Published : 20 Aug 2016 03:53 PM
Last Updated : 20 Aug 2016 03:53 PM

முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை 263 ரன்களுக்கு சுருட்டியது நியூஸிலாந்து

டர்பனில் நேற்று தொடங்கிய தென் ஆப்பிரிக்கா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 2-ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா தனது மீதமுள்ள 2 விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களை எடுத்துள்ளது.

நேற்று போதிய வெளிச்சமின்மையால் 77.4 ஓவர்களில் ஆட்டம் முடிக்கப்பட்ட போது தென் ஆப்பிரிக்கா 236/8 என்று இருந்தது, இன்று காலை வந்தவுடனேயே டேல் ஸ்டெய்ன் 2 ரன்களில் சவுதி பந்தில் பவுல்டு ஆனார். ரபாதா 32 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ பியட் 9 ரன்களில் போல்ட்டிடம் வீழ்ந்தார். 87.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருண்டது.

நியூஸிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் டிரெண்ட் போல்ட், வாக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த சாண்ட்னர் மிக முக்கியமான கட்டத்தில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தற்போது நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது கப்தில், லாதம் ஆடி வருகின்றனர்.

நேற்று டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளேசிஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். பிட்ச் பசுந்தரையாக இருந்தது, வானிலையும் மேகமூட்டமாக இருந்ததால் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகின. தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் குக் 53 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து டிரெண்ட் போல்ட்டின் லேட் ஸ்விங்கிற்கு எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது ஆட முடியாத பந்து. ஏனெனில் பந்து உள்ளே வந்து லேட்டாக ஸ்விங் ஆனது ஒன்றும் செய்ய முடியவில்லை. டீன் எல்கர் 19 ரன்களில் 3 பவுண்டரிகளுடன் நன்றாக ஆடி வந்த நிலையில் பிரேஸ்வெல்லின் பொறியில் சிக்கினார், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஃபுல் லெந்த் பந்து டிரைவ் ஆடு ஆடு என்று ஈர்க்கும் பந்து ஆடினார் எல்கர் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு டுமினி, ஆம்லா இணைந்தனர், ஆம்லா அற்புதமாக ஆடினார், நல்ல உத்தியுடன் கூடிய தடுப்பாட்டம் அதே வேளையில் அருமையான டிரைவ்கள் என்று 71 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார், டுமினி 14 ரன்கள் எடுத்து வாக்னர் பந்தில் வெளியேறினார், ஷார்ட் பிட்ச் பந்தை அடிக்கப்போய் டாப் எட்ஜ் ஆனது.

ஆம்லா செட்டில் ஆகிவிட்ட நிலையில் கேன் வில்லியம்ன்சன் மீண்டும் போல்ட்டை அழைத்தார், பந்து அபாரமான இன்ஸ்விங்கர், முன்னால் வந்து ஆட வேண்டும், ஆம்லா வரவில்லை. மட்டையின் உள்விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. 106/4 என்ற நிலையில் கேப்டன் டு பிளேஸிஸ் மற்றும் தெம்பா பவுமா சேர்ந்து 54 ரன்களைச் சேர்த்தனர். டு பிளேசிஸ் 84 பந்துகளில் 23 ரன்களை எடுத்து வாக்னர் பந்தில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேற 102/2 என்ற நிலையிலிருந்து தென் ஆப்பிரிக்கா 160/5 என்று ஆனது.

தெம்பா பவுமா உண்மையில் கிரிக்கெட் உலகின் எதிர்கால ‘ஸ்டைலிஷ்’ பேட்ஸ்மென் என்ற பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது, அவரது நேர் டிரைவ்கள், ஆஃப் டிரைவ், ஆன் டிரைவ் பார்க்க மிக மிக அழகான ஒன்று. மட்டையை பவுலருக்குக் காண்பிக்கிறார். 90 பந்துகளில் இவர் 7 அருமையான பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாண்ட்னரிடம் எல்.பி.ஆனார். குவிண்டன் டி காக் அபாயகரமாக ஆடினார் ஒரு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற சவுதியின் புல் லெந்த் பந்தை மிட் ஆனுக்கும் நேர் பவுண்டரிக்கும் இடையில் அடித்த ஷாட் கிளாஸ்.

சாண்ட்னரை இரண்டு பவுண்டரிகள் மேலேறி வந்து அடித்தார், முன்னதாக அவர் போல்ட், வாக்னர் ஆகியோர் பந்துகளை எதிர்த்தாக்குதல் முறையில் தலா 2 பவுண்டரிகளை அடித்தார். 33 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் 3-வது முறையாகவும் மேலேறி வந்து அடிக்க முயன்றார் பந்தை சாண்ட்னர் சற்றே வைடாக இழுத்து விட்டார், ஷாட்டைச் செக் செய்யவில்லை, அடித்தார் மிட் ஆனில் கேட்ச் ஆனது, தனது விக்கெட்டை தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார் இந்த மாடர்ன் டே கில்கிறிஸ்ட். டி காக், பவுமா ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்தினார் சாண்ட்னர். பிலாண்டரை வாக்னர் வீழ்த்தினார். இன்று காலை ஸ்டெய்ன், பியட் ஆகியோரும் அவுட் ஆக தென் ஆப்பிரிக்கா 263 ரன்களுக்குச் சுருண்டது.

நியூஸிலாந்து சற்று முன் லாதம் விக்கெட்டை டேல் ஸ்டெய்னிடம் இழந்து 7 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டெயின் இன்று வீசுவதைப் பார்த்தால் நியூஸிலாந்துக்கு மிகமிகக் கடினம் போல்தான் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x