Published : 03 Mar 2017 03:18 PM
Last Updated : 03 Mar 2017 03:18 PM
இந்திய அணி நெருக்கடியில் உள்ளது என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி பதிலளித்துள்ளார்.
2-வது டெஸ்ட் நாளை (சனிக்கிழமை) பெங்களூருவில் தொடங்குவதையடுத்து ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், “நிச்சயமாக இந்திய அணிக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும், இங்கு வருவதற்கு முன்பு இந்தியா 4-0 என்று தொடரை வெல்லும் என்றே கருதினார்கள், ஆனால் இப்போது 0-1 என்று பின் தங்கியுள்ளனர். எனவே அவர்கள் வெற்றி பெற்றேயாக வேண்டும், எங்களைப் பொறுத்தவரை இன்னும் ஒரு வெற்றி போதும் பார்டர்-கவாஸ்கர் டிராபியை தக்கவைக்க.
எனவே ஓன்று அல்லது இரண்டு செஷன்களில் நாங்கள் அதனை தக்க வைப்போம். நிச்சயம் இதனால் இந்திய அணி நெருக்கடியை உணரும்” என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக கூறிய விராட் கோலி, “நானா? அணியா? நாங்கள் நெருக்கடியில் உள்ளது போலவா தெரிகிறது? நான் மிகவும் ரிலாக்சாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன், புன்னகைக்கிறேன். அது அவரது கருத்து, அவர் விரும்புவதை தெரிவிக்கலாம். நம் திறமைகள் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. ஆஸ்திரேலியா என்ன கூறுகிறது என்பது பற்றி கவனம் செலுத்தத் தேவையில்லை.
செய்தியாளர்கள் சந்திப்பில் இத்தகைய உத்திகளை அவர்கள் கடைபிடிப்பதில் சிறந்தவர்கள் என்பதை நான் அறிவேன்.
கடந்த 2 ஆண்டுகளில் எத்தகைய கிரிக்கெட் ஆட்டத்தை ஆடி வந்தோமோ அதையேதான் தொடரப்போகிறோம். 4-வது போட்டி முடிந்தவுடன் தொடர் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்போம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக, அணியாக சிறப்பாக ஆட வேண்டும். நாங்கள் ஒரு வீரர் மீது (ஸ்மித்) மட்டுமே கவனம் செலுத்தவில்லை.
நாங்கள் கைக்கு வந்த வாய்ப்புகளை நழுவ விட்டாலும் பிரச்சினையில்லை, எவ்வளவு ரன்கள் நாங்கள் குவிக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம். நாங்கள் ஒரு வீரர் மீது மட்டுமே கவனம் செலுத்தவில்லை. கருத்துகளும், தலைப்புச் செய்திகளும் முக்கியமல்ல, இதை அடிப்படையாகக் கொண்டு நாங்களோ இல்லை அவர்களோ ஆடப்போவதில்லை” என்றார் விராட் கோலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT