Published : 14 Nov 2013 03:00 PM
Last Updated : 14 Nov 2013 03:00 PM

ஓஜா, அஸ்வின் சுழலில் 182 ரன்களில் சுருண்டது மே.இ. தீவுகள்

இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் ஓஜா, அஸ்வின் ஆகியோரது அபாரமான பந்துவீச்சில், மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்களில் சுருண்டது.

மும்பையில் இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஃபீல்டிங் செய்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவெல் 48 ரன்களையும், பிராவோ 29 ரன்களையும் எடுத்தனர்.

சாமுவேல்ஸ் 19 ரன்களையும், சந்திரபால் 25 ரன்களையும் சேர்த்தனர்; டியோநரேன் 21 ரன்களை எடுத்தார். ரம்தீன் ஆட்டமிழக்காமல் 12 ரன்கள் சேர்த்தார். சமி, ஷில்லிங்ஃபோர்டு, பெஸ்ட் ஆகியோர் ரன் ஏதும் எடுக்கவில்லை. கேபிரியல் ஒரு ரன் எடுத்தார்.

இந்திய அணியின் சுழலில் சிக்கித் தவித்த மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 55.2 ஓவர்களில் 182 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீச்சிய ஓஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். புவனேஷ்வர் குமார், முகமது சமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

சச்சினுக்கு 'ஒயிட்வாஷ்' பரிசு?

இந்திய கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு இது 200-வது டெஸ்ட் போட்டியாகும். இந்தப் போட்டியோடு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதனால் இந்தப் போட்டி அவருக்கு மட்டுமின்றி, இந்திய ரசிகர்களுக்கும் மிகுந்த உணர்ச்சிபூர்வமான தருணமாகும்.

முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வென்று மேற்கிந்தியத் தீவுகளை ஒயிட் வாஷ் ஆக்கி சச்சினுக்கு பிரமாண்டமான முறையில் பிரியா விடை கொடுக்க திட்டமிட்டுள்ளது.

இந்த டெஸ்ட் இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியாக இருந்தாலும், சச்சின் மீதுதான் அனைவருடைய கவனமும் உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் கடவுளாகப் பார்க்கப்படும் சச்சின் தான் விளையாடிய காலம் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய ரசிகர்களை மட்டு மின்றி உலக ரசிகர்களையும் வியக்க வைத்தவர். 1989-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி, இந்திய அணியில் ஜாம்பவான்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பியதோடு, இனி யாராலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு விடைபெற இருக்கிறார் சச்சின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x