Published : 25 Jul 2016 03:10 PM
Last Updated : 25 Jul 2016 03:10 PM

அஸ்வினும் போத்தமும், பெரிய வெற்றியும்: சில புள்ளி விவரங்கள்

ஒரு டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளையும் சதமும் எடுத்த வகையில் அஸ்வின் 3-வது ஆல்ரவுண்டராக திகழ்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் அஸ்வின் உயர்தர ஆஃப் ஸ்பின் பந்து வீச்சை எட்டினார். இதனால் மே.இ.தீவுகள் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் சில புள்ளிவிவரங்கள் வருமாறு:

ஆசியாவுக்கு வெளியே இந்தியா இதற்கு முன் பெரிய வெற்றியைப் பெற்றது 2005-06-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக. அப்போது இன்னிங்ஸ் மற்றும் 86 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. அதன் பிறகு நேற்று இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசியாவுக்கு வெளியே இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்துள்ளது.

மே.இ.தீவுகளும் 2005-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணில் இன்னிங்ஸ் மற்றும் 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததுதான் இதுவரையிலான அந்த அணியின் மோசமான தோல்வியாக இருந்தது, தற்போது அதைவிடவும் பெரிய தோல்வியை அந்த அணி சந்தித்துள்ளது. மே.இ.தீவுகள் சொந்த மண்ணில் 5-வது முறையாக இன்னிங்ஸ் தோல்வி தழுவுகிறது.

ஆசியாவுக்கு வெளியே இந்தியா கடந்த 24 டெஸ்ட் போட்டிகளில் பெற்ற 2 வெற்றிகளையே பெற்றுள்ளது. ஒன்று ஜமைக்காவில் 2011-ல் பெற்ற வெற்றி, பிறகு 2014-ல் இசாந்த்சர்மாவின் அபாரப் பந்து வீச்சினால் லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற வெற்றி.

7/83 என்ற அஸ்வினின் பந்து வீச்சு மே.இ.தீவுகளில் இந்திய பவுலர் ஒருவரின் சிறந்த பந்து வீச்சாகும். 1952-53-ல் சுபாஷ் குப்தே போர்ட் ஆஃப் ஸ்பெயினில் எடுத்த 8/162 என்பதே இதற்கு முன் சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

அஸ்வின் உட்பட 3 வீரர்கள் இதுவரை ஒரே டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பேட்டிங்கில் சதம் கண்டுள்ளனர். 1920-21-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஜேக் கிரிகரி இந்தச் சாதனையை செய்துள்ளார், ஆனால் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் இயன் போத்தம் 1978-ல் லார்ட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிராகவும் உடனே 1979-80-ல் மும்பையில் இந்தியாவுக்கு எதிராகவும் 7 விக்கெட்டுகள் மற்றும் சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார், தற்போது அஸ்வின்.

அஸ்வின் இதுவரை விளையாடிய 33 டெஸ்ட் போட்டிகளில் 17 முறை இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதே 33 டெஸ்ட் போட்டிகளில் வக்கார் யூனிஸ் 19 முறை இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதே 33 டெஸ்ட் போட்டிகளில் வக்கார் 190 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அஸ்வின் 183 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதிவேக 200 விக்கெட்டுகள் சாதனைக்கு அஸ்வின் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியுள்ளது. இந்தச் சாதனையை வைத்திருப்பவர் ஆஸ்திரேலியாவின் கிளாரி கிரிம்மெட்.

2004-ல் சிட்னி டெஸ்ட் போட்டியில் சச்சின் இரட்டைச் சதம் அடிக்க அனில் கும்ப்ளே 141 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், அதே போல் இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இரட்டைச் சதம் எடுக்க அஸ்வின் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x