Published : 11 Oct 2014 06:38 PM
Last Updated : 11 Oct 2014 06:38 PM

கோலி, ரெய்னா, தோனி அரைசதங்களில் இந்தியா 263 ரன்கள்

டெல்லியில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்துள்ளது.

கடைசி ஓவரை ஜெரோம் டெய்லர் வீச முதலில் புல் ஷாட்டில் 2 ரன் எடுத்த தோனி, அடுத்த ஓவர் பிட்ச் பந்தை லாங் ஆனில் மிகப்பெரிய சிக்சருக்குத் தூக்கி அடித்தார். பிறகு அடுத்த பந்து எழும்பி வர அதனை ஹூக் செய்து பைன் லெக் திசையில் பவுண்டரி அடித்து அரை சதம் கண்டார்.

மொத்தம் 40 பந்துகளைச் சந்தித்த தோனி 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

முன்னதாக 72/3 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த ரெயனா, கோலி அரைசதம் எடுத்ததோடு 4வது விக்கெட்டுக்காக 105 ரன்களைச் சேர்த்தனர். இருவருமே 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெரோம் டெய்லர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தப் பிட்சில் 263 ரன்களைத் துரத்துவது கடினம் என்றே தெரிகிறது. ஆனால் இந்திய பந்து வீச்சு...?

தொடக்கத்தில் ஷிகர் தவன், ரஹானே எச்சரிக்கையுடன் ஆடினர். இதனை எச்சரிக்கை என்பதை விட கடந்த ஆட்டத்தின் தோல்வியின் எதிரொலியால் விளைந்த தேவையற்ற தயக்கமாகவே தெரிந்தது. 9 பந்துகளைச் சந்தித்த தவன் 1 ரன்னை மட்டுமே எடுத்து சுத்தமாக ஆடும் மனநிலையில் இல்லாதது போல் தென்பட்டார். அப்போதுதான் டெய்லர் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் செய்து உள்ளே கட் செய்தார் மட்டைக்கும், பேடிற்கும் இடையே இடைவெளியுடன் ஆடிய தவான் பந்தை தடுக்க முடியவில்லை பவுல்டு ஆனது.

அதன் பிறகு ராயுடு களமிறக்கப்பட்டார். கோலி அல்ல. ராயுடுவும், ரஹானேயும் இணைந்தனர். ராயுடு, ரவி ராம்பால் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். அடுத்த பவுண்டரி 9வது ஓவரில்தான் வந்தது. ராம்பால் பந்தை ரஹானே தனது முதல் பவுண்டரியாக அடித்தார். 10 ஓவர்களில் 37 ரன்களே வந்தது. அதோடு ரஹானே சரி. 12 ரன்கள் எடுத்து டேரன் சாமி வீசிய மெதுபந்தை கணிக்காமல் டிரைவ் ஆடி கவர் திசையில் ஸ்கூப் செய்து அவுட் ஆனார். ராயுடு கோலி இணைந்தனர். ஸ்கோர் 72 ரன்களை எட்டிய போது ராயுடு 32 ரன்கள் எடுத்த நிலையில் சுலைமான் பென் வீசிய இடது கை ஸ்பின் பந்து சற்றே திரும்ப எட்ஜ் செய்து சிக்கினார்.

72/3 என்ற நிலையில் கோலி, ரெய்னா இணைந்தனர். கோலி டெய்லரை அபாரமான 2 பவுண்டரிகள் அடித்தார். இரண்டாவது பவுண்டரி அபாரமான பிளேஸ்மெண்ட். மிட் ஆனுக்கும் மிட் விக்கெட்டுக்கும் இடையே இருந்த சிறிய இடைவெளியில் பந்தை செலுத்தி அடித்தார். டிவைன் பிராவோவை கவர் திசையில் பவுண்டரி அடித்து ரெய்னா தனது பவுண்டரி கணக்கைத் தொடங்கினார்.

இடையில் தேவையில்லாமல் கோலி, சாமுயெல்ஸிற்கு ஒரு மைடன் ஓவர் விட்டுக் கொடுத்தார். ரெய்னா 14 ரன்களில் இருந்த போது சாமுயெல்ஸ் பந்தை கவர் திசையில் காற்றில் ஆட டிவைன் பிராவொ இடது புறம் இருகைகளை நீட்டிய படி பாய்ந்தார் ஆனால் கேட்ச் பிடிக்க முடியவில்லை. பிறகு பிராவோவை 2 பவுண்டரிகளை ஒரே ஓவரில் அடித்தார்.

இருவரும் பிறகு நிதானமாக, அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்துக் கொண்டு சென்றனர். 32வது ஓவரில் பென் பந்தை மேலேறி வந்து டீப் மிட்விக்கெட்டில் மிகப்பெரிய சிக்சர் அடித்தார் ரெய்னா. பிறகு ரவி ராம்பால் பந்தை எக்ஸ்ட்ரா கவரில் அடித்த சிக்ஸர் அபாரம். இதன் மூலம் இருவரும் 100 ரன்களைச் சேர்த்தனர்.

இருவரும் 62 ரன்களில் சிறைய இடைவெளியில் ஆட்டமிழந்தனர். பவர் பிளேயில் 29 ரன்களையே எடுக்க முடிந்தது. கோலி பவர் பிளே முடிந்த நிலையில் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 6 ரன்கள் எடுத்து டெய்லரின் வேக-மெது ஆஃப் ஸ்பின் பந்தில் பவுல்டு ஆனார். தோனி இருந்ததால் கடைசி 5 ஓவர்களில் 44 ரன்கள் எடுக்க முடிந்தது. தோனி தன் பாணியில் நிதானமாகத் தொடங்கி கடைசியில் 40 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து இந்தப் பிட்சில் வெற்றிக்கான ஸ்கோரை இலக்காக நிர்ணயித்துள்ளார். ஆனாலும் 10 அல்லது 15 ரன்கள் இந்தியா குறைவாக எடுத்துள்ளதாகவே தெரிகிறது.

மேற்கிந்திய அணியில் டேரன் பிராவோ, டிவைன் ஸ்மித் களமிறங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x