Published : 21 Oct 2013 06:11 PM
Last Updated : 21 Oct 2013 06:11 PM

நம்ம ஊரு நட்சத்திரம் சத்தியன்

5 வயதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் அடியெடுத்து வைத்து இப்போது சர்வதேச அளவிலான போட்டிகளில் சப்தமின்றி வெற்றிகளைக் குவித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த 20 வயது சத்தியன்.

அம்மா மலர்க்கொடியால் டேபிள் டென்னிஸ் களமிறக்கிவிடப்பட்ட சத்தியன், சகோதரிகள் திவ்யா, ரேகா ஆகியோருடன் இணைந்து எஸ்டிஎம்-சந்திரா அகாதெமியில் தனது பயிற்சியைத் தொடங்கினார். அடுத்த ஓர் ஆண்டிலேயே டேபிள் டென்னிஸில் அபார வளர்ச்சி கண்ட சத்தியன், 2000-ல் சேலத்தில் நடைபெற்ற மினி கேடட் போட்டியில் சாம்பியன் ஆனார்.

அதன்பிறகு தேசிய அளவிலான ஜூனியர் பிரிவு போட்டிகளில் ஜொலிக்க ஆரம்பித்த சத்தியன், 2005-ல் கத்தார் ஜூனியர் ஓபன் போட்டியில் தனி நபர் பிரிவில் வெண்கலமும், அணி பிரிவில் வெள்ளியும் வென்றார். அதே ஆண்டில் சீனாவில் நடைபெற்ற உலக ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தனி நபர் பிரிவில் வெண்கலமும், அணி பிரிவில் தங்கமும் வென்றார்.

இதன்பிறகு ஈரான், கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் வாகை சூடிய சத்தியன், 2006-ல் தேசிய சப்-ஜூனியர் போட்டியில் சாம்பியன் ஆனார். இதன்மூலம் தேசிய சப்-ஜூனியர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றார்.

2008-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தங்கம் வென்ற சத்தியன், அதில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 2011-ல் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல்முறையாக வெண்கலம் இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார். 2011, 2013-ம் ஆண்டுகளில் நடைபெற்ற 21 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சத்தியனின், அடுத்த இலக்கு ஒன்றல்ல, மூன்று. அதற்காக சமீபத்தில் ஜெர்மனியில் பயிற்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கும் சத்தியனை சந்தித்தோம்.

அது தொடர்பாக அவர் கூறுகையில், “2010-ல் ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தனி நபர் பிரிவில் வெண்கலம் வென்றதை இன்றளவும் மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கிறேன். இதில் நான் பட்டம் வெல்வதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சுஜய் ஹோர்கடே பட்டம் வென்றுள்ளார். அவர் காலத்தில் பெரிய அளவில் சவால்கள் இல்லை. ஆனால் நான் பட்டம் வென்றபோது சீனா, கொரியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்களின் கடுமையான சவாலை சந்திக்க வேண்டியிருந்தது. உலகின் 16-ம் நிலை வீரரை (சீனாவைச் சேர்ந்தவர்) வீழ்த்தி நான் சாம்பியன் ஆனதை என்றுமே மறக்க முடியாது.

கடந்த ஓர் ஆண்டாக சீனியர் பிரிவு போட்டியில் பங்கேற்று வருகிறேன். தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கிறேன். தற்போது 3 இலக்குகளை முன்னிறுத்தி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஒன்று தேசிய சீனியர் டேபிள் டென்னிஸில் சாம்பியன் ஆவது, மற்றொன்று காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பது, அடுத்தது பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்பது.

இந்த 3 கனவுகளையும் நனவாக்குவதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். சமீபத்தில் ஜெர்மனியின் ஆஷன் ஹாசனில் 3 வார பயிற்சியை முடித்தேன். அங்குள்ள டேபிள் டென்னிஸ் அகாதெமியில் ஒவ்வொரு வீரரின் தேவையையும் அறிந்து முறையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மிக அமைதியான சூழலில் அமைந்துள்ள அந்த அகாதெமியில் நவீன தொழில்நுட்பங்களும் வசதிகளும் உள்ளன. ஜனவரியில் நடைபெறவுள்ள தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வெல்லும் பட்சத்தில், காமன்வெல்த் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுவிட முடியும்” என நம்பிக்கையோடு பேசுகிறார் சத்தியன்.

தமிழக அரசின் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் இடம்பெற்றுள்ள சத்தியன், அமெரிக்கா, பிரேசில், எகிப்து போன்ற நாடுகளில் நடைபெற்ற ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் வாகை சூடியிருக்கிறார். தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் 19 பட்டங்களை கைப்பற்றியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x