Published : 15 Jan 2016 01:29 PM
Last Updated : 15 Jan 2016 01:29 PM
பெர்த் தோல்விக்கு பதிலடி கொடுக்க பிரிஸ்பனில் இன்று களமிறங்கிய இந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.
ரோஹித் சர்மா மீண்டும் அசாத்தியமான முறையில் பேட்டிங் செய்து 127 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 124 ரன்கள் எடுத்து துரதிர்ஷ்டவசமாக 43-வது ஓவரின் 2-வது பந்தில் பவுலர் கையில் பந்து பட்டு ஸ்டம்பைத் தாக்க ரன்னர் முனையில் ரன் அவுட் ஆனார். அதாவது இந்தியா 255/2 என்ற நிலையிலிருந்து கடைசியில் மடமடவென விக்கெட்டுகளை பறிகொடுத்து, மேலும் 53 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
ஷிகர் தவண் உண்மையில் அணியில் நீடிக்க வேண்டுமா என்ற கேள்வி தீவிரப்படுத்தப் படவேண்டும், அல்லது அவரை உட்கார வைக்க வேண்டும், நல்ல பேட்டிங் பிட்சில், லைன், லெந்துக்கு திணறி வரும் ஜொயெல் பாரிஸ் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் பந்து வீச்சில், ஷார்ட்டாக, அடிக்க வாகாக வந்த பந்தை சரியாக அடிக்காமல் மட்டையின் விளிம்பில் பட விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விக்கெட் எடுப்பதற்கான தகுதியுடைய பந்தே அல்ல அது. 6 ரன்களில் வெளியேறினார்.
பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 21.3 ஓவர்களில் 125 ரன்களைச் சேர்க்க, பிறகு 19 ஓவர்களில் ரோஹித், ரஹானே ஜோடி 3-வது விக்கெட்டுக்காக 121 ரன்களைச் சேர்த்தனர்.
விராட் கோலி 59 ரன்களை 4 பவுண்டரிகளுடன் 67 பந்துகளில் எடுத்து, அபாரமாக ஆடினார், தவறற்ற அனாயசமான இன்னிங்ஸ் ஆகும் இது. 2-வது ரன்னை ஓடும் போது ரன் அவுட் ஆனார். 2-வது ரன் தேவையில்லை என்றால் வேண்டாம் என்று கூறியிருக்கலாம், ஆனால் இரட்டை மனோநிலையில் தயக்கத்துடன் 2-வது ரன்னைத் தொடங்கி ரீச் செய்ய டைவ் அடித்தும் பயனில்லாமல் போனது.
தோனியின் சொதப்பலால் சரிவு...
தோனி களமிறங்கி 10 பந்துகளைச் சந்தித்தார், எரியும் அடுப்பின் மேல் நிற்பது போல் அவர் ஆடிய விதம் பார்க்க நன்றாக இல்லை. பவுண்டரி அடிக்க வேண்டிய பந்துகளை அவர் ஒன்று, இரண்டு ரன்களுக்காக பார்த்தது பரிதாபமாக இருந்தது. இப்படித்தான் ரோஹித் கடந்த போட்டியில் சிக்சராக மாற்றிய புல்டாஸ் ஒன்றையும் ஷார்ட் பிட்ச் ஒன்றையும் தோனி இந்தப் போட்டியில் வெறும் 2 ரன்களாக்கினார்.
பெரிய ஷாட்கள் ஆடமுடியவில்லை எனில் இளம் வீரர் மணிஷ் பாண்டேயை இவருக்கு முன்னதாக இறக்கியிருக்கலாமே? என்ற கேள்வி எழுகிறது, ரோஹித் ஆட்டமிழந்த பிறகு 20-22 பந்துகளுக்கு ஸ்லாக் ஓவரில் பவுண்டரியே வரவில்லை. கடைசியில் லெந்த் பந்தை குறிபார்த்து லாங் ஆனில் கேட்ச் கொடுத்து விட்டுச் சென்றார் தோனி. பாண்டே, ஜடேஜா, அஸ்வின் ரன் குவிப்பு அவசர கதியில் சொற்ப ரன்களில் வெளியேற தோனி அவுட் ஆனது காரணமாக அமைந்தது.
கடைசி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 75 ரன்களே வந்தது. இந்த ஆட்டத்தில் இந்த 10 ஓவர்களே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ரோஹித், கோலி, ரஹானே அபார இன்னிங்ஸ்:
ஆனால், இன்று மீண்டும் ரோஹித் அடித்த சதம் அற்புதமாகும். அவர் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்ததாகவே தெரிந்தது. இது அவருடைய 10-வது சதமாகும்.கடைசியில் ரோஹித் இருந்திருந்தால் ஸ்கோர் 320-325 ரன்களாக இருந்திருக்கும் ஆனால் ரஹானேயின் நேர் டிரைவ்வை பவுலர் பாக்னர் தடுக்க முயல அவரது விரல்களில் பட்டு ரன்னர் முனை ஸ்டம்பை பதம் பார்க்க ரோஹித் கிரீசுக்கு வெளியே இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ஷ்டகரமான விக்கெட்.
ஆனால், அதற்கு முன்னர் அதிர்ஷ்டம் ரோஹித் பக்கம் இருந்தது, ஜோயெல் பாரிஸ் பந்தில் ரோஹித் மட்டையை உரசிச் சென்று கேட்ச் ஆன ஒன்றை நடுவர் நாட் அவுட் என்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 5 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா 209, 138, 34, 171 தற்போது 124. 6-வது ஓவரில் கேன் ரிச்சர்ட்சனை அடித்த பளார் கட் பவுண்டரியும், பிறகு ஹை பிளிக்கில் பைன்லெக்கில் அடித்த சிக்சும் அவரது பார்மை காட்டியது. மீண்டும் இதே ரிச்சர்ட்சனை மிட்விக்கெட்டில் புல் சிக்ஸ் ஒன்றையும், பிறகு மிட் ஆஃபில் தூக்கி விட்ட சிக்சரும் மறக்க முடியாத அடியாகும்.
விராட் கோலி முதல் பவுண்டரியை அடிக்க 27 பந்துகள் எடுத்துக் கொண்டார், ஒன்றிரண்டாகச் சேர்த்தார் ஒரு பெரிய இன்னிங்ஸுக்கு அடித்தளம் அமைக்கப் பாடுபட்டதாக தெரிகிறது, 62 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். இன்னும் கொஞ்சம் அடித்து ஆடியிருக்கலாம். கடைசியில் 59 ரன்களில் ரன் அவுட்.
அஜிங்கிய ரஹானேயும் முதல் நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தால் என்றாலும் முதல் பவுண்டரியை 26-வது பந்தில்தான் அடித்தார். அதுவும் பாக்னரை அவர் தலைக்கு மேல் அடித்த பவுண்டரி அற்புதம். பிறகு ஜோயெல் பாரிசை இறங்கி வந்து மிட்விக்கெட்டில் பவுண்டரி விளாசினார். பிறகு ரிச்சர்ட்சனையும் இறங்கி வந்து கவரில் பவுண்டரி விளாசினார். பிறகு அடுத்த பந்தே லெக் திசையில் இடைவெளியில் தட்டிவிட்டு ஒரு பவுண்டரி விளாசி, 50 பந்துகளில் அரைசதம் எடுத்தார். பிறகு பாக்னரை இறங்கி வந்து லாங் ஆனில் அடித்த சிக்ஸ் மறக்க முடியாத ஷாட் ஆகும். கடைசியில் 49-வது ஓவரில், 80 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரஹானே. இதில் 6 பவுண்டரிகள் ஒருசிக்சர் அடங்கும்.
மொத்தத்தில் கடைசியில் சொதப்பியதால் இலக்கு 309 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இன்னும் சிறிது நேரத்தில் மழை கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் டக்வொர்த் லூயிஸ் முறை வரலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT