Published : 06 Jul 2016 03:49 PM
Last Updated : 06 Jul 2016 03:49 PM
சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒரே டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜோர்டான், டாஸன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இலங்கை தரப்பில் குணதிலக மட்டுமே அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் அதிரடி வீரர் ஜேசன் ராய் ரன் எடுக்காமல் பவுல்டு ஆக, ஜோஸ் பட்லர் (73 நாட் அவுட்) இயன் மோர்கன் (47 நாட் அவுட்) இலக்கை 17.3 ஓவர்களில் எட்டினர். ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரராக இறக்கப்பட்டது எதிர்பார்க்காததே.
பட்லரும் எதிர்பார்ப்புக்கு இணங்க 49 பந்துகளில் 3 பவுண்டரிகளையும் 4 அருமையான சிக்ஸர்களையும் தனது இன்னிங்ஸில் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அறிமுக டி20 போட்டியில் ஆடிய உள்ளூர் வீரரான டாஸன் 4 ஒவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
மோர்கனும், பட்லரும் இணைந்து உடைக்க முடியாத 3-வது விக்கெட்டுக்காக 114 ரன்களை 79 பந்துகளில் விளாசினர். டாஸன் தனது 4 ஓவர்களில் 3 ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த 58/1 என்று இருந்த இலங்கை 82/5 என்று ஆனது. நன்றாக தொடங்கிய குணதிலக 26 ரன்களிலும் மெண்டிஸ் 23 ரன்களிலும் கேப்டன் மேத்யூஸ் 11 ரன்களிலும் டாஸன் ஓவரில் ஆட்டமிழக்க 81/4 என்று ஆன இலங்கை ஷனகாவை 1 ரன்னில் ஜேசன் ராய், பட்லர் கூட்டணியில் ரன் அவுட்டில் இழக்க இலங்கை 82/5 என்று தத்தளித்தது. டாஸன் பிட்ச் பற்றிய தனது உள்ளூர் அனுபவத்தைத் திறமையாகப் பயன்படுத்திக் கொண்டார். நல்ல வேகத்துடன் வீடும் டாஸன் அதனுடன் வேகம் குறைந்த பந்துகளையும் கலக்க இலங்கை பேட்டிங் தடுமாறியது.
கிறிஸ் ஜோர்டான் தனது பந்து வீச்சில் சந்திமால் (23), மஹரூப், பிரதீப் ஆகியோரை வீழ்த்தினார்.
இலக்கைத் துரத்திய இங்கிலாந்து ஜேசன் ராய், வின்ஸ் விக்கெட்டுகளை இழந்து 30/2 என்று ஆனது. இலங்கைக்கு இத்தருணத்தில் வெற்றி குறித்த நப்பாசை ஏற்பட்டிருக்கலாம், ஆனால் பட்லர், மோர்கன் அதனை விரட்டி அடித்தனர். ஆனால் 5 ரன்களில் பட்லர் இருந்த போது பட்லர் மட்டை விளிம்பில் லேசாகப் பட்டது போல் தெரிந்த பந்தை சந்திமால் பிடித்தார், முறையீடை நடுவர் ஏற்கவில்லை. ஆனால் இது எட்ஜ் என்றுதான் தெரிகிறது.
இலங்கை தரப்பில் மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிக்கனமாக வீசினார். மற்றபடி இலங்கை பந்து வீச்சில் சொல்லிக் கொள்ள எதுவுமில்லை.
டெஸ்ட், ஒருநாள், டி20 என்று அனைத்திலும் தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் இலங்கை அணி திரும்புகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT