Published : 12 Jun 2017 11:08 PM Last Updated : 12 Jun 2017 11:08 PM
சர்ஃபராஸ் அதிரடியில் பாகிஸ்தான் போராடி வெற்றி: அரையிறுதிக்கு தகுதி
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மோசமான ஃபீல்டிங், பந்துவீச்சு மற்றும் அணுகுமுறையின் காரணமாக இலங்கை தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
236 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழந்திருக்கும். இதன் பிறகு ஒரு ஓவர் நிதானித்து அதிரடியாக ஆடத்தொடங்கினர் பாக். வீரர்கள். 11 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் குவிய, தேவையோ ஒரு ஓவருக்கு சராசரியாக 4 ரன்கள் மட்டுமே.
அரை சதம் எட்டிய ஃபகார் அகமது 12-வது ஓவரில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆட வந்த பாபர் அசாம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவர் பெவிலியன் திரும்ப, தொடர்ந்து வந்த முகமது ஹஃபீஸ் அடுத்த ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்து வீழ்ந்தார். நன்றாக ஆடி வந்த அசார் அலியும் 20-வது ஓவரில் ஆட்டமிழக்க 111 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் சற்று தடுமாற்றம் கண்டது.
தேவைப்பட்ட ரன்கள் குறைவாகவே இருந்ததால் பாகிஸ்தான் விக்கெட் இழப்புகளை பற்றி பெரிதாகக் கவலையுற்றதாகத் தெரியவில்லை. அவர்கள் உடல் மொழியில் தன்னம்பிக்கையே தெரிந்தது.
ஆனால் 25-வது ஓவரில் ஷோயிப் மாலிக், 26-ல் இமாத் வாஸிம், 30-ல் ஃபஹிம் அஷ்ரஃப் என துரித கதியில் வீரர்கள் வெளியேற பாகிஸ்தானின் ஆட்டம், சற்று ஆட்டம் கண்டது. 30 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள். தேவை 20 ஓவர்களில் 75 ரன்கள். தொடர்ந்து களத்தில் இணைந்த சர்ஃபராஸ் அகமது மற்றும் முகமது ஆமிர் இருவர் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு ஒரே நம்பிக்கையாக இருந்தனர். அடுத்த 10 ஓவர்கள் இவர்கள் பொறுப்பாக ஆட, மேற்கொண்டு விக்கெட் இழக்காமல் பாக். இலக்கை நெருங்கியது.
இதற்கு நடுவில், 39-வது ஓவரில், மலிங்கா வீசிய பந்தை சர்ஃபராஸ் நேராக தூக்க, கைக்கு வந்த கேட்சை தவறவிட்டார் பெரேரா. 40 ஓவர்களில் 198 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள். தேவை 10 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே. ஆனால் பாக். அணியிடம் மீதமிருந்தது 3 விக்கெட்டுகள் மட்டுமே.
அற்புதமாக ஆடி வந்த சர்ஃபராஸ் 71 பந்துகளில் அரை சதம் கடந்தார். அவரது அரை சதத்தை விட, அணிக்கு மிக முக்கியமான 50 ரன்களை, முக்கியமான கட்டத்தில் குவித்தார் என்பதே அந்த சூழலில் சிறப்பம்சமாக இருந்தது.
சர்ஃபராஸ் தொடர்ந்து தோள் கொடுக்க, மறுமுனையில் முகமது ஆமிரும் அவருக்கு உறுதுணையாக இருந்தார். இறுதியில் 44வது ஓவரின் 5வது பந்தில், சர்ஃபராஸ் அடித்த பவுண்டரியுடன் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. முக்கியமாக அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.
சர்ஃபராஸ் அகமது 61 ரன்களுடனும், ஆமிர் 28 ரன்களுடன் களத்தில் இருந்தனர். எதிர்பார்த்தது போல ஆட்டநாயகனாக சர்ஃபராஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
WRITE A COMMENT