Published : 16 Oct 2014 10:56 AM
Last Updated : 16 Oct 2014 10:56 AM
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வழி நடத்த மிஸ்பா உல் ஹக்கே சரியான நபர். அவருக்கு எனது முழு ஆதரவையும் அளிப்பேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்ரவுண்டரான ஷாகித் அப்ரிதி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தற்போதைய கேப்டனான மிஸ்பா உல் ஹக், தன்னால் ரன் குவிக்க முடியாததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட அப்ரிதி, போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, உலகக் கோப்பையில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணிக்கு தலைமை வகிக்க தனக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்ஷிப் தொடர்பான சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அப்ரிதியின் சார்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கேப்டன்ஷிப் பற்றி கருத்து தெரிவித்தது தொடர்பான தனது நிலைப்பாட்டை அப்ரிதி தெளிவுபடுத்த விரும்புகிறார் என குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் அப்ரிதி கூறியிருப்பதாவது:
2015 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலைமை வகிக்க மிஸ்பாதான் சரியான நபர் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேப்டனாக இருந்தபோது எனக்கு கீழ் விளையாடிய மிஸ்பா எனக்கு ஆதரவாக இருந்ததைப் போல, அவருக்கு கீழ் விளையாடிய போதெல்லாம் அவருக்கு ஆதரவாக இருந்திருக்கிறேன்.
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பலமுறை இருந்துவிட்டேன். என்னை நம்புங்கள். கேப்டன் பதவி என்பது ரோஜா படுக்கையல்ல என்பதை பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த அனைவருமே அறிவார்கள். கேப்டன் பதவி என்பது கவுரவம் மட்டும்தான். அதைத்தாண்டி அதிலிருந்து வேறு எதுவும் கிடைக்காது. கேப்டன் பதவியில் இருக்கிறபோது பாராட்டும், வரவேற்பும் எப்போதாவதுதான் கிடைக்கும். ஆனால் அடிக்கடி விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும்.
நான் ஏற்கெனவே சொன்னதுபோல, பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்காக தொடர்ந்து எனது பங்களிப்பை செய்வேன். கேப்டன் மிஸ்பா உல் ஹக்கிற்கு என்னால் முடிந்த அளவுக்கு ஆதரவாக இருப்பேன் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என அப்ரிதி குறிப்பிட்டுள்ளார். அப்ரிதி மிஸ்பாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து அப்ரிதி மீதான ஒழுங்கு நடவடிக்கை திட்டத்தைக் கைவிடுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அப்ரிதியின் கருத்து வருத்தத்துக்குரியது மட்டுமல்ல துரதிருஷ்டவசமானதும்கூட. அதுபோன்று பேசுவதை அப்ரிதி தவிர்க்க வேண்டும்” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹார்யார் கான் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT