன்படுத்திக் கொண்ட மோரிட்ஸ், மும்பை அணியை 2-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற செய்தார்.
அடுத்த 10-வது நிமிடத்தில் மும்பைக்கு 3-வது கோல் கிடைத்தது. இந்த கோலை ஜான் ஸ்டோகன்ஸ் கொடுத்த பாஸில் சுபாஷ் சிங் அடித்தார். முதல் பாதி ஆட்டநேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற மும்பை அணி, 2-வது பாதி ஆட்டத்திலும் அசத்தலாக ஆடியது. 71-வது நிமிடத்தில் மோரிட்ஸ் தனது ஹாட்ரிக் கோலைபதிவு செய்தார். 85-வது நிமிடத்தில் லெட்ஸெல்டர் கோலடிக்க, மும்பை அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT