Published : 14 Jan 2017 03:26 PM
Last Updated : 14 Jan 2017 03:26 PM

சாதித்த தோனியிடமிருந்து சாதிக்கும் கோலிக்கு மாறும் இந்திய அணி: ஞாயிறன்று முதல் ஒருநாள் போட்டி

விராட் கோலி தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக நாளை (ஞாயிறு) புனேயில் முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. டெஸ்ட் வெற்றிகள் என்ற ஒரு பெருமிதத்துடனும் தன்னம்பிக்கையுடனும் கோலி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

இங்கிலாந்து அணி சமீபமாக பயங்கர அதிரடி அணியாக உருமாறியிருந்தாலும் 2008-15 காலக்கட்டங்களில் இங்கிலாந்துக்கு எதிரான 28 போட்டிகளில் இந்திய அணி 17 போட்டிகளில் வென்று 8-ல் மட்டுமே தோற்றுள்ளது. கடந்த 5 இருதரப்பு தொடர்களில் இங்கிலாந்தை 4 தொடர்களில் இந்தியா வென்றுள்ளது.

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் தோனி அதிக இருதரப்பு தொடர்களை வென்றிருக்கிறார். கடைசியாக தென் ஆப்பிரிக்காவிடம் வாங்கிய உதை நீங்கலாக நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி கடைசியில் வைசாகில் மட்டமான ஸ்பின் பிட்சை அமைத்து 3-2 என்று வெற்றி பெற்றது வரை தோனியின் கேப்டன்சியில் குறுகிய வடிவத்தில் இந்திய அணி பெரிய தோல்விகளைச் சந்திக்கவில்லை என்றே கூற வேண்டும்.

இந்நிலையில் விராட் கோலி நாளை தலைமைப்பீடம் ஏற்கிறார், அனைத்து வடிவங்களையும் வழிநடத்தும் கேப்டனாக கோலி எப்படி தனது முதல் போட்டியை அணுகுகிறார் என்பதைப் பார்க்கவேண்டும் அவருக்கும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வழிநடத்தியதன் மூலம் குறைந்த ஓவர் கிரிக்கெட்டின் சூட்சமங்கள் கைவரப் பெற்றிருப்பார் என்று கருத இடமுண்டு.

இந்த இங்கிலாந்து அணியில் மேட்ச்-வின்னர்கள் அதிகம் உள்ளனர், ஜேசன் ராய் கிட்டத்தட்ட இங்கிலாந்தின் சேவாக் என்றே கூற வேண்டும், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர், ஜோ ரூட், மோர்கன் (இவரது பார்ம் கணிக்க முடியாதது), பென்ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், வில்லே, அடில் ரஷித். லியாம் டாசன் என்று கடைசி வரையிலும் பேட்டிங் ஆழம் உள்ள அணியாக உள்ளது.

அன்று தோனி கேப்டனாக ஆடிய கடைசி ஆட்டத்தில் இந்தியா ஏ அணியை வெகுசுலபமாக வீழ்த்தியது, இங்கிலாந்து, ஆனால் குல்திப் யாதவ், சாஹல் சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை கொத்தாக இழந்தது. எனவே ஸ்பின் தான் இங்கிலாந்தின் அச்சுறுத்தல்.

பேட்டிங் வரிசையில் ஜேசன் ராய் உள்ளிட்டோர் ரிவர்ஸ் ஸ்வீப், சுவிட்ச் ஹிட், பெடல் ஷாட் என்று இந்தியப் பந்து வீச்சுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள். ஆனால் அஸ்வின், ஜடேஜா ஆகியோரை இந்தப் பிட்ச்களில் அடித்து நொறுக்குவது அத்தனை சுலபமல்ல.

பிட்சைப் பொறுத்தவரை பிளாட் பிட்ச் இங்கிலாந்துக்கு சாதகமாக அமையும், முழு அளவிலான ஸ்பின் பிட்ச் இந்திய அணிக்குமே பிரச்சினையாகி விடும் எனவே ரன்கள் எடுக்க கஷ்டப்படும் மந்தமான பிட்ச்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக இங்கிலாந்து பெரிய இலக்குகளை சமீபமாக நன்றாக விரட்டி வருகிறது.

இந்திய அணித்தேர்வு கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் முதல் சவால், ரஹானே, ராகுலா, அல்லது தவண், ரஹானேயா, அல்லது தவண், ராகுலா என்று தொடக்க கூட்டணியை முதலில் தீர்மானிக்க வேண்டியுள்ளது. அதே போல் ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டராக எடுத்துக் கொள்வதா, அல்லது நன்றாக ஆடிவரும் மணீஷ் பாண்டேயை தக்கவைப்பதா என்று ஏகப்பட்ட கேள்விகள் கோலிக்கு உள்ளன.

வேகப்பந்தைப் பொறுத்தவரை உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா அனேகமாக முடிவான விஷயமாகவே இருக்கும்.

இந்திய அணி உத்தேசமாக இப்படி அமையலாம்: ஷிகர் தவண், ராகுல், விராட் கோலி, ரஹானே, யுவ்ராஜ் சிங், தோனி, பாண்டே/பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், பும்ரா.

நாளை (ஞாயிறு) பகல் 1.30 மணிக்கு முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x