Last Updated : 04 Sep, 2016 11:33 AM

 

Published : 04 Sep 2016 11:33 AM
Last Updated : 04 Sep 2016 11:33 AM

அமெரிக்க ஓபனில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 4-வது சுற்றில் நுழைந்தார் நடால்; ரோகன் போபண்னா ஜோடி தோல்வி, சானியா ஜோடி அசத்தல்

அமெரிக்க ஓபன் டென்னிஸில் ஜோகோவிச், ரபேல் நடால், ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வியடைந்தது. அதேவேளையில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, இவான் டுடிக் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில், முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச், 34 வயதான ரஷ்யாவை சேர்ந்த மிகைல் யோஷ்னியுடன் மோதி னார்.

தரவரிசையில் 61-வது இடத்தில் உள்ள யோஷ்னி முதல் செட்டில் 2-4 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்த போது காயம் அடைந்தார். இடது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட அவர் போட்டியில் இருந்து விலகினார்.

வெறும் 32 நிமிடங்கள் மட்டுமே நடை பெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் அவர் 84-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் கைல் எட்மன்டை சந்திக்கிறார்.

எட்மன்ட் தனது 3-வது சுற்றில் அமெரிக்காவின் ஜான் ஸ்நரை 6-4, 3-6, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். கிராண்ட் ஸ்லாம் போட்டி களில் 4-வது சுற்றுக்கு முதன்முறையாக முன்னேறி உள்ளார் எட்மன்ட்.

ரபேல் நடால்

4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் ஆந்த்ரே குஸ்நெட்சோவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபனில் நடால், முதன்முறையாக தற்போது தான் 4-வது சுற்றில் கால்பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சுற்றில் நடால், 24-ம் நிலை வீரரான பிரான்சின் லூக்காஸ் பவுயில்லேவை எதிர்கொள்கிறார்.

ரின் சிலிக் தோல்வி

7-ம் நிலை வீரரும், 2014-ம் ஆண்டு சாம்பியனுமான குரோஷியாவின் மரின் சிலிக் 4-6, 3-6, 3-6 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜேக் சோக்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அமெரிக்க ஓபனில் ஜேக், 4-வது சுற்றில் நுழைவது இதுவே முதன்முறை.

இந்த சுற்றில் அவர் 9-ம் நிலை வீரரான பிரான்சின் சோங்காவுடன் மோத உள்ளார். சோங்கா தனது 3-வது சுற்றில் 6-3, 6-4, 7-6 என்ற நேர் செட்டில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்தார்.

சிபுல்கோவா வெளியேற்றம்

மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 9-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலினி வோஸ்னியாக்கி, 6-3, 6-1 என்ற நேர் செட்டில் 58-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் மோனிகா நிகுலெஸ்குவை எளிதாக வீழ்த்தினார்.

7-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ராபர்ட்டா வின்சி 6-0, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் 84-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஹாரினா வித்தோப்டை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 12-ம் நிலை வீராங்கனையான டோமினிகா சிபுல்கோவா 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் 99-வது இடத்தில் உள்ள உக்ரைனின் சுரென்கோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

2-ம் நிலை வீராங்கனையும் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான ஏஞ்சலிக் கெர்பர் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் 158-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் சிசி பெலிஸை எளிதாக தோற்கடித்து 4-வது சுற்றில் நுழைந்தார்.

22-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா உடன் நடைபெற்ற ஆட்டத்தில் 14-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா விட்டோவா 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 4-வது சுற்றில் கெர்பர்-விட்டோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

போபண்ணா ஜோடி தோல்வி

ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, டென்மார்க்கின் நில்சன் பிரெட்ரிக் ஜோடி 2-6, 6-7 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் பிரையன் பாக்கர், நியூஸிலாந்தின் மார்கஸ் டேனியல் ஜோடியிடம் தோல்வியடைந் தது.

இதேபோல் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜெர்மனியின் ஆந்த்ரே பெஜிமான் ஜோடி தங்களது முதல் சுற்றில் 6-2, 5-7 4-6 என்ற செட் கணக்கில் போராடி பிரான்சின் ஸ்டீபன் ராபர்ட், இஸ்ரேலின் டுடி செலா ஜோடியிடம் வீழ்ந்தது.

சானியா ஜோடி அசத்தல்

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் டொனால்டு யங், டெய்லர் டவுன்சென்ட் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

ரோகன் போபண்ணா கலப்பு இரட்டையர் பிரிவில் அசத்தினார். கனடாவின் கபரியலாவுடன் இணைந்து விளையாடிய அவர் முதல் சுற்றில் 7-5, 6-4 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் ருபின், ஜெமி லோயிப் ஜோடியை வென்றது. இந்த ஆட்டம் 67 நிமிடங்களில் முடிவடைந்தது.

மகளிர் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் பிரன்ஜலா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் விக்டோரியா எம்மாவை தோற்கடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x