Published : 31 Oct 2013 06:54 PM
Last Updated : 31 Oct 2013 06:54 PM

இந்திய டெஸ்ட் அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம்

அடுத்த ஆண்டு தொடர்ச்சியாக நடைபெறும் சர்வதேச போட்டிகளைக் கருத்தில்கொண்டே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இதில், மூத்த வீரர்களான வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

அணியின் தேர்வு குறித்து பிசிசிஐ செயலர் சஞ்சீவ் பட்டேல் கூறும்போது, "தற்போது இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தொடர்கள், 2015 உலகக் கோப்பை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்திய ஒருநாள் அணி குறித்து இன்னும் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது" என்றார்.

இந்தத் தொடரில், மூத்த வீரர்களான வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது கவனத்துக்குரியது.

சச்சின் முடிவு... ரோஹித் தொடக்கம்!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் ஷர்மா இடம்பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் கடைசி டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கவிருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இப்போது டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுவரை 107 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதேபோல், முகமது சமியும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மூத்த பேட்ஸ்மேன்களான வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர் மற்றும் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஜடேஜாவுக்கு பதில் அமித் மிஸ்ரா

தோள்பட்டையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை. இரு வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர் கேட்டுக்கொண்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருடைய பெயர் பரிசீலிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனால், சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அஸ்வின், ஓஜா ஆகியோருடன் அமித் மிஸ்ராவும் இடம்பெறுகிறார்.

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இந்த டெஸ்ட் தொடரோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 6 முதல் 10-ம் தேதி வரை கொல்கத்தாவிலும், 2-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 14 முதல் 18 வரை மும்பையிலும் நடைபறவுள்ளன.

அணி விவரம்:

எம்.எஸ்.தோனி (கேப்டன்)

ஷிகர் தவாண்

முரளி விஜய்

சேதேஷ்வர் புஜாரா

சச்சின் டெண்டுல்கர்

விராட் கோலி

ரோஹித் சர்மா

அஜிங்க்ய ரஹானே

அஸ்வின்

புவனேஸ்வர் குமார்

பிரக்யான் ஓஜா

அமித் மிஸ்ரா

உமேஷ் யாதவ்

முகமது சமி

இஷாந்த் சர்மா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x