Published : 11 Oct 2014 09:14 AM
Last Updated : 11 Oct 2014 09:14 AM
கடந்த ஒலிம்பிக், ஆசிய விளை யாட்டுப் போட்டி போன்றவற்றில் இந்தியாவால் ஏன் சாதிக்க முடியவில்லை என்று வருத்தப்படுவதை விட விளையாட்டை மேம்படுத்த இனி என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டிய தருணம் இது.
ஒலிம்பிக் போன்ற உலகளாவிய போட்டிகளில் சீனாவைப் போல் இந்தியாவும் ஜொலிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் அது அவ்வளவு சுலபமா? நிச்சயம் இல்லை. அதற்காக நாம் பயணிக்க வேண்டிய தூரமும், தகர்க்க வேண்டிய தடைகளும் மிக அதிகம். அதையெல்லாம் தாண்டினால்தான் நம்முடைய கனவு சாத்தியம்.
உள்கட்டமைப்பு வசதியில்லை
இந்தியாவில் விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மிகமிக குறைவு. சென்னை போன்ற பெரு நகரங்களில்கூட பெரிய அளவில் மைதானங்கள் இல்லை. சென்னையில் இருக்கும் நேரு உள் விளையாட்டரங்கம் முற்றிலும் தனியார் நிகழ்ச்சியின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுவிட்டது. அங்கே விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. தொலைக் காட்சி நிகழ்ச்சிகளும், இசை வெளி யீட்டு விழாவும்தான் நடந்து கொண் டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் போது அருகில் உள்ள மைதானங்களில் பயிற்சி பெற செல்பவர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
விளையாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட நேரு மைதானத்தில் இன்றளவிலும் தமிழக வீரர்கள் சுதந்திரமாக பயிற்சி பெற முடியாது. இங்கு பயிற்சி பெறுபவர்கள் சர்வதேச வீரராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அவர்களின் நிபந்தனைகளையெல்லாம் பூர்த்தி செய்த வீரர்களாவது முழுமையாக பயிற்சியில் ஈடுபட முடியுமா என்றால் அதுவும் இல்லை.
சென்னையில் உள்ள பெருவாரியான தனியார் பள்ளிகளில் மைதானமே கிடையாது. ஆனால் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வரும் பெற்றோரிடம் விளையாட்டுக்கு என்றுகூறி ஒரு கணிசமான தொகையை கறந்துவிடுகிறார்கள். வாங்கிய தொகையை ஏதாவது செய்தாக வேண்டும் என்பதற்காக நேரு மைதானத்தை வாடகைக்கு எடுத்து விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறார்கள்.
இப்போது பெரும்பாலான நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி விளையாட்டுப் போட்டிகள்தான் நேரு மைதானத்தில் நடக்கின்றன. அந்த நாட்களில் எந்த வீரருக்கும் பயிற்சி பெற அனுமதி கிடையாது. விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி பெறுவதற்கு பெரிய அளவில் உபகரணங்கள் இல்லை. மொத்தத்தில் குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகூட இல்லை. முதல் நடவடிக்கையாக இந்த நிலையை மாற்றி சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவது அவசியம்.
சர்வதேச தரத்தில் விடுதி
அடுத்ததாக விளையாட்டு விடுதிகளின் நிலையைப் பார்த்தால் அதுவும் மிக மோசமாகவே உள்ளது. அங்கே தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை. பல விடுதிகளில் மைதானங்கள் இல்லாததால் பயிற்சி பெறுவதற்கு வழியில்லாமல் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் வீரர்கள்.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால் பல மாவட்டங்களில் அரசு விளையாட்டு விடுதிகள் இருக்கின்றன. ஆனால் அதனால் என்ன பயன்? அந்த விடுதிகள் எத்தனை சர்வதேச வீரர்களை உருவாக்கியிருக்கின்றன என்று கணக்கெடுத்தால் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டும்தான். இந்த விடுதிகளில் ஏதோ வீரர்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக தகுதியே இல்லாதவர்களைக்கூட சேர்க்கிறார்கள்.
ஏதோ பெயருக்கு விடுதிகளை அமைப்பதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. 4 விடுதிகள் அமைத்தாலும் அதை சர்வதேச தரத்தில் அமைக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பும். சர்வதேச தரம் என்றால் எப்படியிருக்க வேண்டும்?
சர்வதேச தரத்திலான விடுதியின் வளாகத்திலேயே வீரர்கள் தங்குவதற்கான அறைகள், விளையாடுவதற்கான மைதானம், பயிற்சிக்கான உபகரணங்கள், பயிற்சியாளர், முடநீக்கியல் நிபுணர், மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், உணவு கட்டுப்பாட்டாளர் (டயட்டீசியன்), ஆடியோ மற்றும் வீடியோ ஆய்வுக்கூடம், பயோ ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும்.
வெளிப்படையான வீரர்கள் தேர்வு
சர்வதேச தரத்திலான விடுதியை அமைத்தால் மட்டுமே போதாது. அதற்கான வீரர்கள் தேர்வு வெளிப்படையாக நடைபெற வேண்டும். அமைச்சர், அதிகாரி என யாருடைய தலையீடும் இல்லாமல் தகுதியின் அடிப்படையிலேயே வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். வீரர்கள் தேர்வின்போது ஒவ்வொரு வீரரின் செயல்பாடு தொடர்பான அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அப்படி செய்தால்தான் தகுதியற்றவர்கள் உள்ளே நுழைவதை தடை செய்ய முடியும்.
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போன்றவற்றில் வெற்றி பெற்று வந்தால் ரூ.1 கோடி, ரூ.50 லட்சம் என அரசு அறிவிக்கிறது. ஆனால் வீரர்களின் வளர்ச்சிக்கான அடிப்படை திட்டங்கள் எதுவுமே இல்லை. திறமையான வீரர்கள் இளம் வயதிலேயே கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்படுவது அவசியம். அதைவிட்டுவிட்டு பரிசுகளை அறிவிப்பதால் மட்டும் எந்த பலனும் கிடைக்காது.
இந்தியாவில் ஒரு சில விளையாட்டுகளை தவிர மற்ற விளையாட்டுகளில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் ஏழ்மையை பின்னணியாகக் கொண்டவர்கள்தான். உபகரணங்கள் வாங்குவதற்கே வழியின்றி தவிக்கும் அவர்களால் எப்படி வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க முடியும்? எனவே திறமையான வீரர்கள் இளம் வயதிலேயே அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படுவார்களானால் விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் தென்பட ஆரம்பிக்கும்.
வேலைவாய்ப்பு
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு வரை நாம் தகுதிச்சுற்று நடத்தி அணியைத் தேர்வு செய்வது முற்றிலும் தவறானது. உதாரணமாக 2020 ஒலிம்பிக் போட்டிக்கான அணியை 2016-ல் இறுதி செய்து அடுத்த 4 ஆண்டுகளுக்கு பயிற்சியளித்தால்தான் பதக்கம் வெல்ல முடியும். ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்கு எல்லா விளையாட்டுகளுக்கும் அணியை அனுப்புவதற்கு பதிலாக, பதக்க வாய்ப்புள்ள விளையாட்டுகளை அடையாளம் கண்டு அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
அடுத்ததாக வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ரயில்வே, ஓ.என்.ஜி.சி., வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுப் பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் காவல்துறையில் மட்டுமே 5 சதவீத வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.
பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் மாநில அரசுப் பணிகளிலும் விளை யாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு இருக் கிறது. விளையாட்டு வீரர்களின் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்போது அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு பிரச்சினை இருக்காது. திறமையான வீரர் கள் விளையாட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறும் நிலை ஏற்படாது.
மாற்றமில்லாமல் ஏற்றம் காணமுடியாது
(நாளை பார்க்கலாம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT