Published : 25 Jan 2017 05:20 PM
Last Updated : 25 Jan 2017 05:20 PM

வைடு யார்க்கர்கள் வீச வேண்டாம்: எச்சரிக்கும் தோனியின் பேட்டிங் சிறப்புப் பயிற்சி

கேப்டன் பொறுப்பை உதறியது முதல் தோனி மிகவும் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் ஆட்டத்தை ஆடி வருகிறார். இதன் வெளிப்பாடாக அவரது அதிரடியைக் கட்டுப்படுத்த எதிரணிகள் கடைபிடிக்கும் ஆஃப் திசை வைடு யார்க்கர்கள் உத்தியை முறியடிக்க சிறப்புப் பயிற்சியை தோனி மேற்கொண்டு வருகிறார்.

2011 ஆஸ்திரேலியா தொடர் முதலே தோனிக்கு வைடு யார்க்கர்களை வேகப்பந்து வீச்சாளர்களும், ஸ்பின்னர்களுமே கூட வீசி வந்தனர், என்னதான் வாரிக்கொண்டு அடித்தாலும் கவர், மிட் ஆஃபைத் தாண்டாது, ஒரு ரன் கிடைக்கும், இதனால் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் குறைந்ததோடு, வெற்றிகரமான விரட்டல் வீரர், நிறைவு செய்யும் வீரர் என்ற பெயர் தோனியிடமிருந்து தொலைந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் கான்பூரில் நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்த ‘வைடு யார்க்கர்’ உத்தியை முறியடிக்க சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டார் தோனி.

இந்திய அணியில் தற்போது வேகமான யார்க்கர்களை வீசி வரும் ஜஸ்பிரீத் பும்ராவை அழைத்து வைடு யார்க்கர்களை வீசச் செய்தார் தோனி.

அதாவது ஆஃப் ஸ்டம்பிலிருந்து பக்கவாட்டில் தன்னுடைய பேட் நீளத்துக்கு ஒரு இடத்தில் வெள்ளை கூகபரா பந்தை அந்த இடத்தில் வைத்தார். அதாவது பும்ரா வீச வேண்டிய லைனைக் குறிக்கும் வைடு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான யார்க்கரை வீச வேண்டிய அடையாளம் அது.

பிறகு பும்ராவை அந்த இடத்தில் தொடர்ச்சியாக வீசுமாறு தோனி அறிவுறுத்தினார். ஆனால் அந்த வைடு யார்க்கர்களை அடித்து நொறுக்கினால் பயன் தராது என்பதால் அதனை மட்டையால் திருப்பி விடும் பயிற்சியை மேற்கொண்டார் தோனி.

டி20, ஒருநாள் கிரிக்கெட்டில் டீப் பாயிண்ட், டீப் தேர்ட் மேன் திசையில் கடைசி ஓவர்களில் வீரர்களை நிறுத்த மாட்டார்கள். அங்கு பந்து செல்லாதவாறு பவுலர்கள் வீச வேண்டும். அதற்கு வைடு யார்க்கரும் ஒரு உத்தி. இந்தப் பந்தை இடைவெளி இருக்கும் அப்பகுதியில் திசைதிருப்பி விட்டால் 4 ரன்கள் கிடைக்கும். இதைத்தான் தோனி பயிற்சி செய்து வருகிறார்.

இது குறித்த சிறிய வீடியோவை பிசிசிஐ.டிவி வெளியிட்டுள்ளது.

இதில் தோனி, பும்ரா வீசிய வைடு யார்க்கர்களை கற்பனையான பாயிண்ட் பீல்டருக்கு இடது புறம் திருப்பி விட்டு ஷாட் ஆடிக்காட்டினார்.

கேப்டனாக இருக்கும் போது ஏகப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்புகள், அணிக்கூட்டங்கள், பயிற்சியாளருடன் சந்திப்பு என்று பயிற்சிக்கு நேரமில்லாததால் அவரது பேட்டிங் பாதித்தது, ஆனால் தற்போது தனது முழு ரேஞ்ச் ஷாட்களையும் ஆடும் முனைப்புடன் தனது எதிரியான வைடு யார்க்கர்களையும் பதம் பார்க்க களமிறங்கிவிட்டார் தோனி. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம்.

எதிரணியினர் இந்த ஷாட்டைக் கட்டுப்படுத்த பீல்டரை நிறுத்தினால் தோனி பலமாக ஷாட்களை ஆடும் பகுதியில் பீல்டரை நிறுத்த வாய்ப்பில்லை, எனவே இதில் தோனி இரட்டை உத்தியைக் கடைபிடிக்கிறார். இந்த ஷாட் வெற்றியடைந்தால் நிச்சயம் அவரைக் கட்டுப்படுத்த முடியாது, அப்படி பீல்டரை நிறுத்தி கட்டுப்படுத்தினால் காலியாக இன்னொரு இடம் தோனி வெளுத்துக் கட்டும் ஒரு இடமாக இருக்கும்.

நாளை கான்பூரில் தோனி இந்த வைடு யார்க்கரை எப்படி ஆடுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x