Published : 11 Oct 2014 08:38 PM
Last Updated : 11 Oct 2014 08:38 PM
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
லலித் மோடியின் இடத்தில் பாஜக தலைவர் அமின் பதான் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற சர்ச்சைக்குரிய பொதுக்குழுக் கூட்டத்தில் அமின் பதான் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் கீழ் உள்ள 33 மாவட்ட கிரிக்கெட் சங்கங்களில் 23 சங்கங்கள் லலித் மோடியை பதவியிறக்கம் செய்யும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பிசிசிஐ-யினால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள லலித் மோடி கடந்த மே மாதம் பெரும்பான்மை வாக்குகள் பெற்று ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராகத் தேர்வானார்.
லலித் மோடி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்குத் தடை விதித்தது. இதனால் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் எந்த வித பிசிசிஐ தொடர்பான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை தோன்றியது.
இப்போது லலித் மோடி தூக்கி எறியப்பட்டதையடுத்து பிசிசிஐ-யின் தடை விலகும். மேலும் சவாய் மான்சிங் ஸ்டேடியத்திற்கு ஐபிஎல் போட்டிகளும் சர்வதேச போட்டிகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமின் பதானுக்கு வசுந்தரா ரஜே சிந்தியாவின் ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகிறது. பிசிசிஐ-யுடன் முரண்படாமல் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் செயல்படுவதை அவர் விரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து லலித் மோடி நிச்சயம் சட்ட உதவியை நாடுவார் என்று தெரிவதால் இப்போது அதிகாரத்தைப் பிடித்துள்ள அமின் பதான் குழு விரைவில் தேர்தலை நடத்தி சட்டப்படி ஆவன செய்ய முயலும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT