Published : 21 Mar 2014 12:15 PM
Last Updated : 21 Mar 2014 12:15 PM
திருச்சியில் நடைபெற்று வரும் வாசன் ஐ கேர்-ஐடிஎப் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன், ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி, லோபஸ் பெரஸ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். இவர்களில் பெரஸ் தவிர எஞ்சிய 3 பேரும் தமிழக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் லோபஸ் பெரஸ் 6-2, 6-7 (7), 6-0 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் போர்கியூவை தோற்கடித்தார். மற்றொரு காலிறுதியில் ராம்குமார் ராமநாதனும் இத்தாலியின் ஜியார்ஜியோ போர்ட்டலுரியும் மோதினர். இதில் ராம்குமார் 6-3, 3-6, 4-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஜியார்ஜியோ போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து ராம்குமார் அரையிறுதியை உறுதி செய்தார்.
இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி 6-7 (7) 7-6 (7), 6-1 என்ற செட் கணக்கில் ஸ்வீடனின் ரெனார்ட் லூகாஸைத் தோற்கடித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இரு செட்களும் சவால் மிக்கதாக அமைந்தன. டை பிரேக்கர் வரை சென்ற இந்த செட்களில் முதல் செட்டை லூகாஸ் வெல்ல, இரண்டாவது செட்டில் விடாப்பிடியாக போராடிய பாலாஜி, அதை தன்வசமாக்கினார். எனினும் பின்னர் நடைபெற்ற 3-வது செட்டை மிக எளிதாக கைப்பற்றி போட்டியை முடித்தார் பாலாஜி.
மற்றொரு காலிறுதியில் ஜீவன் நெடுஞ்செழியன் 6-1, 7-6(7) என்ற நேர் செட்களில் சகநாட்டவரான விஜயந்த் மாலிக்கை தோற்கடித்தார்.
இரட்டையர் பிரிவு: இரட்டையர் பிரிவு முதல் அரையிறுதியில் தமிழகத்தின் ராஜகோபாலன்-ராம்குமார் ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்களில் சகநாட்டு ஜோடியான காஸா வினாயக் சர்மா-பெரணமல்லூர் விக்னேஷ் ஜோடியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு இரட்டையர் அரையிறுதியில் இத்தாலியின் ஜியார்ஜியா-ஸ்வீடனின் ரெனார்ட் ஜோடி 3-7, 7-6 (7), 10-5 என்ற செட் கணக்கில் இந்தியாவின் முகுந்த்-சசிக்குமார் ஜோடியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT