Published : 20 Jan 2015 04:10 PM
Last Updated : 20 Jan 2015 04:10 PM

பேட்ஸ்மென்களின் தோல்வி: தோனி சாடல்

பிரிஸ்பேன் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் சவாலின்றி சரணடைந்த இந்திய அணியின் தோல்வி குறித்து தோனி பேட்ஸ்மென்களை சாடியுள்ளார்.

பிரிஸ்பேன் போட்டியில் இந்தியா இன்று மீண்டும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு சரண் அடைந்து 153 ரன்களுக்குச் சுருண்டது.

ஸ்டீவ் ஃபின், இவர் அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சரியாக வீச முடியாமல் திணறினார். ஆனால் இன்று இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக எழுச்சி பெற்று ஒருநாள் கிரிக்கெட்டில் முதன் முதலாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன், கையும் நகராது, காலும் நகராத ஷிகர் தவன் விக்கெட்டை தனது முதல் பந்திலேயே வீழ்த்தினார்.

முதல் 6 ஓவர்களுக்கு பவுண்டரியே வரவில்லை. இன்னிங்ஸ் மொத்தமும் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களே அடிக்கப்பட்டது. ரஹானே ஒரு சிக்சரையும், பின்னி 2 சிக்சர்களையும் அடித்தனர். பந்துவீச்சில் புவனேஷ் குமார் 2 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து மோசமாகத் தொடங்கினார்.

உமேஷ் யாதவ் 6 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்தார். அக்சர் படேல் மட்டுமே சிக்கன விகிதத்தில் குறைவாக இருந்த வீச்சாளரானார்.

இந்நிலையில், தோல்விக்கு பேட்டிங்கைக் காரணமாகக் கூறிய தோனி, “டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பிறகு நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. பிட்ச் இரண்டக நிலைமையில் இருந்தது, பேட்ஸ்மென்கள் நன்றாகவே விளையாடவில்லை. கூட்டணியை அமைத்து ரன்களை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இது மட்டும் நடக்கவேயில்லை. அடிக்க வேண்டிய இடத்தில் பந்து விழுந்ததா, அடிக்க வேண்டியதுதான், இல்லையா, தடுத்தாட வேண்டும், கவனத்துடன் ஆடியிருக்க வேண்டும்.

ரன் விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டத்தில் கையில் விக்கெட்டுகள் இல்லை. உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக்க வேண்டியது அவசியம். 4 மாதங்கள் சொந்த நாட்டைப் பிரிந்து இருப்பது கடினமே. ஆனால் இதனை சரியான முறையில் நாம் நிர்வகிக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் என்பதை வலைப்பயிற்சிகளில் செய்ய வேண்டும். இல்லையேல் தேவைப்பட்டால் விடுதியில் காத்திருக்கட்டும்.”

இவ்வாறு சாடியுள்ளார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x