Published : 14 Jun 2017 09:50 PM Last Updated : 14 Jun 2017 09:50 PM
சாம்பியன்ஸ் கோப்பை இறுதியில் பாகிஸ்தான்: தாய் மண்ணில் இங்கிலாந்து பரிதாப தோல்வி
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பாக். அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
212 ரன்கள் என்ற சராசரியான இலக்கை விரட்ட பாகிஸ்தான் பெரிதாக சிரமப்படவில்லை. முதல் ஓவரிலேயே அதிரடியாக சிக்ஸர் அடித்தார் துவக்க வீரர் ஃபகார் ஸமான். இவரும், அசார் அலியுன் இணைந்து எந்த அழுத்தமுமின்றி ஒரே வேகத்தில் ரன் சேர்க்க ஆரம்பித்தனர்.
ஃபகார் ஸமான் 50 பந்துகளில் அரை சதம் எட்ட, அசார் அலி 68 பந்துகளில் அரை சதம் எட்டினார். இங்கிலாந்தின் எந்த பந்துவீச்சாளரும் பாக். அணியை சோதிக்கவில்லை. பவுண்டரிகளும், சிங்கிள்களும் சீராக வர பாக். வேகமாக இலக்கை நெருங்கியது. ஒரு வழியாக 22-வது ஓவரில் ஸமான் 57 ரன்களுக்கு ரஷீதின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் அந்த நேரத்துக்கு பாகிஸ்தான் பாதி இலக்கை தாண்டியிருந்தது.
ஸமான் விட்டுச் சென்ற பணியை பாபர் அசாம் தொடர்ந்தார். இங்கிலாந்து அணியின் நம்பிக்கை கிட்டத்தட்ட நொறுங்கியே போனது. 33-வது ஓவரில் அசார் அலி 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் அப்போது பாக் அணி 173 ரன்களை சேர்த்துவிட்டது. தேவை 106 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே. ஆட்டம் கிட்டத்தட்ட இங்கிலாந்தின் கைவிட்டுப் போனது.
அடுத்து களமிறங்கிய முகமது ஹஃபீஸ் சற்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த பாகிஸ்தான் 37.1 ஒவர்களிலேயே வெற்றி இலக்கைக் கடந்தது. ஹஃபீஸ் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம். பாபர் அசாம் 38 ரன்களை எடுத்து களத்தில் இருந்தார்.
தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னால், கோப்பையை வெல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அனிகளில் இங்கிலாந்தும் ஒன்று. ஆனால் இன்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தாய்மண்ணில் தோல்வியைத் தழுவியது. குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் பரிமளிக்காமல் ஏமாற்றம் தந்தார்.
WRITE A COMMENT